உள்ளூர் செய்திகள்

உனக்காகவே நான்! (17)

முன்கதைச் சுருக்கம்: நி த்யாவிடம், அதிகமாக கோபப்பட்டுவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில், அவளிடம் மன்னிப்பு கேட்டான், சித்தார்த். சென்னையில் நடக்க இருந்த, திருமண வரவேற்புக்கு செல்ல வேண்டும், என்று கூறி, இந்த முறை, 'நானே, விமானம் ஓட்டப் போகிறேன்...' என்றான், சித்தார்த். இதைக் கேட்டதும், சித்தார்த் விமானம் ஓட்டக்கூடாது, தன் உள்ளுணர்வு எச்சரிக்கிறது, என்று , நித்யா கூற, அவளை சமாதானப்படுத்தினான், சித்தார்த். ''காப்பாத்த முடியாத வாக்கெல்லாம் நான் கொடுக்கறதில்ல. முதல்ல கிளம்புற வழியைப் பார்க்கலாம். போகும் போது, 'ஓரியன் ஷாப்பிங் மால்' போய், உனக்கும், எனக்கும், 'டிரஸ்' எடுத்துக்கலாம்.'' ''வீட்ல அத்தனை இருக்கு.'' ''அதெல்லாம், 'ரிசப்ஷன் டிரஸ்' இல்ல. 'எலிகன்ட்டா, ப்ளீஸிங்கா, டீசன்ட்டா' வர்றவங்க எல்லாரும் பேசற மாதிரி, 'டிரஸ்' எடுக்கணும்.'' இருவரும் பாட்டியிடம் சொல்லி கொண்டு கிளம்பினர். 'ஓரியன் மாலில்' அவன் கற்பனையில் இருந்த உடை கிடைக்காததால், நான்கைந்து, 'மால்' ஏறி இறங்கி, அவளது உடலின் நிறத்தோடு, ஒத்துப்போகிற இளம் ரோஜா நிற, 'மாடர்ன்' உடை வாங்கினான். ''ஐயய்யோ... இதை நான் எப்படி போட்டுப்பேன்? இதெல்லாம் போட்டு எனக்கு பழக்கமே கிடையாது.'' ''நீ போட்டுக்க வேணாம். சும்மா நில்லு போதும். நான் போட்டு விடறேன்.'' ''கடவுளே... வாயைத்திறந்தால் இதானா?'' என்றாள், நித்யா. ''உனக்குப் பிடிக்கலையா?'' என்று கேட்டான், சித்தார்த். ''எது?'' ''அதான்!'' ''அதான்னா?'' புரியாமல் கண்ணகலப் பார்த்தாள், அவள். ''ராத்திரி நடந்ததே அது.'' 'குறுகுறு'வென அவனைப் பார்த்தாள். ''அப்படிப் பார்க்காதே. சென்னை, 'டிரிப்பை, கான்சல்' பண்ணிட்டு, உன்னைத் துாக்கிட்டு வீட்டுக்குப் போயிடுவேன்.'' ''கடவுளே!'' ''அவரை ஏன் கூப்புடற. அவங்க எல்லாரும், பிஸி.'' ''அவங்களையெல்லாம் கூடவா வம்புக்கு இழுக்கறீங்க?'' ''அவங்க எல்லாருக்கும் குழந்தை இருக்கு தெரிஞ்சுக்க.'' ''கிருஷ்ணருக்கு இல்லையே.'' ''ஆனா, கிருஷ்ணர், 'என்ஜாய்' பண்ண மாதிரி யாரும் பண்ணல.'' ''சரி, வேற பேசலாம்,'' என்றாள், அவள். பெருமூச்சு விட்டான், அவன். '' சி க்கண்ணா, ஸீதா ஏர்போர்ட் ஹோகப்பா.'' அவள் கன்னடத்தில் பேசுவதை கேட்டு பிரமித்துப் போனான். ''சென்னைல இன்னிக்கு ராத்திரி எங்க தங்கறோம். ராஜாமணி வீட்லயா?'' ''சீ, நமக்கு தாஜ் ஹோட்டலில், 'ஸ்வீட் புக்' பண்ணியிருக்கு.'' ''ஸ்வீட்டா...'' என்று விழித்தாள், அவள். ''மக்கு, மக்கு, 'ஸ்வீட்'ன்னா பெரிய பெரிய ஹோட்டல்கள்ல 'அபார்ட்மென்ட்' மாதிரி, 'ரூம்' இருக்கும். அதுக்கு பேரு, 'ஸ்வீட்!' நிறைய பேர், 'சூட்'னு தப்பா சொல்லுவாங்க.'' ''ஓ... இதெல்லாம் எனக்குத் தெரியாது?'' ''எது தான் உனக்குத் தெரியும்? பட்டிக்காடு. பட்டிக்காடு,'' என்று செல்லமாக முன் தலையில் முட்டினான். இரண்டு பைலட்களும் தயாராக இருக்கையில் அமர்ந்திருப்பதை பார்த்ததும், விமானம் ஓட்டுகிற எண்ணத்தை கைவிட்டான். நித்யாவின் அருகிலேயே அமர்ந்தான். ''நித்தி, எனக்கு துாக்கம் வருது. துாங்கட்டுமா?'' என்று கேட்டான். ''துாங்குங்க,'' என்றாள். கண்களை மூடிய சிறிது நேரத்திற்கெல்லாம் துாங்கிப் போனான். சென்னையில் விமானம் இறங்கிய போது, இரவாகி இருந்தது. ரங்கநாதன், கார் அனுப்பியிருந்தார். பெங்களூருவிலிருந்து சென்னை வருவது சுலபமாக இருந்தது. ஆனால், மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து நுங்கம்பாக்கத்திலிருந்த, தாஜ் ஹோட்டலை அடைய நேரம் பிடித்தது. ' 'இப்ப நான் சொன்னது புரியுதா? 'ரோடு டிராபிக்' எப்படி இருக்கு பாரு. பெங்களூரிலிருந்து சென்னை எத்தனை சீக்கிரம் வந்துட்டோம். 'ஏர்போர்ட்'டிலிருந்து, ஹோட்டலுக்கு போக எவ்வளவு நேரமாகிறது பாரு. ரோட்டுல கார் ஓட்டுறதை விட, 'பிளைட்' ஓட்டுறது, ஈஸி.'' ''இருக்கலாம். ஆனா, நீங்க ஓட்ட வேண்டாம்,'' சட்டென்று சொன்னாள், அவள். ''ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கற?'' ''என் உள் மனசு சொல்றது. நீங்க, 'பிளேன்' ஓட்றது பயமா இருக்கு; வேணாம்ன்னு என் மனசு சொல்லச் சொல்லுது.'' ''சரி, விடு,'' என்றான். ''நீங்க விட்டுடுங்க.'' ''ஹோட்டல் வந்தாச்சு. அதை பத்தி அப்புறம் பேசலாம்.'' அறைக்கு வந்ததும், வெந்நீரில் நன்றாக குளித்தான். வெளிர் நீல நிற பைஜாமா உடை போட்டுக் கொண்டான். தான் எப்போதும் உபயோகிக்கும், 'இம்பீரியல் மெஜஸ்டி சென்ட்' அடித்துக் கொண்டான். மிதமான மெல்லிய வாசனை துாக்கிற்று. நித்யாவையும் குளித்து நைட்டிக்கு மாறச் சொன்னான். ''நைட்டியெல்லாம் எனக்குப் பழக்கமே இல்லை.'' ''நான் கூடத்தான் பழக்கமில்ல. இப்போ பழகிக்கல,'' என்று புன்னகைத்தான். இரவு உணவு, 'ஆர்டர்' பண்ணி அறைக்கு வரவழைத்தான். சாப்பிட்ட பின் இருவரும் சோபாவில் அமர்ந்தனர். அவள் மடியில் தலை வைத்துப் படுத்தவன் தன் மொபைல் போனைக் கொடுத்து, ''நித்யா, ராஜாமணிக்கு போன் பண்றியா?'' என்று கேட்டான். பண்ணினாள். ''ராஜு?'' ''நித்யா, எப்படி இருக்க?'' கேட்டபோதே, ராஜாமணியின் குரலில், அன்பும், பரிவும் தெரிந்தது. ''ரொம்ப நல்லா இருக்கேன், ராஜாமணி. இப்ப நாங்க இங்க தான் இருக்கோம்.'' ''எங்க?'' ''தாஜ் ஹோட்டல்ல...'' ''சென்னையிலையா?'' ''ஆமாம், அவர் பேசணும்ன்னு சொன்னார், குடுக்கட்டுமா?'' ''குடு, நித்யா.'' ''சித்தார்த்.'' ''ஹேய், ராஜ்,'' என்றான். ''இது என்ன புதுசா கூப்புடறீங்க?'' ''நீங்க என் பேர்ல இருக்குற, கவுதமை 'கட்' பண்ணினீங்க. நான் உங்க பேர்ல இருக்கற, மணியை, 'கட்' பண்ணிட்டேன்.'' இருவரும் சிரித்தனர். ''எப்ப வந்தீங்க?'' ''ரெண்டு மணி நேரம் முன்னால. நாளைக்கு, 'கிரிக்கெட் போர்ட்' ஏற்பாடு செஞ்சுருக்கிற, 'ரிசப்ஷன்' இருக்கு. சிதம்பரம் ஸ்டேடியத்துல. காலைல வீட்டுக்கு வர்றோம். 'இன்விடேஷன்' மற்றும் 'கார் பாஸ்' எல்லாம் கொண்டு வர்றேன். நித்யா வீட்டுக்குப் போய் அத்தை, சுசீலா எல்லாரையும் கூப்பிடலாம்.'' ''மறுபடியும் அங்க போகணுமா, சித்தார்த்?'' ''என்ன பேசறீங்க, ராஜாமணி. மாமா திட்டினதுக்காக அத்தையை விட முடியுமா? நித்யா மனசு கஷ்டப்படாதா? அவங்க வர்றாங்களோ, வரலையோ... நம்ம கடமையை நாம செய்யணும். திருவிழா மாதிரி நடக்கப் போகும், 'பங்ஷனுக்கு' அவர்களை கூப்பிடாமல் இருக்கலாமா?'' ''அதற்கு சொல்லல, சித்தார்த். மீண்டும், மாமா உங்களை அவமானப்படுத்தி, அசிங்கமாப் பேசிடப் போறாரென்ற பயம்.'' ''பேசட்டுமே... அப்படி பேசறது அவர் குணம். இப்படி நடந்துக்கறது நம்ம குணம்.'' ''சரி, எத்தனை மணிக்கு வர்றீங்க?'' ''ஷார்ப்பா, காலை 10:00 மணிக்கு அங்க இருப்பேன்.'' சொன்னது மாதிரி சரியாக, காலை 10:00 மணிக்கு வீட்டினுள் நுழைந்தனர், நித்யாவும், சித்தார்த்தும். ''அம்மா, எப்படி இருக்கீங்க?'' என்று, ராஜத்தையும், அப்பா சுந்தரேசனையும் பார்த்து கேட்டான். ''இனிமே உங்களை நான் அம்மா, அப்பான்னு தான் கூப்பிடப் போறேன். ராஜாமணிக்கு அப்பா - அம்மான்னா எனக்கும், அப்பா - அம்மா தானே.'' ''சந்தோஷம்ப்பா. எங்களுக்கும் ரெண்டு பிள்ளைங்களாச்சு,'' என்றார், சுந்தரேசன். ராஜத்தின் முகத்தில் சொல்லொணா சந்தோஷம் தெரிந்தது. அதற்குள் கார் டிரைவர் மிகவும் பணிவாக ஒரு சூட்கேசை கொண்டு வந்து, சோபாவின் நடுவில் இருந்த, 'டீ பாய்' மீது வைத்து திரும்பினான். ''என்ன இது? நாம் வரும்போது கொண்டு வரவில்லையே?'' என்று கேட்டாள், நித்யா. ''சர்ப்பிரைஸ்!'' என்றான், சித்தார்த் கவுதம். ''எனக்கு எந்த அளவுக்கு, 'சர்ப்பிரைஸ்' பிடிக்குமோ, அதே அளவுக்கு, 'த்ரில்' பிடிக்கும். இதெல்லாம் இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கை? மரமாக இருக்கலாம், மரக்கட்டையாக இருக்கக்கூடாது,'' என்றவாறு, சூட்கேசை திறந்தான். பட்டு வேட்டி, பட்டு சட்டை, பட்டு அங்கவஸ்திரத்தோடு உலகப் புகழ்பெற்ற கைக்கடிகாரப் பெட்டியை மேலே வைத்து, சுந்தரேசனைப் பார்த்தான். ''அப்பா, இது உங்களுக்கு.'' ''என்னப்பா இதெல்லாம்?'' என்று கேட்டார், அவர். ''கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் என்னை உங்க புள்ளையா ஸ்வீகாரம் செஞ்சீங்க... அதுக்குள்ள மறந்துட்டீங்களா?'' அந்த பதில் சொல்ல முடியாத கேள்விக்கு பின், சித்தார்த் கொடுத்ததை வாய் திறக்காமல் வாங்கிக் கொண்டார். அதேபோல் பட்டுப்புடவை, நீல 'வெல்வெட்' பெட்டியில் வைக்கப்பட்ட வைர நெக்லஸ் இரண்டையும், ராஜத்திடம் கொடுத்தான். ராஜாமணிக்கு எதுவும் கொடுக்காமல், எழுந்து நின்று இரு கைகளையும் நீட்டினான். நீட்டிய கரங்களுக்குள் வந்த, ராஜாமணியை சேர்த்து தன்னோடு அணைத்துக் கொண்டான். ''உங்களுக்குக் கொடுக்க என் மனசைத் தவிர பெரிசா ஏதுமில்லை, ராஜாமணி,'' என்ற போது, சித்தார்த்தின் குரல் கரகரத்து, கண்கள் லேசாகக் கலங்கின. அவனைத் தழுவிக் கொண்ட, ராஜாமணியும் குரல் உடையப் பேசினான்... ''இதைத்தவிர, இந்த அன்பைத் தவிர வேறு எதுவும் பெரிசில்லை. வேறு எதுவும் எனக்கு வேண்டாம்.'' ''பொருட்களால் ஆனவரில்லை, நீங்கள். மனதால் ஆனவர் என்பது எனக்கு தெரியும்.'' கண்களின் ஓரத்தில் துளிர்த்த நீரை யாரும் அறியாமல் துடைத்துக் கொண்டாள், நித்யா. சித்தார்த், நித்யா மற்றும் ராஜாமணி மூவரும் சேர்ந்தே, நித்யாவின் வீட்டுக்கு போயினர். காரிலிருந்து இறங்கும் போதே, சித்தார்த் அழகான நீல நிற சூட்கேசை கையில் எடுத்துக் கொண்டான். உள்ளே நுழைந்ததும், நந்தி மாதிரி எதிரிலேயே, நித்யாவின் அப்பா உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். காலடி சத்தம் கேட்கவே, முகத்திற்கெதிராக துாக்கிப் பிடித்திருந்த பேப்பரை தழைத்து பார்த்தார். எதிரில் நின்றிருந்த மூவர் அணி அவரைக் கொந்தளிக்க வைத்தது. ''ஏ, சுசீலா,'' என்று குரல் கொடுத்தார். ஹாலுக்கு வந்த, சுசீலாவின் முகம், எதிரில் நின்றிருந்தவர்களை பார்த்து மலர்ந்தது. கூடவே, காதை எட்டிய அப்பாவின் தடித்த குரல் அவளைத் தயங்க வைத்தது. ''வாசல் கதவை மூடுற பழக்கமே கிடையாதா? இப்படி திறந்து வச்சா வீட்டுக்குள்ள எது எதுவோ தான் நுழையும்.'' அவரின் கத்தல் கேட்டு சமையல் அறையிலிருந்து வந்த அம்மா, முகம் மலர்ந்தாள். ''வா, நித்யா, வாங்க சித்தார்த். வா, ராஜாமணி,'' என்று தனித்தனியாகவே வரவேற்றாள். ''இன்னிக்கு சிதம்பரம் ஸ்டேடியத்தில் எங்க கல்யாண, 'ரிசப்ஷன்' அத்தை. நான் கார் அனுப்பறேன். எல்லாரும் வந்துடுங்க. இந்தாங்க, 'இன்விடேஷன்' மாமா,'' என்று தங்கம் போல் 'தகதகத்த' அழைப்பிதழை அவரிடம் நீட்டினான், சித்தார்த். அதை அவர் கையை நீட்டி வாங்கிக் கொண்டது, அவனை மிகுந்த சந்தோஷப்படுத்தியது. ஆனால், அந்த சந்தோஷம் விநாடி நேரம் கூட நிலைக்கவில்லை. கையில் வாங்கிய அழைப்பிதழை கிழிக்க முயன்றவர், அது இயலாமல் போகவே இரண்டாய், நான்காய் மடித்து அவன் முகத்தின் மீது வீசி எறிந்தார். ஆனால், சித்தார்த் அதற்கு வருத்தப்படாமல் கசக்கப்பட்டு கீழே கிடந்த அழைப்பிதழை எடுத்து விரித்து, ''இந்தாங்கத்தை. நீங்க, சுசீலா, நாராயணன் மூவரும் வாங்க. பானுமதியை மறந்திட்டேன் பார்த்தீங்களா? அவளையும் கூட்டிட்டு வாங்க,'' என்றவன், கையிலிருந்த சூட்கேசையும் நீட்டினான். ''இதில், உங்களுக்கு, சுசீலாவுக்கு, நாராயணன், மாமா எல்லாருக்கும் 'டிரஸ்' இருக்கு. அத்தனைப் பேருக்கும் என்னால முடிஞ்ச சின்ன, 'கிப்ட்'டும் வெச்சிருக்கேன்.'' நீட்டிய, சூட்கேசை வாங்கப் போன அம்மாவை, அப்பாவின் கட்டைக் குரல் தடுத்து நிறுத்தியது. — தொடரும்- இ. ரங்கநாயகி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !