உள்ளூர் செய்திகள்

உங்க மனசு போல...

ஸ்ரீதருக்கு பெண் பார்க்கின்றனர், அம்மா மற்றும் இரண்டு சகோதரிகள். ஐந்து ஆண்டுகளாக பெண் பார்த்தும் எதுவும் பொருந்தி வரவில்லை.இன்று அநேகமாக நல்லபடியாக தேர்வு முடியும் என்ற நம்பிக்கை, அம்மா காந்தம்மாளுக்கு வந்து விட்டது.சொந்த வீடு, புகழ்பெற்ற வழக்கறிஞராக இருந்தாள், மணமகள். விரைவில் நீதிபதி ஆகும் வாய்ப்பு. வயது, 30. புகைப்படத்தில் பார்த்து தெரிந்த களையான முகம். பெயர், மலர்.ஓர் முடிவுக்கு வந்துவிட்டாள், காந்தம்மாள். மகள்கள் இருவரும், பெண் பிடிக்காதது மாதிரி பொறாமை உணர்வில் இருந்தனர். தன்னை விட, படிப்பு, பதவி, அழகு மற்றும் புகழ் வாய்ந்த பெண், தன் சகோதரனுக்கு அமைந்து விட்டால், இனி, பிறந்த வீட்டில் வேறுபாடு காட்டப்படும் என்ற எண்ணம் வந்து விட்டது. இதனால் தான், நல்ல பெண்களை எல்லாம் சரியில்லை என சொல்லி வந்தனர். மகள்கள் மனம் கோணக் கூடாது என, மணமகள் தேர்வு நிலையில் பின் வாங்கி வந்தார், காந்தம்மாள்.ஐ.டி., துறையில் நல்ல பதவியில் இருந்தான், ஸ்ரீதர். மாதம், இரண்டு லட்சத்துக்கு மேல் சம்பளம் வரும். ஊரார், உறவினர்கள் காந்தம்மாளையும், சகோதரிகளையும் மறைமுகமாக வசை பாடத் துவங்கினர். எனவே, இந்த இடத்தை முடிவு செய்து விட வேண்டும் என, மருமகளுக்காக காத்துக் கொண்டிருந்தாள், காந்தம்மாள்.ஹாலுக்கு வந்த, மணமகள் மலரை பார்த்து, அம்மா, மகள்கள் என, மூவரும் ஆச்சரியப்பட்டனர்.பட்டுச்சேலை, ஆபரணம், அலங்காரம் ஏதும் இன்றி, இயல்பாக எளிமையாக வந்து சோபாவில் அமர்ந்தாள். அனைவருக்கும் வணக்கம் சொன்னாள்.பின் வழக்கம் போல, மாறி, மாறி சம்பிரதாய சடங்கு பேச்சுக்கள் ஆரம்பமானது. ஆனால், இதில் நீண்ட நேர விசாரணைகள் இல்லை. வழக்கறிஞர், வருங்கால நீதிபதி என்ற பயமா?கேள்வி விசாரணைகளை சீக்கிரம் முடித்துக் கொண்டாள், காந்தம்மாள். வந்தவர்களை விசாரிக்கத் துவங்கினாள், மலர்.''அத்தே, ஏன் ஸ்ரீதரை அழைத்து வரவில்லை?'' என, புன்சிரிப்போடு கேட்டாள், மலர்.காந்தம்மாள் மற்றும் மகள்களான ஜெயா, மகா மூவரும் எதிர்பார்த்த கேள்வி தான் என்பதால், வழக்கம் போல சொல்வதை கூறினர்.''மலரு... என் பையன், என்கிட்டே தெளிவா சொல்லிட்டான். அம்மா, நீங்களும் அக்கா, தங்கச்சியும் சேர்ந்து முடிவு எடுத்து, எனக்கு சொல்லுங்கள். பிறகு, நான், பெண் பார்க்க வர்றேன்னு சொல்லிட்டாம்மா,'' என்றாள், காந்தம்மாள்.இதைக் கேட்டதும் கலகலவென்று சிரித்தாள், மலர். கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பு.மூவரும் திகைத்தனர். சிரிப்பை அடக்கி விட்டு பேசினாள், மலர்.''அத்தே, உங்க பிள்ளை, அம்மாவுக்கு அடங்கின புள்ளே. அம்மா, அக்கா, தங்கச்சி மேலே இவ்வளவு பாசமா இருக்கிறவரு. என் மேலே அதைவிட, 10 மடங்கு பாசமா இருப்பாரு, அத்தே. எனக்கு பிடிச்சிருக்கு. இனி, உங்க மனசுல என்ன இருக்குன்னு, நீங்க தான் சொல்லணும்,'' என, கலகலப்பாக, 'க்ளையன்ட்'களிடம் உரையாடும் வழக்கறிஞர் போல பேசினாள்.மூவர் முகமும் மலர்ந்தது.அம்மா காந்தம்மாள், முழு மன திருப்தியாகவும், மகள்கள் இருவரும், அரைமனதுடனும் சம்மதம் தெரிவித்ததும், சம்பிரதாயப்படி கை நனைத்துக் கொண்டனர். அதாவது, சிறிய விருந்து நடந்தது.விருந்து முடிந்து விடைபெற்றனர். அப்போது, அவர்கள் அருகில் வந்து, ''அத்தே, உங்க மனசு போலவும், உங்க பொண்ணுங்க மனசு போலவும் நடந்துக்குவேன். தைரியமா இருங்க,'' என, ஆறுதல் சொன்னாள், மலர். மூவரும் திருப்தியுடன் விடை பெற்றனர்.வீட்டிற்கு வந்த, காந்தம்மாவுக்கு இருப்பு கொள்ளவில்லை. காந்தம், மலரை இழுத்து கொண்டது. உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும், 'வாட்ஸ்-ஆப்' மற்றும் போன் மூலமாகவும், வீட்டுக்கு நேரில் வந்தவர்களிடமும் பெருமையாக பேசிக் கொண்டிருந்தாள், காந்தம்மாள்.அச்சமயம், 'காந்தா, அவள் பெரிய வக்கீல். கிரிமினல் லாயர் வேறு. பேச்சுலே ஜெயிச்சுடுவா. அவ சொன்னது கேட்டு மயங்கி நம்பிடாதே. வீட்டை ரெண்டா ஆக்கிடுவா. உன் பையன பிரிச்சுடுவா. 'உன் பொண்ணுங்க எல்லாம் உங்க வீட்டுக்கு வர முடியாது. உன் பையன் பெண்டாட்டிதாசனா ஆயிடுவான்...' என, ஒரு குண்டை துாக்கிப் போட்டாள், நாதமுனியம்மாள் என்ற சிநேகிதி.அவள், நாதமுனி அல்ல; நாரத முனியம்மாள் என்றே, உறவினர்கள் பட்டப் பெயர் வைத்திருந்தனர்.'போதும், நாரதமுனி உன் வாய மூடு. உனக்கு நல்லதையே பேச தெரியாதா?' என, ஆவேசமாக பேசினாள், காந்தம்மாள். காந்தம்மாளின் மனதை குழப்பிவிட்டுப் போய் விட்டாள், நாரதமுனி.ஒருவாரம் மனம் தவித்து கொண்டிருந்தவள், மருமகளுக்கு பூச்சூட்டி, பேசிவிட்டு வர நினைத்து, தன் மகள்களை அழைத்தாள், காந்தம்மாள். அவர்கள் அலட்சியமாக, 'நாங்கள் வரவில்லை. நீங்கள், உங்க மருமகளைப் பார்த்து கொஞ்சி பேசிட்டு வாங்க...' எனக் கூறி விட்டனர்.காந்தம்மாளுக்கு மனம் கலங்கி, கண்களில் நீர் தளும்ப ஆரம்பித்து விட்டது. நாரதமுனி சொல்லிச் சென்ற பின், முதல் நிகழ்ச்சியே பயமாக இருந்தது. இருந்தாலும், மனம் தளராமல், கிளம்பி விட்டாள்.கணவரை இழந்த காந்தம்மாள், பூ வாங்கி செல்ல அச்சப்பட்டு, தன் வீட்டு பணிப்பெண்ணை அழைத்து சென்றாள்.அன்று விடுமுறை நாள். பேப்பர் படித்துக் கொண்டிருந்த மலர், வருங்கால அத்தை வருவதை கண்டதும், எழுந்து வந்து வரவேற்றாள். காந்தம்மாளுக்கு சந்தோஷம். பணிப்பெண்ணிடம், பூவை எடுத்து, மலர் தலையில் சூட்டச் சொன்னாள். தடுத்த மலர், ''அத்தே, நீங்களே எனக்கு சூட்டுங்க. இதென்ன சம்பிரதாயம்? இனி, நீங்களே எனக்கு அத்தையும், மாமாவும்,'' எனக் கூறி, காந்தம்மாள் கையால் பூச்சூட்டிக் கொண்டாள்.காந்தம்மாளுக்கு இந்த சம்பவம் இரண்டாவது வெற்றி.''அத்தை, உங்க மகள்கள் இல்லாம நீங்க தனியா வந்திருக்கீங்களே... என்ன விஷயம்?'' என கேட்டாள்.தயங்கத்துடன், ''மனசு சரியில்லே,'' என்றாள், காந்தம்மாள்.மகள்கள் வராமல் தனியாக வந்திருப்பதால், அவருக்கு இருக்கும் மனக்குழப்பத்தை எளிதாக புரிந்து கொண்டாள், மலர்.தனக்கு ஏற்பட்ட குழப்பத்தை தீர்க்க, வருங்கால மருமகள் மலரிடமே விளக்கம் கேட்க வந்து விட்டாள், காந்தம்மாள்.''அத்தை, உங்க மனசு எப்படீன்னு எனக்கு தெரியும். உங்க குழப்பத்துக்கு ஒரு யோசனை சொல்றேன். கல்யாணத்துக்கு பின்னாடி நான், உங்க மனசு போலவும், உங்க பொண்ணுங்க மனசு போலவும் நடக்கணுமா, இல்லே என் மனசு போல நடக்கணுமான்னு சொல்லுங்க. நான் நடந்துக்கிறேன்,'' என்றாள், மலர்.அமைதியாக இருந்தாள், காந்தம்மாள்.மலர் தொடர்ந்தாள்...''அத்தை நீங்க கல்யாணம் ஆனதும், அந்த வயசுலே எப்படி இருந்தீங்களோ, உங்க பொண்ணுங்க திருமணம் ஆகி, முதல் மூன்று வருஷம் எப்படி இருந்தாங்களோ, அதே மாதிரி நான் இருக்கணுமா? சிந்திச்சுப் பாருங்கள். நான் போய் காபி போட்டு வந்திடுறேன்,'' எனக் கூறி, சமையல் அறைக்குப் போய் விட்டாள்.சிந்திக்க தொடங்கினாள், காந்தம்மாள்.காந்தம்மாள் திருமணம் ஆனதும், மாமனார், மாமியார், நாத்தனார் மற்றும் மைத்துனர்கள் யாருடனும் ஒட்டவில்லை. கூட்டுக் குடும்ப சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படவில்லை. குடும்பத்தில் உள்ளவர்கள் செய்வதும், பேசுவதும் ஒண்ணுக்கு இரண்டாக திரித்து கணவரிடம் பேசி, வம்பு செய்யத் துவங்கினாள்.கோபித்துக் கொண்டு, தாய் வீட்டில் ஓராண்டு தங்கி விட்டாள். பின், தனிக் குடித்தனம். சுயநலமாக கணவரை அடக்கி, ஒரு ஆண், இரண்டு பெண் குழந்தைகளை பெற்றெடுத்தாள்.கணவர், கார் விபத்தில் பலியான பின், போராடி பிள்ளைகளை வளர்த்து, சொத்துக்களை காப்பாற்றி, இரண்டு பெண்களுக்கு திருமணம் செய்தாள்.அந்த மகள்களும், முதல் மூன்றாண்டு, அம்மா செய்ததையே செய்தனர். அடிக்கடி தாய் வீடு வந்து தங்கி, மாமியார், நாத்தனார்கள் பற்றி புரளி பேசி விட்டுப் போவர். அம்மாவைப் போல் தனிக்குடித்தனம் சென்று விட்டனர்.எல்லா வீட்டிலும் நடக்கும் சம்பவம் என இருந்தவள், இன்று சிந்திக்க, சிந்திக்க தலை சுற்றுவது போல இருந்தது.'நம்ம மனசு போல, மருமகள் நடந்தா என் கதி என்னாவது? பிள்ளைகள் பாசம் என்னாவது? ஐயோ, என் மனசு போல வேண்டாம். அவ மனசு போல நடக்கட்டும். இனி கடவுள் விட்ட வழி...' என நினைத்துக் கொண்டாள், காந்தம்மாள்.கம கமவென்று மணம் வீசும், டிகிரி காபியை எடுத்து வந்தாள், மலர்.''அத்தை என்ன முடிவு செய்தீர்கள்? உங்க மனசா, என் மனசா?'' வினயத்துடன் கேட்டாள், மலர்.''மலர், என் மனுசு போல நடக்கிறதை காட்டிலும், உன் மனசு எப்படீன்னு சொல்லும்மா. அத்தை கொஞ்சம் கேட்டுக்கிறேன்,'' என, கெஞ்சலாக, பவ்யமாக கேட்டாள், காந்தம்மாள்.''அத்தே, ஐந்து கட்டளைகளை என் மனசுக்கு போட்டு வச்சிருக்கேன். ஒன்று, அழகான, பாசமுள்ள பொறுப்பான பிள்ளைய வளர்த்து, எனக்கு கணவரா கொடுத்த அத்தையை, ஆயுள் உள்ளவரை மறக்க மாட்டேன்.''ரெண்டு, தனிக் குடித்தனம் போக மாட்டேன். மூன்று, இரண்டு பக்க சொந்த பந்தங்களுக்கு மரியாதை கொடுப்பேன். நான்கு, அடிக்கடி எங்கம்மா வீட்டுக்கு போய், அத்தையை பற்றி குற்றம், குறை சொல்லி விமர்சனம் செய்ய மாட்டேன்.''ஐந்து, பலருக்கு மத்தியில் கணவரை விட்டுக் கொடுக்க மாட்டேன். இது தான் என் மனசு. உங்க மனசை பத்தி சொல்லுங்க,'' என்றாள், மலர். கண்ணீர் பொங்க, பேச முடியாமல் தவித்தாள், காந்தம்மாள்.பணிப்பெண்ணை வெளியே அனுப்பிவிட்டு, ''மலரு, உன் மனதை போல நடம்மா. அதுக்கு மேல என்னை ஒன்றும் கேட்காதே. சீக்கிரம் அடுத்த முகூர்த்தத்திலே திருமணம் நடக்கணும்மா,'' எனக் கூறிவிட்டு, மலரின் கைகளை பிடித்து, கண்ணீர் விட்டாள், காந்தம்மாள்.மலர் சொன்னது, வீட்டுக்கும், நாட்டுக்கும் தேவையானவை தான். எனவே, விரைவில், ஸ்ரீதருக்கும், மலருக்கும் திருமணம் முடித்து, தினசரி காலை, அவள் முகத்தில் விழிக்க வேண்டும் என, காந்தம்மாள் மனம் விரும்பியது.பெ. கிருஷ்ணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !