விண்ணையும் தொடுவேன்! (22)
முன்கதை சுருக்கம்: திருவண்ணாமலையிலிருந்து, சென்னை திரும்பிய புகழேந்தி, தலைமை செயலரையும், முதல்வரையும் சந்தித்து, தன் வேலையை ராஜினாமா செய்யும் முடிவை தெரிவித்தான். அடுத்து, குடிமை பயிற்சி மையம் ஆரம்பிக்க இருப்பதை தெரிவித்து, அவர்களது ஆசியைப் பெற்று, வீடு திரும்பினான். புகழேந்தியின் வாழ்வில் ஏற்பட்ட விரும்பத்தகாத சம்பவங்களைப் பற்றி மனம் வருந்தி புலம்பினாள், அவனது அம்மா. புகழேந்தியின் நண்பன் பிரபாகர் வரவே, அவனுடன் பேச சென்றான், புகழேந்தி. காற்று சிலுசிலுவென்று வீசியது. கூடு அடையும் பறவைகளின், 'கீச் கீச்' சத்தம், இசையாக தவழ்ந்து வந்தது. பின் மாலைப் பொழுது, இருள் சூழப் போவதை காட்டியது. அஸ்தமன சூரியன், வானத்திற்கு செங்காவி தீட்டியது. வளைந்து தழைத்திருந்த மாமரத்துக் கிளையை ஒட்டி, மொட்டை மாடி கைப்பிடிச் சுவரின் மீது அமர்ந்திருந்தனர், புகழேந்தியும், பிரபாகரும். ''ரொம்ப நாளைக்கப்புறம் நம் இடத்தில் வந்து உட்கார்ந்திருக்கிறோம்,'' என, பேச்சை ஆரம்பித்தான், பிரபாகர். மவுனமான புன்னகையில் அதை ஆமோதித்தான், புகழேந்தி. ''உனக்கு, 'ரூட்' கிளியர் ஆகிவிட்டது இல்லையா, புகழ்?'' ''எதைச் சொல்கிறாய், பிரபா.'' ''மறைமுகமாக அம்மா ஓ.கே., சொல்லிவிட்டார்கள் பார்த்தாயா?'' ''நான் முதல்வரை சந்தித்ததையும், தலைமைச் செயலரை சந்தித்ததையும் பற்றியல்லவா கேட்கப் போவதாக நினைத்தேன்.'' ''அதற்காகத்தான் வந்தேன். ஆனால், அம்மாவின் பேச்சு திசை திருப்பி விட்டது.'' ''இன்றைய தினம் நெகிழ்ச்சியான தினம், பிரபா.'' ''என்ன நடந்தது. ஒவ்வொன்றாக சொல்லேன்.'' ஆரம்பத்திலிருந்து கோர்வையாக சொல்லி முடித்தான், புகழேந்தி. குறுக்கிடாமல் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த, பிரபாகர், ''நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி, புகழ்,'' என்றான். ''நிச்சயமாக. யாருக்கும் கிடைக்காத அப்பா, அம்மா, கர்ணன் மாதிரியான நண்பன், வழிகாட்டும் ஆசானாகத் தலைமைச் செயலர், ஆதரவாக பேசும் முதல்வர்... இத்தனையும் வேறு யாருக்கு கிடைக்கும்?'' ''உண்மை தான், புகழ். இன்னும் ஒருவரை விட்டு விட்டாயே!'' ''யார், பிரபா?'' ''நீ தேடிய ஆத்ம துணை. கயல்விழி!'' பெருமூச்சு விட்டான், புகழேந்தி. ''இந்த பெருமூச்சுக்கு என்ன அர்த்தம்?'' ''சாதாரணப் பெண்ணில்லை, கயல்விழி. ரொம்பவும் வித்தியாசமானவளாக இருக்கிறாள். அவளுக்கு நேர்ந்த இழப்புகளுக்கெல்லாம் வேறு ஒரு பெண்ணாக இருந்தால், இடிந்து போயிருப்பர். அழுது புலம்பி அட்டகாசம் செய்திருப்பர். தாங்க முடியாமல் தற்கொலைக்குக் கூட வழி தேடி இருப்பர்.'' ''அந்த மாதிரி பெண் இல்லை என்பதால் தானே, ஆத்ம துணை என்ற அளவிற்கு பேசுகிறோம்.'' ''அது சரி தான். ஆனால், வெறும் துணையா, ஆத்ம துணையா என்பது தெரியவில்லையே. எதிர்பாராத பிரச்னைகள் மாறி மாறி வந்து, என்னை அடித்து போட்டு விட்டது.'' ''அத்தனையையும் சமாளித்து, வீழ்வேன் என நினைத்தாயோ என, எழுந்து நின்று விட்டாயல்லவா,'' என்றான், பிரபா. ''எங்கே நின்றேன்; நிற்கப் பார்க்கிறேன்.'' ''அழுத்தமாக காலுான்றி விட்ட பின், நிற்பதை பற்றி கவலை ஏன்? முதல்வர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். தலைமைச் செயலர் ஆசீர்வதித்திருக்கிறார். வேறு என்ன வேண்டும். உன் ஐ.ஏ.எஸ்., அகாடமி, அறிவு சார்ந்த நல் அதிகாரிகளை உருவாக்கப் போகிறது, பார்.'' ''எல்லாவற்றுக்கும் மேல், தோள் கொடுக்கத் தோழன் நீ இருக்கிறாய் எனக்கென்ன கவலை?'' ''புகழ்,'' என, கீழேயிருந்து, அப்பா கூப்பிட்டது கேட்டது. இருவரும் கீழே இறங்கி வந்தனர். பிரபாகரை கண்டு முகம் மலர்ந்தார், புகழேந்தியின் தந்தை. ''எப்ப வந்த, பிரபா?'' ''அப்பவே வந்திட்டேன். நீங்க துாங்கிக்கிட்டு இருந்தீங்க.'' ''புகழ் என்ன சொன்னான்? ரொம்ப மனசு உடைஞ்சுப் போயிட்டானா?'' ''யாருடைய மகன் அவன். மனசு உடையும்படியாகவா வளர்த்திருக்கீங்க! புகழ் எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும்ன்னு உங்களுக்கு தெரியும்.'' ''இருந்தாலும் உன்கிட்ட பேசற மாதிரி, என்கிட்ட பேச்சு வருமா?'' ''என்னை விட நீங்க தான் உற்ற தோழர். நான் நாளை வரேன்.'' பி ரபாகர் போனதும், புகழேந்தியை ஏறிட்டார், அப்பா. ''ரொம்ப களைச்சு போன மாதிரி தெரியறியேப்பா. கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளேன்.'' ''இல்லப்பா... ஒரு வழியா ராத்திரி படுக்கறேன். இப்ப உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்.'' இருவரும் பிளாஸ்டிக் நாற்காலியை வசதியாக நகர்த்தி போட்டு அமர்ந்தனர். சமையலறை கதவருகிலிருந்து எட்டிப் பார்த்தார், பெரியவர். ''என்னங்க பெரியவரே?'' அப்பா தான் கேட்டார். ''துாங்கி எழுந்திரிச்சு வந்திருக்கீங்களே! சூடா காபியோ, டீயோ போடட்டுமா?'' ''காபி இந்த வீட்டுல பழக்கமில்ல. டீ தான்.'' ''அப்ப டீ கொண்டு வரட்டுமா? கூட பஜ்ஜி, வடை, போண்டா ஏதாச்சும்?'' ''இப்படி செய்து கொடுத்து பழக்கப்படுத்தி, ஒரே மாசத்துல எங்களை மாத்திடாதீங்க. வெறும் டீ போதும்.'' ''சரிங்கய்யா. சின்னய்யா உங்களுக்கு?'' ''அரை கப்.'' பெரியவர் நகர்ந்ததும், புகழேந்தியை ஏறிட்டார். ''என்னப்பா பார்க்கறீங்க?'' ''ஒண்ணுமில்ல.'' ''சொல்லுங்கப்பா.'' ''செய்தித்தாள் மற்றும் 'டிவி' எல்லாம் பார்த்த போது, ரொம்ப சங்கடமா இருந்துச்சு, புகழ். உனக்கு போய் ஏன் இப்படியெல்லாம் நடக்குதுன்னு தோணிச்சு. இவ்வளவு நல்லவனா இருக்குற உனக்கு, ஆண்டவன் கொஞ்சம் நல்லது செஞ்சிருக்கலாம்.'' ''என்னப்பா சொல்றீங்க? ஆண்டவன் நிறையவே நல்லது செஞ்சிருக்கான். உங்களை மாதிரி ஒரு அப்பா, அம்மா மாதிரி ஒரு அம்மா. பிரபா மாதிரி தோழன். இதெல்லாம் யாருக்கு கிடைக்கும்?'' ''கயல்விழியையும், பெரியவரையும் விட்டுட்டியே புகழ்?'' என, கேட்டபடி வந்தாள், அம்மா. ''எழுந்திட்டியாம்மா. வந்து உட்காரும்மா. அப்பா கிட்ட பேசும்போது, நீயும் கூட இருந்தா நல்லதுன்னு நினைச்சேன்.'' ''அதான் வந்துட்டனே,'' என, வந்தமர்ந்தாள், அம்மா. நான்கு கோப்பை டீ எடுத்து வந்தார், பெரியவர். மூவரும் எடுத்துக் கொண்ட பின், நான்காவது கோப்பையை பார்த்து, ''இது யாருக்கு?'' என்றார், அப்பா. ''சின்னம்மாவுக்கு,'' என்றார், பெரியவர். ''சின்னம்மாவா?'' என, அயர்ந்து போய் பார்த்தார், அப்பா. ''கயல்விழியைச் சொல்றார். உங்க வாய் முகூர்த்தம் அப்படியே நடக்கட்டும் பெரியவரே! எடுத்து போய் கொடுங்க,'' என, முகம் மலர்ந்தாள், அம்மா. அவர் போனதும் சற்று அழுத்தமான குரலில் கேட்டார், அப்பா. ''என்ன லட்சுமி இது? நீ பாட்டுக்கு பொறுப்பில்லாமல் பேசுற? இப்பத்தான் எதிர்பார்க்காத அடியெல்லாம் வாங்கிட்டு வந்திருக்காங்க ரெண்டு பேரும். அந்த ரத்தக்காயம் கூட இன்னும் ஆறல. அதுக்குள்ள நீ இன்னொன்றைப் பற்றி பேசுற?'' ''அந்த காயத்துக்கு மருந்து தான் சொல்றேன்.'' ''என்ன புகழ்?'' என, அவனை ஏறிட்டார், அப்பா. ''மறைக்காமல் மனசில் இருப்பதை சொல்லவாப்பா?'' ''சொல்லு, புகழ்?'' ''அம்மா சொல்ற மாதிரி, அந்த மருந்து கிடைத்தால் நிச்சயம், என் மனசுக்கு ஆறுதலா இருக்கும்ப்பா. நான் பட்ட வலியும், வேதனையும் குறையும்ப்பா.'' ''உன்னை விட அந்த பெண் நிறைய மிதிபட்டு, ரணப்பட்டு போயிருக்கே, புகழ்.'' ''அதனால் தான் சொல்றேன்ப்பா. அவளுக்கு நானும், எனக்கு அவளும், ஒருவருக்கொருவர் மருந்தாக இருப்போம் என, தோன்றுகிறது.'' ''அந்த பொண்ணுகிட்ட பேசிட்டியா? அவ என்ன நினைக்கிறான்னு தெரிய வேணாமா?'' ''இன்னும் பேசலப்பா.'' ''ரொம்ப ஜாக்கிரதையா பேசு, புகழ். ஏற்கனவே நொந்து போயிருக்கிற, பெண். உன் வார்த்தைகள் அவளை மேலும் நோகடிச்சிடக் கூடாது.'' ''சரிப்பா.'' ''இதைத்தான் பேசணும்ன்னியா, புகழ்?'' ''இல்லப்பா. நான் பேச நினைச்சது, என் எதிர்காலம் பற்றி. வேலை பற்றி.'' ''சொல்லு, புகழ்.'' முதல்வர் மற்றும் தலைமைச் செயலரை சந்தித்து, அவர்களிடம் பேசியது அனைத்தையும் சொன்னான். தான் ஆரம்பிக்கப் போகும் குடிமைப் பயிற்சி மையம் பற்றி விளக்கினான். அமைதியாக கேட்டுக் கொண்டார், அப்பா. ''ஐ.ஏ.எஸ்., அகாடமி ஆரம்பிக்க வேண்டுமென்றால் பணம் எவ்வளவு தேவைப்படும்?'' சொன்னான். மவுனமாய் எழுந்து போனவர், இரும்பு பீரோவைத் திறந்து, வீட்டுப் பத்திரத்தை கொண்டு வந்து நீட்டினார். ''அ... ப்... பா...!'' என, அதிர்ந்தான். ''என்ன புகழ்? இப்படி அதிர்ச்சியோடு பார்க்கற? வீட்டை விற்கச் சொல்லல. வங்கி கடனுக்கு, 'செக்யூரிட்டி' கேட்பர். இதை, 'செக்யூரிட்டி'யாக வைத்து, தேவைக்கேற்ற பணத்தை வாங்கிக் கொள்.'' கண்கலங்கினான், புகழேந்தி. அவர் கண்களும் கலங்கின. ''இதுவரை நான், உனக்கு பெரிசா எதுவும் செய்யல. படிச்சதெல்லாம் உன் திறமையிலும், 'ஸ்காலர்ஷிப்'பிலும் தான். டிபன் பாக்ஸ் எடுத்துக்கிட்டு ஸ்கூட்டில வேலைக்குப் போய் விட்டு வரும் அப்பாவால் செய்ய முடிஞ்சது இது தான்.'' ''ஒரு நேர்மையான மனிதர் செய்ய முடிந்ததை, நீங்கள் செய்திருக்கீங்க. நல்ல அப்பாவாக இப்போ இதை நீங்க எனக்கு தர்றீங்க.'' ''பிரபா சொன்ன மாதிரி நீ, என் மகன். என்கிட்ட என்ன நேர்மை இருக்கோ அது, உன்கிட்டேயும் இருக்கும். தைரியமாக ஆரம்பி, புகழ். உன் அறிவும், ஆற்றலும் எங்கும், எப்போதும் உனக்கு கைக்கொடுக்கும்.'' எழுந்து நின்றான், புகழேந்தி. ''அம்மா, நீங்க இப்படி வந்து அப்பா பக்கத்துல நில்லுங்க. ரெண்டு பேரும் மனசார என்னை வாழ்த்துங்க.'' அவர்களை வணங்கி, ஆசீர்வாதத்துடன் வீட்டுப் பத்திரத்தைப் பெற்றுக் கொண்டான். ''கூடிய விரைவில் இதை மீட்டு உங்களிடம் கொடுப்பேன், அப்பா,'' என்றபோது, புகழேந்தியின் குரல் கரகரத்து, கண்கள் மெல்ல கசிந்தன. அ ந்த வீட்டின் முன் பக்கத்தை விட, பின்புறக் கொல்லை மிகவும் அழகாக இருப்பதாக நினைத்தாள், கயல்விழி. சின்ன வீடு தான். ஆனால், தோட்டமும், துரவுமாக என்பரே அப்படி இருந்தது. முன் பக்கம் சிவப்பு நிற மண் தொட்டிகளில் வைக்கப்பட்டிருந்த செடிகளின் பசுமை என்றால், பின்புறக் கொல்லை மா, பலா, வாழை மற்றும் தென்னை மரங்களால் ஆன பசுமை. கூடவே ஆங்காங்கே பந்தல் போட்டுப் படர விட்டிருந்த மல்லிகை, முல்லைக் கொடிகள். குண்டு மல்லிகைச் செடியின் மொட்டுகள் விரிந்து, பெரிதாய் மலந்து, குப்பென்று மணம் வீசியது. கிணறும், ராட்டினமும், தாம்பு கயிறும் கயிற்றின் நுனியில் கட்டப்பட்டு, கிணற்றின் கைப்பிடிச் சுவர் மீது இரும்பு வாளி வைக்கப்பட்டிருந்தது. அருகில், செவ்வக சிமென்ட் தொட்டியில் நிரப்பப்பட்டிருந்த நீரும், துணி துவைக்கிற கல்லும், உபயோகப்படுத்தப்படும் நீர் வீணாகாமல் செடிகளுக்கும், மரங்களுக்கும் பாய்கிற வகையில் வெட்டப்பட்டிருந்த கால்வாயும், கயல்விழியை மிகவும் கவர்ந்தன. சென்னை போன்ற நகரத்தில் முற்றிலும் பழமை மறந்து விடாமல், இப்படி ஒரு வீடா என, ஆச்சரியப்பட்டாள். ''என்ன சின்னம்மா இங்க வந்து உட்கார்ந்திருக்கீங்க?'' துணி துவைக்கும் கல் மீது உட்கார்ந்திருந்த, கயல்விழி, பெரியவரின் குரல் கேட்டு திரும்பினாள். ''இந்த இடம் ரொம்ப அழகாயிருக்கு, பெரியவரே.'' ''அழகு இடத்துல இல்ல சின்னம்மா. வீட்ல உள்ளவங்க மனசுல இருக்கு.'' 'அட நாம் நினைத்ததையே இவர் சொல்கிறாரே...' என, ஆச்சரியம் ஏற்பட்டது, கயல்விழிக்கு. ''துாங்கலியா சின்னம்மா?'' ''பகலில் கொஞ்சம் படுத்தேனில்ல. அதான் இப்ப துாக்கம் வரல.'' அவளெதிரில் வந்து தரையில் உட்கார்ந்து கொண்டார், பெரியவர். சில விநாடிகள் இருவரும் மவுனமாக இருந்தனர். -தொடரும்இந்துமதி