யாவும் சில காலமே!
சங்கொலியும், பேண்டு வாத்தியமும், ஊதுபத்தி மற்றும் பூக்களின் வாசமும் கலந்து அந்த தெருவை நிறைத்திருந்தது. வார இதழ் ஒன்றை புரட்டிக் கொண்டிருந்த புனிதாவை, சிறு கோபத்துடன் பார்த்தான், பூபதி. ''ஏன்க்கா இப்படி இருக்கே? ரெண்டு வாரம் முன்னாடி உடம்பு சரியில்லாமல் கிடந்ததெல்லாம் மறந்து போச்சா? காலையிலிருந்து ஒண்ணுமே சாப்பிடல. சாப்பிடச் சொன்னாலும், 'பிகு' பண்ணிக்கறே? 10 வீடு தள்ளி தானே இறப்பு வீடு. எடுக்கிற வரைக்கும் சாப்பிட மாட்டேன்னா என்ன அர்த்தம்?'' ''அந்த, துரைசிங்கம் அண்ணனுக்கு நான் செலுத்துற அஞ்சலி,'' என்றாள், புனிதா. ''யக்கோவ்! துரையோட மகள், மருமகள் எல்லாம், வீட்டு பின்கட்டுல போய் சாப்பிடுறாங்க. இந்த காலத்துல போய்,'' என்றான் பூபதி. புனிதா வீட்டின் வேன், ஆட்டோ டிரைவர். புனிதாவின் வலது கை, எல்லாம் பூபதி தான். ''ப்ச், யார் எப்படியோ? ஆனா, நான் அப்படி இல்லை. இது, என் வீட்டுப் பெரியவங்க சொல்லிக் கொடுத்த பழக்கம். சொந்தக்காரங்களோ, ஒரே தெருவைச் சேர்ந்தவங்களோ, யாராவது இறந்துட்டா, 'பாடி' எடுக்கற வரைக்கும் சாப்பிட மாட்டோம். இந்த, துரை அண்ணன் நம்ம வீட்டை கடந்து போகும் போதெல்லாம், 'சாப்பிட்டியாம்மா'ன்னு ரெண்டு வார்த்தை பேசாம போகாது. போடா, உனக்கு பசிச்சா நீ போய் சாப்பிட்டு வா!'' என்றாள். ''ஆமா, எனக்கு பசிக்குது,'' என்று சொல்லி, தன், 'டூ-வீலரை' நோக்கி சென்றான், பூபதி. வா சலில் படுத்து கிடந்த நாயை தலையை வருடி கொடுத்து கொண்டிருந்த, புனிதாவின் முகத்தில் கவலை. ''டேய் பூபதி, டைகரை வந்து பாருடா. எதை சாப்பிட்டாலும் வாந்தி எடுக்கிறான். மூணு நாளா சரியா நடமாட்டம் இல்லை. நீ ஆட்டோவுல மருத்துவமனைக்கு கூட்டிட்டு போய், ஒரு ஊசி போட்டு வாடா.'' ''அநியாயத்துக்கு நல்லவளா இருக்கே நீ. அதான்...'' என்று இழுத்தான். ''என்ன சொல்ல வர்றே? அதான், புருஷன் ஏமாத்திட்டு போயிட்டான்னு சொல்ல வரியா?'' ''அக்கா!'' ''போடா... அதனால் நான் என்ன செத்தா போயிட்டேன்? ஒத்தையாளா என் பொண்ணுங்களை வளர்த்து, படிக்க வச்சு ஆளாக்கி, கல்யாணமும் பண்ணி கொடுத்துட்டேன்.'' சாமானியப் பெண்களுக்கு தன்னம்பிக்கையும் அதிகம்; மனசில், ஈரமும் அதிகம். அன்பிற்காக தங்கள் சுய கவுரவத்தை விட்டு, பல படிகள் இறங்கி வரவும் தெரியும். அதனால் தான், அவர்கள் வாழும் இடங்களில் விதை போடாமலே செடிகள் முளைக்கின்றன. 'பு னிதா ப்ரீசர் பாக்ஸ், ஷாமியானா பந்தல், சேர்... வாடகைக்கு விடப்படும்!' வீட்டை ஒட்டிய ஓடு வேய்ந்த மற்றொரு வீட்டின் முகப்பில் பளீச்சென்று வைக்கப்பட்டிருந்தது போர்டு. புனிதா அங்கிருந்து வெளியே வந்தாள். ''டேய் பூபதி'' அழைத்தாள், புனிதா. ''இதோ வந்துட்டேன்,'' அவள் முன் வந்து நின்றான், பூபதி. ''என்னடா உள்ளே போனாலே ஒரே நாத்தம். மனுஷனோட பிண நாத்தம் தாங்க முடியல. இந்த 'ப்ரீசர் பாக்ஸ்' முழுக்க சென்ட் அடிடா.'' ''ஆமாங்கா... போன வாரம் செத்தானே, பாலன்!'' ''யாரு குமுதா வீட்டுக்காரன், லாரி டிரைவர் குடிச்சிட்டு ஆந்திராவுல ஏதோ ஒரு குட்டையில விழுந்து செத்துப்போனானே!'' ''அவனே தான். பாடி அழுகி இருந்தது. அப்பவே, பாக்ஸ்ல சென்ட் ஊத்தி தான் கழுவினேன். இன்னும் நாத்தம் போகலையா?'' ''இங்கே வரைக்கும் வருது பாரு நாற்றம். தெருவுல யாரும், 'கம்ப்ளைன்ட்' பண்றதுக்கு முன்னாடி, சரி பண்ணிடு.'' ''பண்றேன்க்கா. சொல்ல வந்ததை மறந்துட்டேன் பாரு. நம்ம எம்.எல்.ஏ., சம்சாரம் இறந்துட்டாங்களாம். வி.ஐ.பி., பாக்ஸ் கேட்டாங்க.'' ''எடுத்துட்டு போ. பணம் வாங்கிடணும். '' ''அந்த ஆள் அரசியல்வாதி. ஓசியிலேயே வாழ்றவர். நாமளும் பொழைக்கணும் இல்லையா. பகைச்சிக்க வேண்டாமே?'' ''எம்.எல்.ஏ., வீடுன்னா சும்மா துாக்கி கொடுத்துடணுமா? நான் எதுக்காகவாவது அவங்க வீட்டு வாசல்ல போய் நின்னேன்னா?' ''ரெண்டு மாசம் முன்னாடி விநாயகபுரத்தில் இருந்த, வேலம்மா செத்தப்ப பத்து பைசா கூட வாங்கிக்காம, ப்ரீசர் பாக்ஸ், பந்தல், சேர்ன்னு எல்லாத்தையும் இலவசமாக கொடுத்தியே... அந்த பொம்பளை என்ன, வி.ஐ.பி.,யா?'' ''உனக்கென்னடா தெரியும். அந்தம்மாவை பத்தி? ஒரு காலத்துல அந்தம்மா பெரிய பைனான்சியர். சுற்றுவட்டார ஏரியா முழுக்க அந்த அம்மாகிட்ட காசு வாங்காதவங்க யாரும் இல்லை. ஸ்கூலுக்கும், காலேஜுக்கும், பீஸ் கட்ட அவசரத்துக்கு அந்த அம்மா தான் பேங்க்! ''நானும், ரெண்டு குழந்தைகளோட வெறும் கையோட இந்த ஏரியாவுக்கு வந்தப்ப, வேலம்மா தான் எனக்கு தெய்வமா நின்னாங்க. இதோ இந்த, 'ப்ரீசர் பாக்ஸ்' தொழிலை நடத்திக்கிட்டிருந்த, லாசர் அண்ணன் விலைக்கு விற்கிறார்ன்னு தெரிஞ்சதும், வேலம்மா தான், 'இதை நீ வாங்கி நடத்து'ன்னு, 'ஐடியா' கொடுத்துச்சு. அந்த அம்மா கொடுத்த, 'ஐடியா' தான், இன்று என்னை கவுரவமா வாழ வெச்சிட்டு இருக்கு. கா லையில் எழும் போதே, புனிதாவுக்கு தலைசுற்றல் அதிகமாக இருந்தது. பிரஷருக்கு சரியாக மாத்திரை எடுத்து வந்தாலும், அடிக்கடி இப்படி தலைசுற்றல் வந்து கொண்டு தான் இருக்கிறது. பெரிய மகள் வர்ஷா மதுரையில் வாழ்கிறாள். இரண்டாவது குழந்தை உண்டாகி இருக்கிறாள். அவளைப் போய் பார்ப்பதற்கு கூட, உடம்பு ஒத்துழைப்பதில்லை. சின்னவள், சிங்கப்பூரில் நிம்மதியாய் கணவன், குழந்தையுடன் வாழ்கிறாள். தினமும் வீடியோ காலில் வந்து விடுவாள். நேற்றும் கூட பேசும் போது, 'ரொம்ப டல்லா தெரியறேம்மா. உன் தொழிலை எல்லாம் மூட்டை கட்டி விட்டு என்னோட வந்து விடு...' என்று பாசமுடன் சொன்னாள். சங்கடத்துடன் மறுத்து விட்டாள், புனிதா. தனிமை வாழ்க்கை அவளுக்கு பழகி விட்டது. யாராவது சூடாக ஆவி பறக்க மணக்க மணக்க ஒரு காபி போட்டு தந்தால், கோவில் கட்டி கும்பிடலாம் என்பது போல் ஆயாசமாக இருந்தது. கிச்சனுக்கு செல்ல மனம் வரவில்லை. அதே தெருவில் ஒரு டீக்கடை உண்டு. யாரையாவது அனுப்பி, டீயோ, காபியோ வாங்கி குடிக்கலாம் என்ற எண்ணத்தில் வாசலுக்கு வந்தவள், பைக்கில் பறந்த ஜோடியை பார்த்து ஏக்க மூச்சு வெளிப்பட்டது. அந்த அந்நியோன்யம் அவளுக்குமே வாய்த்தது, ஒரு காலத்தில்! இளங்கோ, அவளை இதயத்தில் சுமந்தபடிதான் அலைந்தான். இருவருமே பழனியை சேர்ந்தவர்கள் தான். ஒரே ஏரியா. இவள் முழுதாய், பத்தாவது கூட தாண்டவில்லை. இளங்கோ டிகிரியை முடித்து, வேலை தேடியபடி, இவளையும் காதலித்து கொண்டிருந்தான். வழக்கம்போல இருவர் வீட்டிலும் பேய் முகத்தை காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இ ளங்கோ வீடு ஓரளவு வசதியானது தான். ஒரே மகன்! ஊரை விட்டு ஓடி வந்து கல்யாணம் பண்ணி சென்னையில் அடைக்கலம் ஆயினர். தன்னை நம்பி வந்தவளை இமைக்குள் வைத்து பார்த்து கொண்டான், இளங்கோ. அவன் படிப்பிற்கும், ஸ்டைலான இங்கிலீஷிற்கும் நல்ல வேலை கிடைத்தது. இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்தது. தேவதைகள் நடமாடும் வீட்டில் மகிழ்ச்சி அளவின்றி கொட்டிக் கிடந்தது. அந்த சமயத்தில் தான், விஜயாவினுடனான பழக்கம், இளங்கோவுக்கு ஏற்பட்டது. கணவனைப் பிரிந்து இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த, விஜயா அவனுடைய ஆபீஸில் பணிபுரிந்தவள். சந்தர்ப்பமோ, சூழ்நிலையோ... ஏதோ ஒன்று அவளுடன் நெருக்கமாய் பழக, விஜயாவின் உறவினர்கள் கதவை பூட்டி தெருவாசிகளின் முன் அவர்களை தலை குனிய வைத்து, பஞ்சாயத்து பண்ணி, அவனை அப்போதே தாலி கட்ட வைத்து விட்டனர். இரண்டு குழந்தைகளுடன் தனித்து விடப்பட்ட, புனிதா அவனுடன் ஒரு வார்த்தை கூட பேசாமல், அவன் முகத்தை கூட பார்க்காமல் குழந்தைகளுடன் வெளியேறினாள். இருபது ஆண்டுகள் ஓடித்தான் போய் விட்டது. தலைச்சுற்றலோடு இப்போது தலைவலியும், மன வலியும் வந்து சேர்ந்தது. பூ பதியின் முகம் பரபரப்புடன் காணப்பட்டது. ''பூபதி, கண்ணபிரான் வீட்ல நேத்தே காரியமெல்லாம் முடிஞ்சிடுச்சு. இன்னும் சேர் , பந்தல் எல்லாம் வரவில்லையே.'' ''வரும்க்கா.'' ''நீ ஏன்டா ஒரு மாதிரியா இருக்கே? உன் மாமாவுக்கு, 'கேன்சர்'ன்னு, மருத்துவமனைக்கு, பார்க்க போயிருந்தியே... இப்ப எப்படி இருக்கார்?'' ''அவரை விடுக்கா. நான் பாப்பாவோட அப்பாவை பார்த்தேன்.'' ''பாப்பாவோட அப்பாவா? யாரை சொல்றே?'' புனிதாவின் முகம் சுருக்கிட்டது. ''உன் வீட்டுக்காரர் தான்.'' ''என்னது? என் வீட்டுக்காரனா? அப்படி யாரும் எனக்கு இல்லையே,'' என்றாள், கோபமாக. ''பாவம்க்கா அவரு!'' ''டேய், முதல்ல அந்த ஆளு யாருன்னே உனக்கு தெரியாது. நீ, பார்த்தது கூட இல்லை.'' ''பார்த்ததில்லை தான். ஆனா, இப்ப பார்த்துட்டேன். ஹாஸ்பிட்டல்ல, 'கே ன்சர்' வார்டுல. என் மாமாவோட பக்கத்து பெட்ல தான் இருந்தாரு. ஆள் பார்க்க ரொம்ப மெலிந்து, யாருமில்லாம படுத்துட்டு இருந்தாரு. அவரோட மொபைல் போன் அடிச்சுட்டே இருந்தது. எந்திருச்சு எடுக்க கூட முடியாம சிரமப்பட்டாரு. ''அதை, நான் தான் எடுத்து கொடுத்தேன். அப்பதான் அந்த மொபைலின் ஸ்கிரீனில், உ ங் க ரெண்டு பாப்பாவோட நீங்க எல்லாரும் எடுத்துக்கிட்ட குடும்ப போட்டோவை பார்த்தேன். ஒருமுறை நீ கூட எனக்கு அந்த போட்டோவை காட்டி இருக்கே. அதிர்ச்சியாயிட்டேன்க்கா. அவர்கிட்ட பேச்சு கொடுத்தப்ப அவர் தான்னு, 'கன்பார்ம்' ஆச்சு. நான் யாருன்னு அவர்கிட்ட சொல்லலை.'' ''அந்த ஆளைப் பத்தி பேசாதே. எவளோ பெத்து போட்ட பிள்ளைங்களுக்கு அப்பன்னா வாழ்ந்தவன். ஆனா, அவன் பெத்த பொண்ணுங்க அப்பன் இல்லாம வளர்ந்ததுங்க. அவன் எப்படி என் பொண்ணுங்களுக்கு அப்பாவா இருக்க முடியும்?'' ''இந்தக் கோபம் எனக்கும் தானேக்கா இருந்தது. அவர் ரொம்ப காலமா தனியாக தான் வாழ்ந்திருக்கார். அந்த பொம்பள கூட, அவர் ஆசைப்பட்டெல்லாம் வாழலையாம். சின்ன சபலம் மட்டும் தான். சூழ்ச்சி பண்ணி, அவள் கழுத்தில் தாலி கட்ட வச்சிட்டாங்க. ஆனா, ரெண்டே ஆண்டுல அவளோட முன்னால் புருஷன் திரும்ப வரவும், அவனோடேயே போயிட்டாளாம். ''அப்ப இருந்தே இவர் தனியா ஒரு அறை எடுத்து தங்கி இருந்திருக்கிறார். உன் முகத்தில் முழிக்க கஷ்டப்பட்டு தன் தவறை நினைச்சு, மது குடிச்சு உடம்பை கெடுத்திட்டிருக்கார். இப்ப 'லிவர் கேன்சர்!' 'லாஸ்ட் ஸ்டேஜ்'ல இருக்கார். 'என்னை நம்பி வந்தவளை குழந்தைகளோட நிற்கதியா விட்டுட்டு வந்தேனே'ன்னு சொல்லி சொல்லி புலம்பினார். ''நீ இப்ப இருக்கிற இடம் கூட அவருக்கு தெரியும் என்றார். ஆனா, உன்னோட பார்வையை சந்திக்கும் தைரியம் அவருக்கு இல்லையாம். 'என், புனிதாவை நிர்கதியா விட்டுட்டு வந்தேன். அவளைத் தவிர என் மனசில் அப்பவும், இப்பவும், எப்பவும் வேற யாருமே இல்லை. ஆனா, இதை சொன்னால் யாருமே நம்ப மாட்டாங்க...' அப்படின்னு சொல்லி தேம்பி தேம்பி அழுதார்.'' புனிதாவின் காலடியில் ஏதோ நழுவுவது போல் நிலைத்தடுமாறினாள். ''எ... என்னடா சொல்றே?'' ''நான் சொல்றதெல்லாம் நிஜம். ஏதோ சூழ்ச்சியில மாட்டிக்கிட்டு வாழ்க்கையை இழந்துட்டார். மனசாட்சி இல்லாம துரோகம் பண்ற எத்தனையோ ஆண்களை எனக்கு தெரியும். இவர் மனசுல நீ மட்டும் தான் இருக்கேக்கா.'' ''அவர் போன்ல எங்க போட்டோ வச்சிருக்காரா, உண்மையாடா?'' என்றவள், கண்களில் கண்ணீர். இ ரவெல்லாம் யோசித்தாள். என்றோ வாழ்ந்த வாழ்க்கையின் ஞாபகங்கள் கீறிப் பார்த்தன. தனக்காக, அவன் எல்லா உறவுகளையும் ஒதுக்கிவிட்டு வந்ததை மறக்க முடியாதே! மறுநாள், அவள் அவனை காண செல்லும்போது, இவள் வரப்போவது தெரிந்ததோ என்னவோ அவள் முகம் பார்க்கும் தகுதியின்றி, தைரியமின்றி நிரந்தரமாய் கண் மூடிவிட்டான், இளங்கோ. அவன் உடலை சுமந்து கொண்டு வீட்டிற்கு வந்தாள். விஷயம் அறிந்து பெண்கள் இருவரும் போனில் சண்டை போட்டனர். ஊறிக்கிடந்த நேசங்கள், எரிமலையாய் வெடித்து பீறிட்டு வந்தன. நேரங்கள் கரைந்தன... சம்பிரதாயங்கள் சூழ்ந்தன. ''யாரு கொள்ளிப் போடறது?'' 'ஒரே பிள்ளையை, காதல் என்ற பெயரில், பெற்றவரிடம் இருந்து பறித்துக் கொண்டு வந்தேன். அவர் அப்பா இறந்ததை கேள்விப்பட்டு, யார் கொள்ளி போட்டார்களோ... என்று வருந்தினேன். இன்று இவருக்கு?' சில நிமிடங்கள் யோசித்தவள்... ''நான் போடுகிறேன்,'' என்று சொன்னாள் திட மாக. சரித்ரா தீபன் புனைப்பெயர்: வாணி, வயது: 35. படிப்பு: பி.பி.ஏ., பணி: கணக்காளர். இதுவரை, இரண்டு சிறுகதைகள் வெளியாகியுள்ளன. கதைக்கரு பிறந்த விதம்: எங்கள் பகுதியில், சவப்பெட்டிகளை வாடகைக்கு விடும் பெண்மணியை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை இது. நிறைய சிறுகதைகள் எழுத வேண்டும்; டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டியில் முதல் பரிசு பெறுவது தான் தன் லட்சியம் என்கிறார்.