திண்ணை!
தமிழிசை சங்க விழாவில், 'அப்பனும் நீ, அம்மையும் நீ, மாமனும் நீ...' என்று வரும், திருமுறைப் பாடலை பாடினார், கிருபானந்த வாரியார். உடனே, பாடலை கேட்ட ஒருவர், 'ஐயா, அப்பன் சரி, அம்மை சரி. கடவுள் எப்படி மாமன் ஆக முடியும்?' என்று, அவரிடம் கேட்டார். அதற்கு, 'மாமன் என்பவன் யார்? தான் பெற்ற பெண், பொன், பொருள் அனைத்தையும் வேறொருவனுக்குக் கொடுத்து, அவன் அவற்றை அனுபவித்து மகிழ, அதைப் பார்த்து மகிழ்ச்சியடைகிறானே, அவன் தான் மாமன். இந்த வையகம், இதிலுள்ள நீர்வளம், நிலவளம், இயற்கை செல்வங்கள் எல்லாம் நம் அப்பன் சொத்தா அல்லது பாட்டன் சொத்தா? இறைவனின் சொத்து. அவன் சொத்தை நாம் அனுபவித்து மகிழ்கிறோம். அதைக்கண்டு, இறைவன் தானும் மகிழ்கிறான். எனவே, அவன் நமக்கு மாமன்...' என்றார், வாரியார். அவரது விளக்கத்தை கேட்ட மக்கள் பெரிதும் வியந்தனர். ************கடந்த, 1952ல், புதுச்சேரியிலுள்ள சக்தி நாடக சபாவில் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பணிபுரிந்து வந்தார். அவர், அடிக்கடி தான் எழுதிய கவிதைகளையும், எழுதி பத்திரிகையில் வெளியான கவிதைகளையும் எடுத்து வந்து, பாவேந்தர் பாரதிதாசனை சந்தித்து அபிப்பிராயம் கேட்பது வழக்கம். ஒருசமயம், அகல்யா என்ற புனைப்பெயரில் அவர் எழுதிய, எழுச்சி மிகுந்த ஒரு பொதுவுடமைக் கொள்கைக் கவிதை, பத்திரிகை ஒன்றில் வெளியாகி இருந்தது. அதை எடுத்து வந்து, பாரதிதாசனிடம் காட்டினார், கல்யாணசுந்தரம். அதைப் படித்து பரவசமடைந்த பாரதிதாசன், 'தம்பி இதுபோன்ற எழுச்சிமிக்க பாடல்களை, கல்யாணசுந்தரம் என்ற உன் பெயரிலேயே எழுது. அப்போது, தமிழ் உன்னை வாழ்த்தும்; உன்னையும் உலகம் அறியும்...' என்று கூறி வாழ்த்தினார். பின்னாளில், பாரதிதாசரின் வாக்கு பலித்தது. **********விவேகானந்தர், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, ஒருநாள் கல்லுாரி ஒன்றில் பேசினார்... 'ஒருவன் ஒரு செயலில் முழுக் கவனம் செலுத்தினால் இடியே பலத்த ஓசையுடன் விழுந்தாலும், அவன் அதை அறிய மாட்டான். அவன் கவனம் சிதறவே சிதறாது...' என்றார். அதைக்கேட்ட அமெரிக்க மாணவர்கள் ஆச்சரியப்பட்டனர். அவரிடம், 'உங்களால் அப்படியிருக்க முடியுமா?' என்று கேட்டான், ஒரு மாணவன். 'ஓ...' என்றார், விவேகானந்தர். மறுநாள், அவருக்கு தெரியாமல் அவரை சோதித்து பார்க்க முடிவு செய்தனர், மாணவர்கள். மறுநாள், ஒரு பொதுக்கூட்ட மேடையில், உணர்ச்சிப்பெருக்கோடு பேசிக் கொண்டிருந்தார், விவேகானந்தர். அப்போது, அவருக்கு மிக அருகில் மறைந்திருந்த அந்த மாணவர்கள் திடீரென இரண்டு துப்பாக்கிகளை வெடிக்க செய்தனர். அந்த ஓசையைக் கேட்டு பொதுமக்கள் தான் அதிர்ந்தனரே தவிர, ஒரு வினாடி கூட நிலை தடுமாறாமல் பேசிக்கொண்டே இருந்தார், விவேகானந்தர். அந்த மாணவர்கள் மிகவும் ஆச்சரியமடைந்தனர். ****** தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் ஊரிலுள்ள மடத்துக்கு செல்ல, ரயிலில் பயணம் செய்தார், தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர். ரயில் ஆடுதுறை நிலையத்தில் நின்றது. அவரை மடத்துக்கு அழைத்து செல்ல, 'ஜட்கா' வண்டியை அனுப்பி இருந்தார், மடத்தின் தலைவர் தம்பிரான். 'ஜட்கா' வண்டி என்பது ஒற்றைக் குதிரை பூட்டப்பட்ட சிறிய கூண்டு வண்டியாகும். அதில் ஏறி, 11 கி.மீ., பயணம் செய்து, மடத்தை அடைந்தார், உ.வே.சா., 'தங்கள் பிரயாணம் சவுகரியமாக இருந்ததா?' என்று கேட்டார், தம்பிரான். 'ரயிலில் வரும்போது சவுகரியமாகத்தான் இருந்தது; ரயில் நிலையத்திலிருந்து, 'ஜட்கா' வண்டியில் ஏறி இங்கு வருவதற்குள் ஒரே ஆட்டம்...' என்றார், உ.வே.சா., 'உண்மைதான். இது, ஆடுதுறை அல்லவா. அதனால் தான், அந்த ஆட்டம்...' என்று சொல்லி, தம்பிரான் சிரிக்க, உ.வே.சா.,வும் சிரித்து விட்டார். நடுத்தெரு நாராயணன்