உள்ளூர் செய்திகள்

திண்ணை!

கடந்த, 1960ல் அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடந்தது. அதில், ஜனநாயக கட்சியின் தலைவரான, ஜான் எப். கென்னடியை எதிர்த்து, குடியரசு கடசியின் தலைவர், நிகசன் போட்டியிட்டார்.தேர்தல் பிரசாரத்தில், பெண்கள் கூட்டத்தினரிடையே, ‛கென்னடி பொய் சொல்லக் கூடியவர். அவருக்கு வாக்களிக்காதீர்கள்...' என்று பேசினார், நிக்சன்.சில மணி நேரத்துக்கு பின், அதே பெண்கள் கூட்டத்தில் பேசினார் கென்னடி...‛என்னைப் பொய் பேசுபவன் என்று, நிக்சன் கூறினார். பெண்களாகிய நீங்கள் மிகவும் அழகானவர்கள் என்று நான் சொல்வது பொய்யா?' என்று கேட்டார்.‛இல்லை' என்றனர் பெண்கள்.தேர்தலில் யார் வெற்றி பெற்றிருப்பர் என, புரிந்திருக்குமே!***********தமிழ் எழுத்தாளர், மெர்வின் எழுதிய, ‛மென்மையான பேச்சு மேன்மை தரும்!' என்ற நூலிலிருந்து:அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த, பிரபல நாவலாசிரியர், பெர்னாட்ஷாவிடம், தன்னுடைய மகனைப் பற்றி பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தார், பெண்மணி ஒருவர்.அவள் கூறியதை, பொறுமையாக கேட்டுக் கொண்டிருக்க முடியவில்லை, பெர்னாட்ஷாவால். உடனே, ‛அம்மா, அவனுடைய பெருமைகளை கூறியது போல, சிறுமையையும் கூறியிருக்கலாமே? உங்கள் மகன் எப்போதும் வீண் பேச்சுதான் பேசுவான். வெட்டிப் பேச்சு பேசுவதில் மாமன்னன் அவன் என்று எனக்கு தெரியுமே...' எனக் கூறி, அந்தப் பெண்ணின் வாயை மூட வைத்தார்.************‛இரும்பு மனிதர்' என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலும், பொருளாதார நிபுணர் ஜே.சி. குமரப்பாவும், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில், காந்திஜியை சந்தித்தனர். அவர்களை தன்னுடன் மதிய உணவு சாப்பிட அழைத்தார் காந்திஜி.உணவு பரிமாறப்பட்ட போது, வேப்பிலை சட்னியும் அவர்களுக்கு வைக்கப்பட்டது. அந்த வேப்பிலை சட்னியை கண்டு திடுக்கிட்டார் குமரப்பா. அவருக்கு வேப்பிலை சட்னி சாப்பிட்டு பழக்கம் இல்லை. இருந்தாலும் காந்திஜி என்ன நினைப்பாரோ என்று, உடனே அதை எடுத்து வாயில் போட்டு விழுங்கிவிட்டார்.அதைப்பார்த்த, காந்திஜி, ‛இருந்தாருங்கள். இன்னும் கொஞ்சம்...' என, குமரப்பா இலையில் வேப்பிலை சட்னியை மீண்டும் வைத்தார்.இதை சற்றும் எதிர்பார்க்காத குமரப்பா, இதையும் எப்படி சாப்பிடுவது என்று, முழித்தார்.இதைக் கவனித்த படேல், ‛குமரப்பா இதுநாள் வரை, பாபுஜி ஆட்டுப் பாலைத்தான் அடித்துக் கொண்டிருந்தார். ஆனால், இப்போது ஆட்டின் ஆகாரத்தையும் சாப்பிடத் துவங்கி விட்டார்...' என்று சொல்லி சிரித்தார்.**********கடந்த, 1962ல் முன்னாள் தமிழக முதல்வர், ராஜாஜி தலைமையில், மதுரை, தமுக்கம் திடலில் பொதுக் கூட்டம் நடந்தது. கட்டுக்கடங்காத பெரும் கூட்டம். அகில் இந்திய ‛பார்வர்ட் பிளாக்' கட்சியின் முன்னாள் தலைவர் முத்துராமலிங்க தேவர் பேசினார். அடுத்து ராஜாஜி பேச எழுந்தார். ஆனால் முத்துராமலிங்க தேவர் பேசி முடிந்தவுடனேயே, மக்கள் அனைவரும் எழுந்து செல்ல முற்பட்டனர். இதை பார்த்த, ராஜாஜி, ‛நான் தேவர் பேசிய அனைத்தையும் ஒப்புக் கொள்கிறேன்...' எனக்கூறி பொதுக்கூட்டத்தை முடித்து வைத்து விட்டார்.- நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Anantharaman Srinivasan
அக் 27, 2026 21:09

ஜான் எப். கென்னடி எம்ஜியார் போல் பேசி பெண்களின் ஓட்டை கவர்ந்த காலம் மலையேறி விட்டது. அரசியல்வாதிகள் இலவசங்களை கொடுத்து பெண்களை மயக்க வேண்டியிருக்கிறது.