உள்ளூர் செய்திகள்

விஜயதசமி!

அக்., 12 - விஜயதசமிபாண்டவர்கள், காட்டில் மறைந்து வாழ்ந்த காலத்தில், தங்கள் ஆயுதங்களை ஒரு பெரிய வன்னி மரத்தின் அடியிலுள்ள பொந்தினுள் ஒளித்து வைத்திருந்தனர். தங்களின் அஞ்ஞான வாசமான, 12 ஆண்டு காலத்தில், வன்னி மரம் தான் அவர்களது ஆயுதங்களின் பாதுகாப்பு பெட்டகம் ஆனது. பாண்டவர்கள் மறைந்து வாழும்போது, மற்றவர்கள் தெரிந்து கொள்ளாமல் இருப்பதற்கும், துன்பங்கள் தங்களைத் தாக்காமல் இருக்கவும், என்ன வழி என்று தேடினர். வனத்தில் தவம் செய்யும் பெரும் முனிவர்களை அணுகினர். அவர்களுக்கு, ஸ்ரீதுர்க்கா தேவியின் புகலிடத்தை காட்டினர், அந்த முனிவர்கள்.துன்பங்களில் இருந்து காப்பவள், துர்க்கை. துர்க்கா தேவியை அண்டியவர் களுக்கு துன்பத்தின் சாயல் கூட நெருங்காது. தாரித்திரியம், துக்கம் மற்றும் பயம் இவற்றைப் போக்கி, உலகுக்கு உபகாரம் செய்பவள், துர்க்கை. இதை, நன்கு அறிந்து, தேவியை வழிபட்டனர், பாண்டவர்கள்.மகரிஷிகளால் உபதேசிக்கப்பட்ட, 'ஸ்ரீதுர்க்கா நக்ஷத்ர மாலிகா துதி' என்ற, 27 ஸ்லோகங்களை தினமும் துதித்தனர். இதனால், தேவியின் திருவருள் கிடைத்தது. அசுவினி முதல் ரேவதி முடிய உள்ள, 27 நட்சத்திர அதி தேவதைகளும், நட்சத்திரங்களும் இவர்களுக்கு ஆசி கூறி, நன்மைகள் வழங்க தயாராக நின்றன. அஞ்ஞான வாசம் முடிந்ததும், வன்னி மரப் பொந்தில் இருந்து, தங்கள் ஆயுதங்களை எடுத்து, அம்மரத்தடியில் வைத்து பூஜித்தனர். துர்க்கையாகவும், எல்லா சங்கடங்களையும் சங்கரிப்பவளாகவும், தீமைகளை ஒடுக்கி, நன்மைக்கு வெற்றி தருபவளாகவும் விளங்கும் தேவியை, ஒன்பது நாட்கள் வழிபட்டு, தசமியில் ஆயுதங்களை எடுத்துக் கொண்டனர். விஜயம் தரும் தசமி இது என்பதாலும், விஜயனால் மிகவும் பய பக்தியுடன் பூஜிக்கப் பெற்றது என்பதாலும் இது, 'விஜய தசமி' எனப் பெயர் பெற்றது. அதை, விஜய நவராத்திரி என்றும், வன்னி நவராத்திரி என்றும், வன துர்க்கா நவராத்திரி என்றும் அழைப்பது வழக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !