உள்ளூர் செய்திகள்

விசேஷம் இது வித்தியாசம்: சந்தோஷ சஷ்டி!

நவ.,15 - சூரசம்ஹாரம்பத்மாசுரனை வதம் செய்வதற்காக, முருகப்பெருமான் தேர்ந்தெடுத்த திதி, வளர்பிறை சஷ்டி. ஐப்பசி மாத வளர்பிறை சஷ்டியன்று, முக்தி பெற்றான், பத்மாசுரன். ஒரு உயிர் பூமியில் பிறந்ததும், ஏன் தவறு செய்கிறது, அந்த தவறை மீண்டும் செய்யாமல், அதை உணர்ந்து, திருந்துவது எப்படி? அப்படி திருந்திய உயிருக்கு கடவுள் என்ன பலன் கொடுப்பார் என்பதை அறிவிக்கும் திருநாளே, சூரசம்ஹாரம் எனப்படும், கந்தசஷ்டி. சம்ஹாரம் என்றால், ஒரு உயிரை அழித்தல் என்பது பொருளல்ல. 'சம்' என்றால், முழுமையாக. 'ஹாரம்' என்றால், அழித்தல். முழுமையாக அழிப்பது என்றால், மீண்டும் பிறப்பின்றி தடு ப்பது என்று அர்த்தம். பிறந்தால் தான், பாவம், புண்ணியம், பசி, துாக்கம், துக்கம், மகிழ்ச்சி எல்லாம்! பிறவியே இல்லாமல், இறைவனுடன் கலந்து விட்டால், இந்த உணர்வுகள் ஏதும் இருக்காது. எந்நேரமும் இறைசிந்தனை மட்டுமே! இந்த நிலையை அடைய மேற்கொள்ளப்படும் விரதம் தான், கந்தசஷ்டி விரதம். சரி, பிறக்காமல் இருக்க, சஷ்டி விரதம் என்றால், குழந்தை பிறக்கவும் இதே விரதத்தை அனுஷ்டிக்கின்றனரே, ஏன்? பிறவிகளிலேயே உயர்ந்தது, மனிதப்பிறவி. புழுவாய், பூச்சியாய், பறவையாய், மிருகமாய் இன்னும் பல வடிவங்களில் பிறந்த ஒரு உயிர், மனிதப்பிறவியை அடைய, படாத பாடு பட்டிருக்கும். இதைத்தான், அவ்வையார், 'அரிது அரிது மானிடராதல் அரிது!' என்றார். அவ்வாறு பிறந்து, தானம், தவம் செய்தால் தான், வானவர் நாடு, வழி திறந்திடும் என்றும், அவர் சொல்கிறார். மனிதர்களைப் பொறுத்தவரை, தவம் என்றால், விரதம் இருப்பது. அதில் மேன்மையானது, சஷ்டி விரதம். சஷ்டியுடன், 'கந்த' என்ற பதம் சேரும் போது, இந்த விரதத்தின் மேன்மை மேலும் வெளிப்படுகிறது. கந்தன் என்ற சொல், 'கந்து+அன்' எனப் பிரியும். இதில், 'அன்' என்பது, மரியாதைக்குரிய பதம். கந்து என்றால் , யானையைக் கட்டி வைக்கும் துாண். பலம் மிக்க யானையை எப்படி ஒரு துாண் சற்றும் அசையவிடாமல் கட்டிக்காத்து நிற்கிறதோ, அதுபோல மனிதர்களின் மனதை ஆசை என்னும் கடலில் அலைபாய விடாமல் கட்டி வைத்துக் கொள்கிறார், கந்தன். இதனால் தான், சஷ்டி விரதத்தன்று சாப்பிடுவதில்லை. உணவு இல்லையென்றால் மனம் ஒருநிலைப்படுகிறது. உண்ணாவிட்டால் இயற்கையாகவே துாக்கம் வராது. இந்த நிலையில் மனம் எங்காவது அலைபாயுமா? 'முருகா! இந்த விரதத்தை நல்லபடியாக முடித்து வை...' என, அவனது புகழ் பாடும் பாடல்களைப் பாடியபடியே நாள் கழியும். வைதாரையும் வாழ வைக்கும், முருகன், அவனது பக்தர்களை கைவிடுவானா...தீர்க்காயுளும், சந்தோஷமும் தந்து, தன்னுடன் சேர்த்துக் கொள்வான். பிறகு பிறவித் துன்பமே இருக்காது. கந்தப்பெருமான், சகல சந்தோஷத்தையும் அனைவருக்கும் அருளட்டும்.  தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !