உள்ளூர் செய்திகள்

ஐம்பதிலும் ஆசை வரும்!

''அம்மா ப்ளீஸ், எனக்காக ஒத்துக்கங்கம்மா, உங்களை, அங்க தனியா விட்டுட்டு, இங்க என்னால நிம்மதியாவே இருக்க முடியல...'' லண்டனிலிருந்து, வீடியோ அழைப்பில் பேசிய, ஹரிணிக்கு, பேசும்போதே குரல் கரகரத்து, விழிகளில் நீர் கோர்த்தது.''உஷ் ஹரிம்மா... இப்படி அழறதா இருந்தா, நான் அழைப்பை துண்டித்து விடுவேன். அப்படி என்ன தனிமை எனக்கு. புத்தகம், 'டிவி' மற்றும் மாலையில், ஸ்லோக வகுப்புன்னு, 'பிசி'யாத்தான் இருக்கேன்.''சொல்லப் போனா, உங்ககிட்ட பேசவே கஷ்டப்பட்டுத்தான் நேரம் ஒதுக்குறேன். என்னை, எனக்கு நல்லாவே பார்த்துக்கத் தெரியும். நீ, மாப்பிள்ளைய கவனிச்சுக்கிட்டு, உன் குடும்பத்தை நல்லாப் பாரு. அது தான் எனக்குப் பெருமை,'' என்றாள், ஹரிணியின் அம்மா வரலட்சுமி.''இப்படி எதையாவது சொல்லி, என் வாயை அடைச்சுடுங்க. ஆனா, கூடிய சீக்கிரமே உங்க சம்மதம் வாங்கறதுக்காக, நான் இந்தியா வருவேன்,'' என்று, சிறிது நேரம் பேசி விட்டு வைத்தாள், ஹரிணி.அம்மா, தனக்காக வரன் தேட ஆரம்பித்த போதே, உள்ளூர் மாப்பிள்ளை தான் வேண்டுமென்று சொன்னாள், ஹரிணி. எல்லா வகையிலும் திருப்தியாக அமைந்த வரன் தான், ரூபேஷ்.திருமணம் முடிந்து, ஒரு ஆண்டு கடந்த நிலையில், 'ஹரிணி, எங்க ஆபீஸ் கிளை லண்டன்ல திறக்கப் போறாங்களாம். என்னை, நிரந்தரமா அங்கேயே இருந்து பார்த்துக்கச் சொல்றாங்க.'எல்லா வசதியும் கம்பெனியே செஞ்சு கொடுத்துடுமாம். நீ சொல்றபடி தான் ஹரிணிம்மா... வேணாம்ன்னா, இங்கேயே வேற வேலை தேட வேண்டியிருக்கும்...' என்றான், ரூபேஷ்.அவன் கண்களில் தெரிந்த ஏக்கத்தை புரிந்து கொண்டாள், ஹரிணி.ஹரிணி விபரம் கூறிய மறுநொடியே, 'ரொம்ப மகிழ்ச்சிடா. வாழ்க்கையோட போக்குலயே போகப் பழகிக்கணும். இன்னைக்கு வேண்டாம்ன்னு விடுற வாய்ப்பு, இன்னொரு சந்தர்ப்பத்துல அமையும்ன்னு சொல்ல முடியாது. சந்தோஷமாப் போயிட்டு வா...' என்றாள், வரலட்சுமி.ஆயிற்று, தாயைப் பிரிய மனமின்றி, ஹரிணி, லண்டன் சென்று இரண்டு ஆண்டுகள் ஓடி விட்டன. ஆண்டுக்கு ஒருமுறை அவர்கள், இந்தியா வந்து போகும் செலவையும் கம்பெனியே ஏற்றது. மகளிடம் பேசி விட்டு போனை வைத்த, வரலட்சுமிக்கு, தன்னை அறியாமல் கண்களில் நீர் கோர்த்தது. ஹரிணி சின்னப் பொண்ணுன்னு நெனைச்சோமே, எப்படியெல்லாம் சிந்திக்கிறா... அவள் நினைவுகள், தன் வாழ்வின் இலையுதிர் காலத்தை நோக்கிப் பயணித்தது...'அம்மா, சொன்னாக் கேளு... நீ தான், எப்படியாவது அப்பாகிட்ட பேசி, எங்க காதலுக்கு, சம்மதம் வாங்கணும்...' தாயின் காதுகளையே எட்டாத, வரலட்சுமியின் வார்த்தைகள், எப்படித் தந்தையிடம் போய் சேரும்?விளைவு...சத்யநாராயணுடன் திருமணம் ஆனது. அவனுடைய அன்பும், அணுகுமுறையும், இயல்பாக, வரலட்சுமியை ஒன்ற வைத்ததில், மகிழ்ச்சியான இல்லறம் அமைந்தது. ஹரிணியை கர்ப்பத்தில் தாங்கிய போது, அவளைப் பூ போலத் தாங்கினான். ஒருநாள், 'அப்பாவுக்கு, 'பை' சொல்லு, ஹரிணிக் குட்டி...'இருவருக்கும், 'பை' சொல்லிக் கையசைக்கும் போது, அவன், இந்த உலகை விட்டுச் செல்வதற்கான இறுதியான, 'பை' என்று, பாவம் அவர்களுக்குத் தெரியாது. காலையில் சிரித்த முகத்துடன் கிளம்பிய சத்யநாராயணன், கோரமான சாலை விபத்தில், சடலமாகத் திரும்பினான். காரியங்கள் எல்லாம் முடிந்தது. பெற்றோர் மற்றும் மாமியார் எவ்வளவோ வற்புறுத்தியும், அவர்களுடன் செல்லவில்லை, வரலட்சுமி. சத்யநாராயணனின் வருடாந்திர திதி முடிந்தது. 'லட்சுமி, உனக்கு சின்ன வயசு. கையில குழந்தை வேற. நீ, ஏம்மா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கக் கூடாது...' மெதுவாக ஆரம்பித்தாள், மாமியார்.'சம்பந்தி, என்ன பேசறீங்க... அதெல்லாம் நம் குடும்பத்துக்கு சரிப்படாது...' என்றாள், வரலட்சுமியின் அம்மா.வரலட்சுமி வாயே திறக்கவில்லை.'ஏன் சம்பந்தி, இப்படிப் பேசறீங்க. நம் காலம் வேற, இவங்க காலம் வேற. என் பையன், அல்பாயுசுல போயிட்டான். அதுக்காக, வரலட்சுமிய, இந்த சின்ன வயசுல நாம இப்படியே விடறது எங்களுக்குச் சரியாப்படல.'ஊரு உலகத்துக்காகவெல்லாம் நாம பார்த்தா, நம் பிள்ளைங்களுக்கான கடமையை சரி வர செய்ய முடியாது...' என, சத்யநாராயணனின் பெற்றோர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், வரலட்சுமியின் பெற்றோர் பிடிவாதமாக மறுத்தனர். 'எனக்கு, மறுமணத்தில் எல்லாம் விருப்பமில்லை...' என, வரலட்சுமி சொல்ல, அவர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.இரண்டு பக்கமுமே நல்ல வசதி என்பதால், அவளுக்குப் பணத்துக்கெல்லாம் குறைவேயில்லை. குழந்தை ஹரிணியின் சுட்டித்தனத்தில், துக்கத்தையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறக்க, ஆண்டுகள் உருண்டோடின.வீட்டுப் பெரியவர்கள் ஒருவர் பின் ஒருவராக இறக்க, எந்த சூழ்நிலையிலும் மனோ தைரியத்தைக் கைவிடவில்லை, வரலட்சுமி. அவள் தாய் தான், உடல் உபாதைகளால் ரொம்பவே சிரமப்பட்டாள். தன் கூடவே வைத்து பார்த்து, பணிவிடை செய்தாள், வரலட்சுமி.'லட்சுமிம்மா, உன்னை ரொம்ப சிரமப்படுத்துறேன். அம்மா தப்புப் பண்ணிட்டேன்னு நெனைக்கிறியாம்மா...''எந்தத் தப்பம்மா கேட்கற...' என, வாய் வரை வந்த வார்த்தைகளைக் கட்டுப்படுத்தி, 'சும்மா அதையும், இதையும் போட்டுக் குழப்பிக்காம, மனச அமைதியா வச்சுக்கோம்மா. உன்னை பார்த்துக்கிறது என்னோட கடமைம்மா... சிரமம் அது இதுன்னு பெரிய வார்த்தையெல்லாம் பேசாம, துாங்கு...' என்றாள், வரலட்சுமி.மறுநாள் காலை, தாய், மீளாத் துாக்கத்திற்குப் போய் விட்டதை அறிந்து, கட்டுப்படுத்த முடியாமல் கதறினாள்.தாயின் இழப்பு, வரலட்சுமியை உருக்குலையச் செய்தது. ஒரு வழியாக மீண்டு, ஹரிணி வளர்ப்பில் கவனம் செலுத்தி, அவளை நல்ல இடத்தில் திருமணமும் செய்து கொடுத்து விட்டாள்.'இந்த, 50 வயசுல இப்படி ஒரு சூழ்நிலையை எதிர்கொள்ள வச்சுருக்கிற விதிய நெனைச்சு சிரிக்குறதா, அழறதான்னே தெரியலியே...' மனம் புழுங்கினாள், வரலட்சுமி. இரவு சாப்பிடப் பிடிக்காமல் போய் படுத்து விட்டாள்.பக்கத்து, 'அப்பார்ட்மென்டில்' வீடியோ அழைப்பில் தந்தை காமேஷிடம், ''பிடிவாதம் பிடிக்காதீங்கப்பா. உங்களுக்கு, எங்க கூட வந்து, ஜெர்மனியில இருக்க சம்மதமா... இல்ல, நாங்க சொன்ன மாதிரி, ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்க சம்மதமான்னு கேட்கப் போறதில்ல... உங்களுக்கு ஒரே வாய்ப்பு, கல்யாணம் தான். அதுவும், உங்க மனசுக்குப் பிடிச்சவங்களோட...''''உமேஷ், விளையாடாத... இந்த வயசுல போயி, ரெண்டாம் கல்யாணம்னா, யாராவது கேட்டா சிரிப்பாங்க.''''அப்பா, வயசுங்கிறது, 'ஜஸ்ட்' நம்பர் தான். நீங்க தானே சொல்வீங்க, எனக்கு, 10 வயசு இருக்குறப்ப, அம்மா மஞ்சள் காமாலையால் இறந்த பின், எனக்காக மட்டுமே வாழ்ந்த உங்களுக்கு ஏதாவது செய்யணும்ன்னு ரொம்ப வருஷமாவே ஆசைப்பா.''''நான் எவ்ளோ சொன்னாலும், நீ புரிஞ்சிக்க மாட்ட... இந்த வருஷ விடுமுறைக்கு ஊருக்கு வருவேல்ல, அப்ப இதுபற்றி பேசிக்கலாம்,'' எனக் கூறி, சிறிது நேரம் மருமகள், பேரன், பேத்தி அனைவரிடமும் ஜாலியாகப் பேசிவிட்டு, போனை வைத்தார்.'பர்மிஷன்' எதுவும் கேட்காமலே, பழைய நினைவுகள் மோதிச் சென்றன. 'நாங்க என்னடாவென்றால், இத்தனை வருஷம் கழிச்சு சந்தித்ததே, நல்ல விஷயம்ன்னு நட்பா இருக்கோம். ஏன் இந்தப் பிள்ளைங்க, எங்களை வேண்டாத வம்புல இழுத்துப் போட, 'பிளான்' பண்ணுதுங்க?'எதுன்னாலும், எந்தச் சூழ்நிலையிலயும், அவள் மனசு புண்படாம பார்த்துக்கணும்...' உறக்கமின்றி சிறிது நேரம் இருந்தவர், தன்னையறியாமல் உறங்கிப் போனார்.சொன்னது போலவே, லண்டனிலிருந்து வந்ததும், அம்மாவுடன் ஜாலியாக, 'ஷாப்பிங்' சமையல் என, பொழுது போக்கினாள், ஹரிணி.தந்தை காமேஷைப் பார்ப்பதற்காக, ஜெர்மனியிலிருந்து வந்திருந்தான், உமேஷ்.''அப்பா, இந்த தடவை, ரெண்டு மாசம் உங்க கூட இருக்கிற மாதிரி வந்திருக்கேன். சமையல் பொறுப்பு என்னோடது. நீங்க, சமத்தா ஆபீஸ் மட்டும் போயிட்டு வருவீங்களாம்.''''ஏன்டா, எனக்கு இந்த பனிஷ்மென்ட்...'' என்று, உமேஷ் சூப்பராக சமைப்பது தெரிந்தும், பாவமாக முகத்தை வைத்து கேட்டார், காமேஷ்.ஞாயிற்றுக்கிழமை, வரலட்சுமி மற்றும் ஹரிணியை, மதிய உணவு சாப்பிட அழைத்திருந்தான், உமேஷ்.காலையிலிருந்து பார்த்து பார்த்து, விதவிதமாக சமைத்திருந்தான், உமேஷ்.''அங்கிள், இந்தாங்க பால்கோவா... உங்களுக்குப் பிடிக்கும்ன்னு அம்மா சொன்னாங்க, நானே செஞ்சேன்,'' என்றாள், ஹரிணி.''சூப்பரா இருக்கு, ஹரிணி,'' என்றவர், மகன், வரலட்சுமி மற்றும் ஹரிணிக்கு கொஞ்சம் கொடுத்துவிட்டு, ''பாக்கி எனக்குத்தான்...'' என்று, எடுத்து வைத்துக் கொண்டார்.அவர்களுக்கு தனிமை கொடுத்து, தனக்கு உதவி செய்வதற்காக, ஹரிணியை உள்ளே அழைத்தான். வரலட்சுமியும் எழ முயற்சிக்க, ''நாங்க மட்டும் தான்...'' என்றான், உமேஷ்.சிரித்தபடி அமர்ந்து விட்டாள்.இந்த முறை, எப்படியாவது நம் பிளானை செயல்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்றபடி, இருவரும் வேலையை முடித்தனர். நால்வரும் பேசிக் கொண்டே சாப்பிட்டு, ஓய்வாக உட்கார்ந்தனர்.''சொல்லு ஹரிணி... ஏதோ பேசணும்ன்னு நெனைக்கிற மாதிரி தெரியுது,'' என்றான், உமேஷ். ''நான், நேரடியாவே விஷயத்துக்கு வர்றேன். ஏற்கனவே குடும்ப நண்பர்களா இருக்குற உங்க ரெண்டு பேரையும், வாழ்க்கையில இணைக்கணும்ன்னு பிரியப்படுறோம்,'' என்றாள், ஹரிணி.''நீங்க ரெண்டு பேருமே, தர்மசங்கடமா நினைக்க கூடாதுன்னு தான், குடும்பத்தை விட்டுட்டு, இந்த முறை நாங்க தனியா வந்துருக்கோம்,'' என்றான், உமேஷ்.''உங்களோட வருத்தத்தை எங்களால புரிஞ்சுக்க முடியுது, உமேஷ். நாங்க ஒண்ணும் விடலைப் பருவத்துல இல்ல. ஒருவேளை, எங்க கல்யாண வாழ்க்கை, தோல்வியில முடிஞ்சிருந்தாக் கூட பரவாயில்ல. ரெண்டு பேருமே எங்கள் வாழ்க்கை துணையுடன், சிறப்பாகத் தான் வாழ்ந்துருக்கோம்.''இவ்ளோ நல்ல குழந்தைங்க எங்களுக்கு. இதை தாண்டி எதுவுமே தேவையில்லை. அஞ்சு வருஷத்துக்கு முன், காமேஷ் இந்த பிளாட் வாங்கி குடி வந்ததுமே, 'நாங்க ஏற்கனவே அறிமுகமான குடும்ப நண்பர்கள்'ன்னு, இந்தக் காலனியில மத்தவங்களுக்குத் தெரியப்படுத்தறதான் முதலில் செஞ்சாரு.''ஏன் தெரியுமா? நாங்கள்லாம் இந்த சமூகத்தில் வாழ்ந்து பழக்கப்பட்டவங்க. எங்களோட உறவை, மத்தவங்க கொச்சையா விமர்சிக்கிறது மட்டுமல்ல, நெனைச்சுடக் கூடாதுங்கிறதுலயும், தெளிவா இருக்கோம்,'' என்றாள், வரலட்சுமி.'ஆனால், அம்மா...' உமேஷும், ஹரிணியும் இடைப்புகுந்தனர்.அவர்களைத் தடுத்த காமேஷ், ''ஹரிணி, உமேஷ்... இத்தனை நாளா நாங்க மறைச்சு வச்சிருந்த உண்மையை, உங்க ரெண்டு பேருக்கும் இப்ப சொல்லப் போறேன். நானும், வரலட்சுமியும் காதலர்கள்.''அவங்க அம்மாவோட பிடிவாதத்துனால, எங்க காதல், திருமணத்துல முடியல. எங்க திருமணம் தான் தோத்துப் போச்சே தவிர, எங்களோட மனசுல இருந்த காதல் இல்ல. ரெண்டு பேருமே, அதை நட்பாப் புதுப்பிச்சுக்கிட்டோம். எங்களுக்குள்ள எந்தக் குழப்பமும் இல்லை.''இன்னைக்கு, வரலட்சுமியோட அம்மா உயிரோட இல்லை. அவங்க வேண்டாம்ன்னு தடுத்த பந்தத்த, வரலட்சுமி மட்டுமில்ல, நானுமே விரும்பல. ஏதோ ஒரு வகையில, அந்த ஆத்மாவுக்கு செய்யிற களங்கம்ன்னு நினைக்கிறோம். அதனால, இதை இப்படியே விட்டுடுங்க கண்ணுங்களா,'' என்றார்.இமைக்க மறந்து கேட்டுக் கொண்டிருந்த, உமேஷ், வரலட்சுமியை அணைத்துக் கொள்ள, ஓடிச்சென்று, காமேஷைத் கட்டியணைத்துக் கொண்டாள், ஹரிணி.அங்கே, ஒரு இனிய சங்கீதம், அமைதியாக அரங்கேறியது.மீரா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !