தாவரத்துக்கு கல்யாணம்!
எது நம் உடலுக்கு நல்லதோ, அதைப் பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணம், நம் முன்னோருக்கு இருந்திருக்கிறது.மரம் நடுங்கள் என்று, அரசாங்கம் எவ்வளவு தான் அறிவுறுத்தினாலும், மக்களில் பெரும்பாலோர், அதைக் காது கொடுத்து கேட்பதில்லை. இதையே ஆன்மிகம் சொன்னால், நட்டு வளர்ப்பர்.இந்த அடிப்படையில், உடலுக்கு நன்மை தரும் தாவரங்களான துளசி மற்றும் நெல்லியைப் பாதுகாக்க, அவற்றுக்கு திருமணம் நடத்தி வைத்து அழகு பார்த்தனர். இந்த திருமணம், வடமாநிலங்களில் தான் விசேஷம்.கார்த்திகை மாதம், வளர்பிறை துவாதசி திதியில் இந்த விழா நடக்கும். மாநிலத்துக்கு மாநிலம், திருமணம் நடத்தும் நாள், திதி நேரத்திற்கேற்ப சற்று மாறுபடும்.ஜலந்தரன் என்ற அசுரனின் மனைவி பிருந்தா, கணவனிடம் அதிக பிரியம் வைத்திருந்தாள். ஜலந்தரன் தன் அதீத சக்தியால், தேவர்களைத் துன்புறுத்தினான். விஷ்ணுவிடம் புகார் சென்றது. பிருந்தாவின் கற்புக்கு களங்கம் நேர்ந்தால் மட்டுமே, தன்னைக் கொல்ல முடியும் என்ற வரத்தை ஜலந்தரன் பெற்றிருப்பதை அவர் அறிந்தார்.மாயவனான விஷ்ணு, ஜலந்தரன் இல்லாத நேரத்தில், அவனைப் போலவே உருவமெடுத்து, பிருந்தாவின் அருகில் வந்தார். அவரை தன் கணவர் என நினைத்து, பிருந்தா பாத பூஜை செய்தாள். அவரது பாதத்தை தொட்டதுமே, வந்திருப்பது தன் கணவர் இல்லையென்று, அவளுக்கு புரிந்து விட்டது.கோபத்தில் விஷ்ணுவை கல்லாகும்படி சபித்தாள். அவர், கருப்பு நிற கல்லானார். அந்தக் கல்லை கண்டகி நதியில் வீசியெறிந்த, பிருந்தா, தன்னைத் தானே மாய்த்துக் கொண்டாள். இந்தக் கல் தான் சாளக்கிராமம் என்ற தெய்வீக கல்லாகக் கருதப்படுகிறது.மறைந்த பிருந்தாவின் ஆன்மாவை, ஒரு செடியில் புகுத்தினர், தேவர்கள். இது, பிருந்தாவின் மறுபிறப்பாகும். அந்தச் செடிக்கு பெண் வடிவையும் தந்தார், விஷ்ணு. அதுவே துளசி செடி. அவள் அருகில், ஒரு நெல்லி மரமாக மாறி நின்றார், விஷ்ணு. அப்பிறப்பில் அவளையே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார்.இதையறிந்த தேவர்கள், நெல்லி வடிவில் இருந்த விஷ்ணுவுக்கும், துளசிக்கும் திருமணம் செய்து வைத்தனர். இந்த நிகழ்ச்சி, கார்த்திகை வளர்பிறை துவாதசி திதியில் நடந்தது. பீகாரில், ரூதாஸ் மாவட்டத்திலுள்ள சவுஜானா கிராமத்தில், இந்நிகழ்வை, கார்த்திகை வளர்பிறை ஏகாதசி திதி முதல், திரயோதசி திதி வரை, மூன்று நாட்கள் நடத்துகின்றனர். விழாவில், 56 வகை பிரசாதம் தயாரித்து பக்தர்களுக்கு வழங்கப்படும். விஷ்ணுவுக்கும், துளசிக்கும் மாங்கல்ய தாரணமும் செய்து வைப்பர். இந்த திருமணத்தில், பெண் குழந்தை இல்லாத பெற்றோர், துளசியைத் தங்கள் மகளாகக் கருதி, விஷ்ணுவுக்கு திருமணம் செய்து வைப்பது, மற்றொரு விசேஷம்.தாவரங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவை. அரசுக்கும், வேம்புக்கும் திருமணம் செய்யும் வழக்கம், தமிழகத்தில் உண்டு. இரண்டுமே மருத்துவ குணம் மிக்கவை.தாவரங்களைப் பாதுகாக்கவே, அவை ஆன்மிகத்துடன் இணைக்கப்பட்டன. தமிழகத்திலும் இதுபோன்ற விழாக்களை நடத்துவோம்! தி. செல்லப்பா