உள்ளூர் செய்திகள்

விசேஷம் இது வித்தியாசம்: கம்மல் ரகசியம்!

அக்., 31 - தீபாவளிதீபாவளி என்றால் புத்தாடை, இனிப்பு மற்றும் பட்டாசு என, அமோகமாக இருக்கும். குழந்தைகள் மிகவும் விரும்பும் பண்டிகை, இது. இந்த பண்டிகை, நரகாசுரன் எனும் அரக்கனுக்காக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில், கம்மல் ரகசியம் ஒன்று ஒளிந்துள்ளது உங்களுக்கு தெரியுமா?நரகாசுரனை சத்யபாமா கொல்வதற்கு, அவன் அநியாயக்காரன் என்பதால் மட்டுமல்ல, ஒரு ஜோடி கம்மலும், முக்கிய காரணமாக இருந்தது.இதை, குண்டலம் என்றும் சொல்வர். இதை அணிந்திருந்தவள், இந்திரன் முதலான தேவர்களின் தாயான அதிதி. காஷ்ய மகரிஷியின் மனைவியான இவளிடமிருந்து, கம்மல்களை பறித்து வந்து விட்டான், நரகாசுரன். பெரும் பணக்காரனும், காமரூபம் (அஸாம்) எனும் தேசத்தின் அரசனுமான அவன், ஒரு ஜோடி கம்மலுக்கா ஆசைப்படுவான் என்ற கேள்வி எழும்.அவன் அதற்கு ஆசைப்பட காரணம், அது மிக மிக விசேஷமானது. அதை யார் அணிந்திருக்கின்றனரோ, அவர்களுக்கு எதிர்காலத்தில் நடக்கப் போகிற விஷயம் தெரியும். குறிப்பாக, தனக்கும், தன்னை சார்ந்தவர்களுக்கும் எதிராக யார் சதி செய்கின்றனர், என்னென்ன ஆபத்து வரும் என்பதை, முன்கூட்டியே காட்டிக் கொடுத்து விடும். அது மட்டுமல்ல, தேவர்கள் அமிர்தம் வேண்டி, பாற்கடலைக் கடைந்த போது, பல பொருட்கள் உள்ளிருந்து வெளிப்பட்டன. அதில் ஒன்று தான், இந்த ஜோடி கம்மல். விசேஷமான இதை, விஷ்ணுவிடம் கேட்டுப் பெற்றாள், அதிதி. தேவர்களின் நலனுக்காக பெற்ற அதை, நரகாசுரன் பறித்து சென்று விட்டான். நரகாசுரன் இறந்ததும், விஷ்ணு அதை மீண்டும் அதிதியிடமே ஒப்படைத்தார். நரகாசுரனின் தாய் சத்யபாமா, எந்த கஷ்டத்தையும் தாங்குபவள். இதனால் தான், அவள் பூமாதேவியாக இருக்கிறாள். பூமியை நாம் எவ்வளவோ களங்கப்படுத்துகிறோம். அத்தனையையும் சகித்துக் கொள்ளும் தாயாக இருக்கிறாள். தன் முற்பிறப்பில், குணவதி என்ற பெயரில் பிறந்தாள். திருமணமானவுடன், கணவனையும், தந்தையையும் இழந்தாள். வாழ்வே சூன்யமாகி விட்ட நிலையில், தன்னிடமிருந்த பொருட்களை தானம் செய்து விட்டு, மறுபிறப்பாவது நன்றாக அமையட்டும் என, பக்தி நெறியில் ஈடுபட்டாள். அதன் பயனாக, மறுபிறப்பில், சத்ரஜித் என்ற அரசனின் மகளாகப் பிறந்தாள். விஷ்ணுவை கணவராகப் பெற்றாள். இப்பிறப்பில், தன் மகனை தானே கொல்லும் இக்கட்டான நிலைக்கு ஆளானாள். ஆனாலும், உலக மக்கள் நலனுக்காக பொறுமை காத்தாள். இந்த அரிய செய்திகளை படித்த மகிழ்வுடன், செல்வ வளத்தை லட்சுமி தாயாரும், பொறுமை, சகிப்புத்தன்மை ஆகிய நற்குணங்களை பூதேவி தாயாரும் தர வேண்டுமென வேண்டி, தீபாவளியை சிறப்பாக கொண்டாடுவோம்.தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !