விசேஷம் இது வித்தியாசம் - புருவத்தில் தோன்றிய கடவுள்!
பார்வதியின் உடலிலிருந்து விநாயகர் தோன்றினார். இதுபோல, தன் புருவத்தில் இருந்து தன்னைத்தானே ஆவேச அவதாரமாக தோற்றுவித்துக் கொண்டவர், சிவன்.எதை வேண்டுமானாலும் இறைவன் பொறுத்துக் கொள்வான். ஆனால், ஏமாற்றுக்காரர்களை மட்டும் மன்னிக்கவே மாட்டான்.சிலருக்கு உடனே தண்டனை கிடைக்கலாம். சிலரை நின்று கொல்வார், சிவன். இதற்காக அவர், எந்த கஷ்டத்தையும், ஏற்று கொள்வார். தனக்கு தானே தண்டனையும் கொடுத்து கொள்வார். அத்தகைய நீதிமான், அவர்.பைரவர் என்ற சொல், 'புரு' என்ற சொல்லில் இருந்து உருவானது. 'புரு' என்றால் புருவம். சிவனின் புருவத்தில் இருந்து தோன்றியவர், அவர். அவரது பிறப்பின் காரணம் பலருக்கும் தெரிந்த கதை தான். ஆனால், அவரது பிறப்பு, மனித இனத்துக்கு நீதியைப் போதிக்கிறது என்பதை அறியாதவர்கள் உண்டு.நெருப்பின் வடிவில், விண்ணுக்கும், பாதாளத்துக்குமாக உயர்ந்து நின்றார், சிவன். தன் திருவடியையும், சிரசையும் யாராவது கண்டு வர முடியுமா என, ஒரு போட்டி வைத்தார். இதில் பிரம்மாவும், விஷ்ணுவும் பங்கேற்றனர்.திருவடியை நோக்கி சென்றார், விஷ்ணு. அவரால் வெற்றி பெற முடியவில்லை. சிரசை நோக்கி சென்றார், பிரம்மா. அதைக் காண முடியவில்லை. ஆனால், அதை பார்த்து விட்டதாக பொய் சொல்லி, சிவனை ஏமாற்றி விட்டார். உடனே, சிவனின் புருவங்கள், கடும் கோபத்தில் நெறிந்தன. அதிலிருந்து தண்டம் மற்றும் ஆயுதங்கள் ஏந்திய உருவம், நாய் வாகனத்தில் ஏறி வந்தது. ஏமாற்றுக்காரரான பிரம்மாவின் ஐந்து தலைகளில், எந்த தலை பொய் சொன்னதோ, அதை அறுத்தெறிந்தது.புருவத்தில் தோன்றிய அந்த உருவம், 'புரு' எனப்பட்டது. தமிழில், பைரவர் என திரிந்தது. தண்டம் ஏந்தி வந்ததால், தண்டபாணி என்றும் பெயர் பெற்றது.தமிழகத்தில், முருகனைத் தான் தண்டபாணி என்போம். ஆனால், வடக்கே பைரவருக்கும் தண்டபாணி என்ற பெயர் உண்டு. ஒரு உயிரை வதைத்த காரணத்தால், தனக்கு தானே தண்டனையும் தந்து கொண்டார், சிவன். பிரம்மாவின் மனைவி சரஸ்வதியின் சாபத்தை ஏற்று, தன் கையில் பிரம்மாவின் கபாலம் ஒட்டும்படி செய்தார். அதே வடிவில் பலகாலம் சிரமப்பட்டார்.காலம் கை கூடியதும், சாப விமோசனத்துக்காக, காசிக்கு சென்றார். பிரம்மஹத்தி எனப்படும் கொலை பாவத்தை, கங்கையில் மூழ்கி கழுவினார். இதன்பின் கபாலம், கீழே விழுந்தது.அந்த நகரிலேயே தங்கி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். உஜ்ஜைனியிலும் புகழ் பெற்ற பைரவர் கோவில் இருக்கிறது. பைரவருக்குரிய திதி அஷ்டமி. தேய்பிறை அஷ்டமியில் அவரை வணங்கினால், தீராத துன்பமும் தீரும்.தி.செல்லப்பா