உள்ளூர் செய்திகள்

விசேஷம் இது வித்தியாசம்: அம்பாபாய் பிறந்தநாள்!

ஏப்., 1 - பங்குனி உத்திரம்பொதுவாக, தெய்வங்களின் திருமணங்கள், பங்குனி உத்திரத்தன்று நடந்திருப்பது புராணங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். ஆனால், அம்பாபாய் எனப்படும், லட்சுமி தாயார், இதே நாளில் தான் பாற்கடலில் இருந்து உலகிற்கு மீண்டும் வந்தாள் என்பதை அறிவீர்களா? வைகுண்டத்தில் கிடைத்த மாலையை, தேவர் தலைவன் இந்திரனுக்கு, பிரசாதமாக அளித்தார், பிருகு முனிவர். அந்த பிரசாதத்துக்கு உரிய மரியாதையை தராததால், இந்திரன் மற்றும் தேவர்களிடம் உள்ள செல்வமும், பலமும் அழியட்டும் என, சாபமிட்டார், பிருகு. இதனால், செல்வத்தின் அதிபதியான, லட்சுமி தாயார் பாற்கடலுக்குள் மறைந்து கொண்டாள். இழந்த செல்வத்தை மீட்க, தேவர்கள் பாற்கடலைக் கடைந்தனர். அப்போது, பல செல்வங்கள் வெளிப்பட்டன. லட்சுமி தாயாரும் மீண்டும் பூமிக்கு வந்தாள். லட்சுமி தாயார் வழிபாடு தென்னகத்தை விட, வடமாநிலங்களில் தான் மிகவும் பிரசித்தம். அங்கு, அவளுக்கு தனியாக கோவில்கள் உள்ளன. அதில் ஒன்று, மஹாராஷ்டிராவில், புனேயில் இருந்து, 240 கி.மீ., துாரத்திலுள்ள, கோல்ஹாபூரில் (கோலாப்பூர்) உள்ளது. 1300 ஆண்டுகள் பழமையானது, இக்கோவில். இந்தக் கோவிலை, 'அம்பாபாய் கோவில்' என்பர். இவள், திருப்பதி ஏழுமலையானின் துணைவியாகக் கருதப்படுகிறாள். லட்சுமி தாயார் சாந்தமானவள். ஆனால், கோபம் வந்து விட்டால், ஆயுதம் ஏந்தி, வீர லட்சுமியாக மாறி விடுவாள். லட்சுமியின், எட்டு வடிவங்களில் இதுவும் ஒன்று. தேவர்களைத் துன்புறுத்திய, கோலாசுரன் என்ற அசுரனை, சம்ஹாரம் செய்தாள், லட்சுமி. மரண தருவாயில் தன் தவறுக்கு மன்னிப்பு கேட்ட, கோலாசுரன், தான் மரணமடையும் தலத்துக்கு, தன் பெயரைச் சூட்ட வேண்டினான். கருணையுடன் சம்மதித்தாள், லட்சுமி தாயார். அதிலிருந்து, அந்த ஊரின் பெயர், கோலாப்பூர் ஆனது. கருவறையிலுள்ள, அம்பாபாய் சிலை, 3 அடி உயரம் உடையது. இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், தன் சகோதரரான, சிவனுக்கு, தன் சன்னிதியின் மேல் பகுதியில் இடம் அளித்திருக்கிறாள், லட்சுமி தாயார். நந்திதேவருடன் சிவலிங்கம் இந்த சன்னிதியில் எழுந்தருளி உள்ளார். 'கிரண் உற்சவ்' என்பது இங்கு நடைபெறும் பெரிய விழா. ஜன., 31 முதல் பிப்.,2க்குள் மூன்று நாட்களும், நவம்பர் 9--11ல், மூன்று நாட்களும் இந்த நிகழ்ச்சி நடைபெறும். முதல்நாள் சூரியனின் கதிர்கள் தாயாரின் பாதங்களிலும், மறுநாள் மார்பு பகுதியிலும், அடுத்த நாள் முழு உடலிலும் படும். சூரிய கதிர்கள் உள்ளே நுழையும் வகையில், விசேஷ வடிவில் ஜன்னல் உள்ளது. இது, மேற்கு பார்த்த கோவில் என்பதால், மாலையில் தான் இந்த நிகழ்வு நடக்கும். லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவுக்கு வருவர். இதைக் காண்பவர்கள், வாழும் காலத்தில், செல்வமும், வாழ்வுக்குப் பின், மோட்சமும் பெறுவர் என்பது ஐதீகம். அனைவருக்கும் எல்லா வளங்களையும் தர, லட்சுமி தாயாரை பிரார்த்திப்போம். தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !