உள்ளூர் செய்திகள்

மாலை நேர திருமணம்!

பொதுவாக காலையில் திருமணம் செய்வது தான் வழக்கம். ஆனால், மாலை நேர திருமணம் தான், செல்வலட்சுமி நம் வீட்டுக்கு வர உகந்த நேரமாக ஒரு காலத்தில் இருந்துள்ளது.இப்போதும் கூட சில வீடுகளில், மாலை நேரத்தில் திருமணத்தை நடத்துகின்றனர். இந்த திருமணத்துக்கு காரணமான பண்டிகை, தீபாவளி. மாலையில் விளக்கேற்றும் நேரத்தில், வீட்டிற்கு மகாலட்சுமி வருவதாக ஐதீகம். அந்நேரத்தில் அவள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பாள். ஒருவர் மகிழ்வுடன் இருக்கும் சமயத்தில், அவரிடம் என்ன கேட்டாலும் கிடைக்கும்.பாற்கடலில் பிறந்த மகாலட்சுமியை, திருமால் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். இந்த விருப்பத்தை ஒருநாள் மாலையில், மகாலட்சுமியிடம் தெரிவித்தார். மகிழ்வுடன் இருந்த லட்சுமியும் சம்மதித்தாள். தேவர்கள் வரிசையாக விளக்கேற்றி அலங்காரம் செய்தனர். திருமணம் கோலாகலமாக நடந்தது. தீபங்களை வரிசையாக ஏற்றுவதை, தீபாவளி என்பர்.தீபம் + ஆவளி என, இதைப் பிரிப்பர். ஆவளி என்றால் வரிசை. வரிசையாக தீபம் ஏற்றுதல் என்ற பொருளில், தீபாவளி என்ற பெயர் அமைந்தது.இதில் இன்னொரு தகவலும் புதைந்துள்ளது. மாலையில் திருமணம் நடத்தியதால் தான், மணமக்கள் சூடும் பூ ஆரத்துக்கு, மாலை என்றே பெயர் வந்தது. தீபாவளியை தமிழகத்தில் ஒருநாளே கொண்டாடுகின்றனர். ஆனால், வடமாநிலங்களில் ஐந்து நாள் விழா நடக்கும். தீபாவளிக்கு இரண்டு நாள் முன், 'தன்தேராஸ்' கொண்டாடப்படும். 'தன்' என்றால் தனம் அல்லது செல்வம். தேராஸ் என்றால் பதிமூன்று. பவுர்ணமி கழிந்த, 13ம் நாளில் (திரயோதசி திதி) செல்வ வளத்துக்காக, குபேரனுக்கு பூஜை நடத்துவர். தீபாவளிக்கு முதல் நாள் நரக சதுர்த்தசி. அன்று, நரகாசுரனை விஷ்ணு கொன்றதை நினைவுபடுத்தி, ஆடிப்பாடுவர். மூன்றாம் நாள் தீபாவளி. விஷ்ணுவுக்கு நன்றி தெரிவித்து, விளக்கேற்றுவர். சிலர், ராவணனை வென்ற ராமன், அயோத்திக்கு திரும்பிய நாளாகக் கருதி தீபமேற்றுவர். தமிழகத்தில் தீபம் ஏற்றுவது குறைவு. பதிலாக, பட்டாசு வெடித்து, ஒளிப்பிழம்பாக்குவர். தீபாவளி கொண்டாட செல்வம் தந்த லட்சுமி தாயாருக்கு, நன்றி தெரிவித்து பூஜை செய்வர். வங்காளத்தில் காளிக்கு பூஜை நடக்கும்.நான்காம் நாள், கோவர்த்தன பூஜை நடக்கும். பெருமழையிலிருந்து மக்களையும், பசுக்களையும் காக்க கோவர்த்தன மலையை குடையாக தன் விரலில் ஏந்தி பிடித்த கிருஷ்ணருக்கு, அன்று பூஜை செய்யப்படும். தானியங்களை குவித்து வைத்து, 'அன்னகுட்' என்ற பெயரில், சமையல் செய்து மக்களுக்கு விநியோகிப்பர். கடைசி நாள், 'பாஜ் துஜ்' விழா. அதாவது, சகோதர, சகோதரிகள் தினம். தங்கள் சகோதரர்களுக்கு, உணவு சமைத்து ஊட்டி விடுவர், சகோதரிகள். எமனின் சகோதரி எமி என்ற யமுனா, இவ்வாறு செய்ததன் அடிப்படையில், இந்த நிகழ்ச்சி நடக்கிறது. தேவலோக சிற்பி விஸ்வகர்மாவுக்கும் பூஜை செய்வர்.நாமும், தீபாவளியை இவ்வாண்டு நவ., 2 முதலே கொண்டாடுவோம்; பண்டிகைகளை அர்த்தமுள்ளதாக்குவோம். - தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !