பசுமை பட்டாசுகள் என்றால் என்ன
எல்லாமே பசுமை சூழலுக்கு மாறி வரும் நிலையில், 'பசுமை பட்டாசு' குறித்தும் பரவலாக பேசப்படுகிறது. சுற்றுச் சூழலுக்கு ஏற்ற பட்டாசு வகைகளை, மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் உள்ள தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம், 'நீரி' கண்டுபிடித்துள்ளது.சாதாரண பட்டாசு போலவே இருக்கும் இவை வெடிக்கும் போது, குறைவாகவே மாசுபடுத்தும். வழக்கமான பட்டாசுகளுடன் ஒப்பிடும்போது பசுமை பட்டாசுகள், 40 முதல் 50 சதவீதம் குறைவான நச்சுக்களை வெளியிடும். இதனால், சுவாச சம்பந்தமான நோய் வராமல் தடுக்கப்படுகிறது.மேலும், இவற்றில் பயன்படுத்தப்படும் ரசாயனப் பொருட்கள், வழக்கமான பட்டாசுகளில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களில் இருந்து மாறுபட்டவை. அதற்கான புதிய ரசாயன கலவை சூத்திரத்தை, 'நீரி' உருவாக்கியுள்ளது.பொதுவாக, பசுமை பட்டாசுகள் தன்மை, நான்கு வகைப்படும்.முதலாவது, தண்ணீரை உருவாக்கும் பட்டாசுகள்.- இந்த வகை பசுமை பட்டாசுகள், வெடித்த பின், கரியாக மாறாமல், நீர்த்துளிகளாக உருமாறிவிடும். அதில், கந்தகம் மற்றும் நைட்ரஜன் வாயுக்கள் கரைந்து விடும். இந்த வகை பட்டாசுக்கு, 'வாட்டர் ரிலீசர்' என்று, பெயரிட்டுள்ளனர்.இரண்டாவதாக, கந்தகம் மற்றும் நைட்ரஜன் வாயுக்களை குறைவாக வெளியிடுபவை. இதற்கு, 'ஸ்டார் பசுமை பட்டாசு' என்று பெயர். இந்த வகை பட்டாசில், ஆக்சிஜனேற்றம் செய்யும் திறன் கொண்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. அடுத்ததாக, அலுமினியம் குறைவாக பயன்படுத்தப்படும் பட்டாசுகள். சாதாரண பட்டாசுகளுடன் ஒப்பிடும்போது, இந்த வகை பட்டாசில், 50 முதல் 60 சதவீதத்திற்கும் குறைவான அலுமினியம் பயன்படுத்தப்படுகிறது. எனவே, இதற்கு, 'சேபல் - சேப் மினிமல் அலுமினியம்' என்று பெயரிடப்பட்டுள்ளது.'அரோமா பட்டாசு' வகைகளை வெடிக்கும்போது, தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் குறைவாக வெளியாவதோடு, நறுமணமும் வீசும்.பசுமை பட்டாசுகள் பற்றி, 'நீரி' மையம் ஆராய்ச்சி செய்திருந்தாலும், நம் நாட்டில் இன்னும் முழுமையாக அவற்றை யாரும் தயாரிக்கவில்லை என்பதே நிதர்சனம். அவ்வாறு பசுமை பட்டாசுகள் தயாரிக்கப் பட்டிருந்தாலும், சுற்றுப்புற சூழல் அமைச்சகம் நிர்ணயித்துள்ள தரக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு, சான்றிதழ் பெற்ற பின்பே, விற்பனைக்கு எடுத்து செல்ல முடியும். எனவே, வணிக ரீதியாக பசுமை பட்டாசுகள், சந்தைக்கு வர சில காலம் ஆகும். தொகுப்பு: எம்.விக்னேஷ்