உள்ளூர் செய்திகள்

என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்... (21)

பெட்ரோல், டீசல், வாகனங்கள், கிரேன், சாட்டிலைட், கம்ப்யூட்டர் இல்லா அந்த நாட்களில், நம் ஆட்கள் எப்படி தஞ்சாவூர் கோபுரம் அமைத்தனர்? சீர்காழி, சிதம்பரம், மலைக் கோட்டை, மீனாட்சியம்மன் கோவில், விருத்தீஸ்வரர், வேளாங்கண்ணி, நாகூர் தர்கா என்கிற அத்தனை பிரமாண்டங்களும் எப்படி உருவாக்கப்பட்டன?இதைப் பற்றின பெருமையோ, பெருமிதமோ நமக்குண்டா? நம் முன்னோர்களின் சக்தியையும், புத்தியையும் நாம் உணர்கிறோமா? அவற்றை பாதுகாக்கிறோமா? சிலையைக் கூட திருடி, கடத்திக் காசாக்குகிறோம்!அமெரிக்காவின் ஒவ்வொரு அற்புதத்தையும் - பிரமாண்டத்தையும் பார்க்கும் போது, அவற்றை ரசிப்பதற்கிடையில், நம்மால் இப்படி உருவாக்க முடியாதா... என்ன இல்லை, நம் திருநாட்டில் என்கிற கோபம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.இப்போது நாம், தலைநகரம் வாஷிங்டனில் இறங்கி இருக்கிறோம். நியூயார்க் பிசினஸ் மையம் என்றால், இது, பார்லிமென்ட்; அரசு இயங்கும் - இயக்கப்படும் நகரம். நேரான - தூய்மையான சாலைகள், அளந்தெடுத்துக் கட்டின கட்டடங்கள், அருங்காட்சி, பொருட்காட்சி கள் என அமரிக்கையான நகரம்.சாலை நெடுக்க, ஓரங்களில் தீயணைப்புக் குழாய்கள் அமைத்திருக்கின்றனர். படகுக்கு கால் முளைத்தது போல, சக்கரங்கள் அமைத்து - பயணிகளை அமர வைத்து சுற்றிக் காண்பிக்கின்றனர். பார்லிமென்ட்டின் எதிரே, கண் எட்டும் தூரத்தில், ஸ்பேஸ் சென்டர் - எல்லாரையும் அழைக்கிறது. இலவசம் என்பதால் கூட்டம் அள்ளுகிறது.உள்ளே ராக்கெட் பாகங்கள், ராக்கெட்கள், விமான ஏவுகணைகள் எல்லாம் அந்தரத்தில் போஸ் கொடுக்கின்றன. ஏதோ ராக்கெட் வாங்குவதற்கு, ஆர்டர் கொடுக்க வந்த மாதிரி, எல்லாரும் விசாரிக்கின்றனர்; ஆராய்கின்றனர்.ராக்கெட் ‌ஷோ ரூம்!பசங்களை ஈர்க்க ஜமாக்ஸ் தியேட்டர்கள்! அடுத்த தெருவில் இறங்கினால் நியூசியம் செய்திகள். மீடியா தொடர்பான சங்கதிகளைத் தோரணமாக்கி இருக்கின்றனர். இதற்கான காட்சியகம், திரைப்படம் என லிஸ்ட் போட்டு, அனுமதிக் கட்டணமாக, பெருந்தொகையை கறந்து விடுகின்றனர்.அந்த மிரட்டலுக்குப் பயந்து, வேணாம் ஆளை விடுங்கள் என்று வெளியேறி விட்டோம். வாஷிங்டனைக் சுற்றி, சொல்லி கொள்ளும்படி காட்சிகள் நிறைய கொட்டிக் கிடக்கின்றன. வியட்நாம் மெமோரியல் - வியட்நாம் போரில் இறந்த அமெரிக்கர்களை அடக்கம் செய்து, அவர்களுக்கு அங்கு மரியாதை செய்யப்படுகிறது.லிங்கன் மாளிகை!அருங்காட்சியகங்களுக்குச் சென்றால், ஆபிரகாம் லிங்கனில் ஆரம்பித்து ஒபாமா வரை, அத்தனை ஜனாதிபதிகளுடனும் கைகோர்த்து, தோள் கோர்த்து நின்று படம் எடுத்துக் கொள்ளலாம்!கொஞ்சம் கூட வித்தியாசம் தெரியாத அளவிற்கு எல்லாமே மெழுகு வார்ப்புகள்!வெள்ளை மாளிகை என்று எப்போதும் பரபரப்பாய் பேசப்பட்டு, காட்டப்பட்டு - மனதிற்குள் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் அதைப் பார்க்காவிட்டால் எப்படியாம்!உள் பிரமாண்டத்தை அறிய முடியாதபடி, 200 மீட்டர் தள்ளியே நம்மை நிறுத்தி விடுகின்றனர். எதிர் மைதானத்தில் இருந்து பார்த்து விசாரித்துவிட்டு திரும்ப வேண்டியது தான். வெள்ளை மாளிகைக்கு முன்னால், எப்போதும் ஏதாவது - யாராவது கொடி பிடித்து கோஷங்கள் எழுப்பிக் கொண்டிருப்பார்களாம். அன்றும் கூட ஒரு கோஷ்டி தொண்டையைக் கிழித்துக் கொண்டிருந்தது.அது அமெரிக்காவின் எதிர்கட்சியோ, எதிரிகளோ அல்ல; வேறு நாட்டினர்! வேறு நாட்டினர் அங்கு வந்து ஏன் போராட்டம் நடத்த வேண்டும்? எல்லாம் உலக நாடுகளின் பார்வையைக் கவரத்தான்!தங்கள் நாட்டுப் பிரச்னையைச் சொல்லி, 'நீதி கொடு... நிதி கொடு... ஒடுக்காதே... தடுக்காதே... நசுக்காதே... மிதிக்காதே... உரிமை கொடு...' என்று உண்ணாவிரதம் இருப்பவர்களும் உண்டு. நம் ஆட்களும் கூட, அன்னாஹசாரே உண்ணாவிரதம் இருந்த போது, அங்கு போய் உண்ணாவிரதம் இருந்திருக்கின்றனர்.நகரத்தை விட்டு கொஞ்சம் அப்பால் இருந்தால் கூட, அப்பல்லோ மியூசியம் மனதை அதிர வைப்பது உண்மை. அங்கு முதன் முதலில் சந்திரனுக்குச் சென்ற ஆம்ஸ்ட்ராங் உபயோகித்த பொருட்கள், கொண்டு சென்ற உபகரணங்கள், ராக்கெட் என எல்லாம் காட்சிப் பொருளாக்கப்பட்டுள்ளன.விமானங்களில் எத்தனை ரகங்கள் உண்டோ, அத்தனையும் அங்கே தொங்குகின்றன. உயர் ரகம், குட்டி ரகம், அதிகபட்ச வேகம் என, ஆரம்பித்து எல்லாமே ஜோர்!அப்புறம்...இவ்வளவு தூரம் போய்விட்டு பார்லி மென்ட்டை பார்க்காவிட்டால் எப்படியாம்! பார்லிமென்ட் கட்டடத்திற்குள் விசிட்டர்களை குறிப்பிட்ட நேரத்தில் அனுமதிக்கின்றனர். ஆனால், ஏகப்பட்ட பாதுகாப்பு, சோதனைகள்! நுழைவுக் கட்டணமில்லை.உள்ளே நுழைந்ததுமே, கும்பல் கும்பலாய் கைடுகளிடம் ஒப்படைக்கப்படுகிறோம். ஒவ்வொருவருக்கும் இயர் போன் போல, ஒரு உபகரணம் கொடுத்து, அவற்றை எப்படி அணிய வேண்டும் எனக் காட்டுகின்றனர்.ஒரு கைடு பேசுவது, அந்தந்த கோஷ்டிக்கு மட்டுமே கேட்க வேண்டும். மற்றவர்களுக்கு இடைஞ்சலாகி விடும் என்பதால், உள்சுற்றுப் பேச்சுவார்த்தை!அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் விளக்கங்கள் கொடுத்தனர். ஆனால், நமக்குத்தான் எதுவும் விளங்கவில்லை. பார்லிமென்ட் வளாகத்தைச் சுற்றிக் காட்டும் முன் - பிரமாண்டத் திரையில், அமெரிக்கச் சுதந்திரப் போர் பற்றிக் காட்டுகின்றனர். சும்மா சொல்லக் கூடாது... அபாரம்!சீர்பட்டு, சினைப்பட்டு, செம அடிபட்டுத்தான் அண்ணன்கள் அமெரிக்காவை உருவாக்கி இருக்கின்றனர். மத்திய வளாகத்திற்கு வந்த போது, ஒரு ஜோடி அங்கு வைத்து மணம் முடித்தனரா எனத் தெரியவில்லை. படமெடுத்து சிலாகித்துக் கொண்டிருந்தனர்.நடு மையத்தில் அண்ணாந்து பார்த்தால், பிரமிப்பான ஓவியங்கள். சுவரில் சுற்றிலும் அமெரிக்க வரலாறுகள்.இத்தனை உயரத்தில் எப்படி பெயின்டிங் செய்திருக்கின்றனர் பாருங்கள்... அற்புதம்! மார்வலஸ்! பென்டாஸ்டிக்... என்று உச்சுக்கொட்டல்கள்! நிச்சயம் அந்த பெயின்டிங்குகள் அற்புதம் தான். மறுக்கவில்லை. டியர் ப்ரண்ட்ஸ்! எங்கள் நாட்டிற்கும் வந்து எங்களது பாரம்பரிய, புராதனங்களைப் பாருங்களேன்! பல நூற்றாண்டுகளுக்கு முன், வரைந்த ஓவியங்கள் இங்கே இன்னமும் அழியா காவியங்களாக மின்னுகின்றன.ஒரு பார்லிமென்ட்டிற்கே இப்படி மெச்சிக் கொள்கின்றனர்! நாடு முழுக்க ஆயிரக்கணக்கான கோவில்களில், முத்திரைப் பதித்துள்ள நம்மவர்களை நாம் ஆராதிக்கிறோமா, பராமரிக்கிறோமா, வேண்டிய பிரபல்யம் கொடுத்து வெளிநாட்டினரை ஈர்க்கிறோமா?நம் நாட்டில் இல்லாத வனப்பா... பிரமிப்பா? நம்மிடம் இல்லாத சுற்றுலா தலங்களா? வெளிநாட்டுக்கு அலை பாய்கிறோம் - நம் மாநிலத்திலும் - பிற மாநிலங்களிலும் உள்ள பிரமாண்டங்களையெல்லாம் நாம் பார்த்து விட்டோமா? எப்போது அவற்றைப் பார்க்கப் போகிறோம்? நம்மிடம் எல்லாம் இருக்கிறது.அமெரிக்காவை முழுவதும் சுற்றி விடவில்லை. அது சாத்தியமுமில்லை. சுற்றியவரை - பார்த்து - கேட்ட - கவனித்த ஆச்சரியங்களைக் கொஞ்சம் அசை போடத் தோன்றுகிறது. அங்கேயுள்ள அவலங்களை விட்டு விடுவோம். நல்லதை மட்டும் முயற்சிப்போமே!அங்கே —* மனிதர்களை மதிக்கின்றனர். ஏற்றத்தாழ்வு வைத்துப் பழகுவதில்லை. கனிவான பேச்சு!* சின்ன வயதிலிருந்தே, தன்னம்பிக்கையை ஊட்டி வளர்க்கின்றனர். சொந்தக் காலில் நிற்க வைக்கின்றனர்.* வாரத்தில் ஐந்து நாள் கடுமையான உழைப்பு, இரண்டு நாள் அனுபவி ராஜா அனுபவி!* படிப்புக்கு முக்கியத்துவம்! படிக்கும் போதே, கவுரவம் பார்க்காமல் வேலை!* சுத்தம் சுகாதாரம்!* சட்ட திட்டங்களை மதிக்கின்றனர். மதிக்க வைக்கின்றனர்.* இயற்கையை அழிப்பதில்லை.* முன்னேற்ற மற்றும் வளர்ச்சித் திட்டங்களை முடக்குவதில்லை. ஆட்சி மாறினதும் காட்சி மாறுவதில்லை.* ஆக்கப்பூர்வங்களில் கொள்ளையடித்து - சிதைப்பதில்லை.* 50 மாநிலங்கள் இருந்தாலும், உள்ளுக்குள் - மொழி - நதி- நீர் - மின்சாரப் பிரச்னையோ - பிரிவினையோ தெரியவில்லை.* வீட்டுக்குள் பூட்ட வேண்டிய ஜாதி - மதத்தை வெளியே விளம்பி, அப்பாவிகளைத் தூண்டி - கலவரப்படுத்துவதில்லை.* ஓட்டுக்காக - பிரித்தாள்வதில்லை. எல்லாருக்கும் ஒரே சட்டம்.* விவசாயத்தை வளர்க்கின்றனர்.* தீவிரவாதங்களை ஆதரிப்பதில்லை; ஒடுக்குகின்றனர். நியாயத்தை காவு கொடுப்பதில்லை.* அரசியல் அவியல் - சினிமா ஆராதனைகள் இல்லை.* ஊழலற்ற அரசு, தொழில் அபிவிருத்தி... இப்படிப் பலப்பல!நம் நாட்டில் என்ன இல்லை? இவையெல்லாம் நமக்கு முடியாதா? யோசிங்கப்பா! — முற்றும் —


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !