உள்ளூர் செய்திகள்

நானா போனதும்; தானா வந்ததும் (2)

நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த அச்சு ஆபீசில், பழைய காலத்தில், அச்சு இயந்திரங்களில், ரப்பர் உருளைகள், அச்சு எழுத்துக்களின் மீது மையை ஒரே சீராக தடவும்.அந்த ரப்பர் உருளைகள் தேய்ந்து போனாலோ, மேடும் பள்ளமுமாக ஆகி விட்டாலோ, உருளையின் மீது மை பட்டும், படாமலும் போய் விடும். அதற்கு தகுந்தாற்போல் எழுத்துக்களும், பட்டும் படாமலும் இருக்கும். தவலை போய் விட்டது என்றால், தலை போய் விட்டது என்று அச்சாகும்.ஆகவே, ரப்பர் உருளைகளை அவ்வப்போது புதுப்பித்துக் கொண்டிருப்பர்.ஒரு நாள், மானேஜர் மிகவும் கோபமாக என்னைக் கூப்பிட்டார். 'உங்களுக்கு அச்சு பற்றி அக்கறையே இல்லையா? கதை எழுதித் தந்து விடுவீர்கள். அது எப்படி அச்சாகிறது என்று கொஞ்சமாவது உங்களுக்கு கவலை உண்டா? பாருங்கள் இந்த பிரதியை. எத்தனை இடத்தில் மை பட்டும் படாமலும் இருக்கிறது. தினமும் ஒரு தரம் பிரஸ்சுக்கு போய், இதழ் எவ்வாறு அச்சாகிக் கொண்டிருக்கிறது என்று பாருங்கள்...' என்றார்.மகிழ்ச்சியுடன் நான் ஒப்புக் கொண்டேன்; மறுநாள் சென்றேன்.அச்சு ஆபீசில் ஓடிக் கொண்டிருந்த பிரதியை வாங்கிப் பார்த்து; திடுக்கிட்டேன். பல இடங்களில் சொட்டை, சொட்டையாக எழுத்துக்கள் விடுபட்டிருந்தன.மிஷின் மேனிடம் கோபமாக நான், 'வேறு உருளை மாற்றுவதற்கென்ன?' என்று கத்தினேன்.அவன், 'சூப்பர்வைசர் வாங்கித் தரவில்லை...' என்றான்.என் கோபம் பல மடங்காகி விட்டது. 'உடனே கம்ப்ளைன்ட் எழுதிக் கொடு. 'இந்தக் குறிப்பிட்ட சூப்பர்வைசர் ரப்பர் உருளை வாங்கித் தர மறுக்கிறார்...' என்று. நான் இப்போதே மானேஜரிடம் கம்ப்ளெயின்ட் தருகிறேன்...' என்று கத்தினேன்.அவன் பயப்பட்டான். 'வந்து வந்து...' என்று இழுத்தான்.நான் படு கோபத்துடன், 'ஏண்டா பயந்து சாகுறே... கோழைகள் கோடி தரம் சாகின்றனர். இந்தா பேனா... இதோ பேப்பர்...' என்று டர்ரென்று ஒரு பேப்பரை ரீலிலிருந்து கிழித்து, அவனிடம் வீசினேன்.நான் போட்ட சப்தத்தால் கும்பல் கூடி விட்டது.மிஷின்மேன் தயங்கினான். பேனாவைத் தொடவே இல்லை. நான் கத்தினேன்... 'எழுது...'ஒரே நிசப்தம். சுற்றிலும் இருந்தவர்களின் முகத்தில் லேசான புன்னகை. அதைக் கவனித்த நான், 'என்னய்யா சிரிப்பு...' என்று கத்தினேன்.ஒரு கீச்சுக் குரல், 'அவனுக்கு எழுதத் தெரியாது சார்...' என்றது!***சுவாமி சின்மயானந் தாவால் ஈர்க்கப்பட்ட பல்லாயிரம் பக்தர்களில் நானும் ஒருவன். அவர் நடத்திய கீதை ஞான யக்ஞத்தால் மிகவும் கவரப்பட்டவன்.சென்னையில் யக்ஞம் முடிந்ததும், ஏதாவது புண்ணிய தலங்களுக்கு பக்தர்கள் அனைவரையும் கூட்டிச் செல்வர்.ஒரு சமயம், குறிப்பிட்ட சில பக்தர்களை மட்டும் வட மாநிலங்களில் இமயமலை சாரலில் இருந்த அவரது ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றனர்.அது, அவரது குருநாதரான தபோவன மகராஜ் வசித்த இடம்.கங்கைக் கரையில் உயர்ந்த மலை மீது உத்தரகாசியில் மகானின் குடில் இருந்தது.ரிஷிகேசத்திலிருந்து, தாசு என்ற இடம் வரை பஸ் வசதி இருந்தது. சுவாமிஜி அனைவரையும் தாசுவில் தங்க வைத்தார்; இரவு ஆகி விட்டது. அங்கிருந்து காலையில் எழுந்து, 32 கி.மீ., தொலைவிலுள்ள உத்தரகாசி எனும் இடத்திற்கு நடந்துதான் செல்ல வேண்டும். மலை ஏற்றம் காரணமாக கோஷ்டியினரால் வேகமாக நடக்க முடியவில்லை.எங்கள் கோஷ்டியில் இளைஞர்கள், வயதானவர்கள், ஆண்கள், பெண்கள் என்று பல ரக பக்தர்கள். அதில், பித்தவெடி கால் பக்தரான ஒரு பெண்மணியும் இருந்தார்.வயதோ, 70க்கு மேல்; காலிலோ பித்த வெடிப்பு. மனசிலோ பிடிவாதமான பக்தி பித்து. எங்களுடன் நடந்தே வருவது என்று, கூடவே வந்து கொண்டிருந்தார்.அன்ன நடை என்று வர்ணிக்க முடியாது; ஆமை நடை என்று வேண்டுமானால் சொல்லலாம்.அந்த அம்மாவுடன் நடப்பது எல்லாருக்கும் கஷ்டமாக இருந்ததால், அவருடைய ஸ்பீடுக்கு அவர் வந்து சேரட்டும் என்று எல்லாரும் முன்னால் போய் விட்டோம்.ஆனால், சுவாமிஜியால் எந்த பக்தனையும் அம்போ என்று விட்டு விட முடியாது. கவலையுடன் காத்திருந்து, காத்திருந்து, அந்தப் பாட்டி அம்மாவை எங்கள் கோஷ்டியுடன் கொண்டு வந்து சேர்ப்பார். ஒரு கி.மீ., தூரம் எங்களுடன் சுவாமிஜி நடப்பார். அந்த பாட்டி அம்மாளைக் காணவில்லையே என்று வந்த வழியே மீண்டும், முக்கால் கி.மீ., தூரம் இறங்கி பாட்டியம்மாவை அழைத்து வந்து எங்களோடு இணைப்பார்.இருட்டிக் கொண்டு வந்தது. போக வேண்டியது இன்னும், 2 கி.மீ., தூரம். இருட்டி விடுமே என்ற பயம் எல்லாருக்கும் ஏற்பட்டது.'நொண்டி ஆடு வந்துதானே பட்டி சாத்த வேண்டும்...' என்று பழமொழி சொல்வர்.பாட்டியம்மா வந்து தானே நாங்கள் அந்த இடத்துக்கு போக முடியும்... காத்திருந்தோம். சுவாமிஜி, 'இருங்கள்... அந்த அம்மாவிடம் ஒரு மந்திரம் சொல்லி விட்டு வருகிறேன்...' என்று எங்களிடம் கூறிவிட்டு, கீழே இறங்கி பின்தங்கிய பாட்டியம்மா வந்து கொண்டிருந்த இடத்திற்கு சென்றார்.என்ன மந்திரோபதேசம் நடந்ததோ... பத்து நிமிடத்தில் பாட்டியம்மாள் வேகமாக வந்து எங்களுடன் சேர்ந்து விட்டார்; அதற்கப்புறம் அவர் பின்தங்கவே இல்லை. எங்களுக்கு சரியாக நடந்து வந்தார். புதிய பலமும், தெம்பும் பெற்றவர் போல் காணப்பட்டார். பக்தர்கள் அனைவருக்கும் ஆச்சரியம். சுவாமிஜியிடம் நெருக்கமான ஒரு பக்தர் கேட்டார்... 'அந்த மந்திரத்தை எங்களுக்கும் சொல்லித் தரக் கூடாதா? அது என்ன மந்திரம்?'சுவாமிஜி அவருக்கே உரிய அழகான பெரிய சிரிப்பை சிரித்துவிட்டு, 'கரடி மந்திரம்' என்றார்.எல்லாரும் அதைக் கேட்க ஆசைப்பட்டோம்.சுவாமிஜி சொன்னார்... 'நான் அந்த அம்மாளிடம் வேறொன்றும் சொல்லவில்லை... 'பாட்டி... நீங்கள் தனியாக வருவது சரியில்லை. 7:00 மணிக்கு மேல் இங்கெல்லாம் நிறைய கரடிகள் சஞ்சரிக்கும் என்கின்றனர்...' என்றேன்; இதுதான் அந்த மந்திரம்!'அந்த பாட்டி உட்பட, அனைவரும் சிரித்தோம்.— தொடரும்.பாக்கியம் ராமசாமி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !