உள்ளூர் செய்திகள்

நானா போனதும்; தானா வந்ததும்!

அமிதாப் பச்சன் மாதிரி உயரம். முகச்சாயல் கூட, ஏறக்குறைய அப்படித்தான். நிறம் நல்ல சிவப்பு. 'தசா புசா'வென்று, முழங்கால் வரை கிடந்த குர்தா. வெகு கம்பீரமான தோற்றம். இப்படி ஒரு பேர்வழி, எங்கள் ஆபீசுக்கு டிரைவராக வந்து சேர்ந்தார்.சில பேருக்கு, தோற்றம் பிரமாதமாக அமைந்து விடுகிறது. அதுவே அவர்களுக்கு, துரதிருஷ்டமாகவும் ஆகி விடுகிறது.புதிய டிரைவரின் விஸ்வரூபத்துக்கும், என் எஜமானராகிய ஆசிரியரின் சிறிய தோற்றத்துக்கும், சம்பந்தமே இல்லை.அந்த டிரைவர், ஆசிரியரின் காரை ஓட்ட, புதிதாக அமர்த்தப்பட்டிருந்தார்.அந்த ஆள் வேலைக்குச் சேர்ந்த தினம், போர்ட்டிகோவில் காரை நிறுத்திவிட்டு, ஆசிரியரின் வரவுக்காகக் காத்திருந்தார்.தற்செயலாக வெளியே வந்த நான், அந்த டிரைவரைப் பார்த்ததும் திகைத்து விட்டேன். மதிப்புக்குரிய, ஒரு பெரிய செட்டிநாட்டுப் பிரமுகரின் ஆஜானுபாகுவான சாயல், அந்த டிரைவரிடம் காணப்பட்டதால், நான் கொஞ்சம் குழம்பி விட்டேன். (கொஞ்சம் என்ன, குழம்புவதும், குழப்புவதும்தான் எனக்குத் தானாக வந்து அமைந்த பொழுதுபோக்கு!)'நமஸ்காரம்...' என்று வினயமாகவும், அவசரமாகவும், அவருக்கு ஒரு கும்பிடு போட்டேன்.'ஐயா... உள்ளே வந்து சோபாவில் உட்காரலாமே... இதோ, ஆசிரியர்கிட்டே போய் சொல்கிறேன்...' என்றேன் பரபரப்புடன், பணிவும் மரியாதையுமாக.அந்த ஆசாமி, 'இல்லே... பரவாயில்லை... நான் பார்த்துக்கறேன்...' என்று சொல்லி, சற்று நகர்ந்து, கார் கண்ணாடியின், விண்ட் ஸ்கிரீனைத் துடைத்தார்.எனக்கு பகீரென்றது.'இவர்தான் ஒரு கால் புதிதாக அமர்த்தப்பட்ட டிரைவரோ...' எனக்கு ஏற்பட்ட வியப்பை, உடனடியாக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளாவிட்டால், மண்டை வெடித்து விடும் போலிருந்தது.உடனடியாக, எடிட்டோரியலுக்கு விரைந்து, நண்பர்கள் ரா.கி.ர.,விடமும், புனிதனிடமும், 'வாசலிலே (பிரபல பிரமுகரின் பெயரைச் சொல்லி) வந்து நின்று கொண்டிருக்கிறார்... சோபாவில் உட்கார சொன்னேன்... உட்காராமல், கார்கிட்டேயே நிற்கிறார்... நீங்க வேணும்ன்னா போய்க் கவனிக்கிறீங்களா?' என்றேன்.ரா.கி.ர.,வும், புனிதனும், பிரமுகரை வரவேற்க விரைந்தனர்.இதற்குள், தன் அறையிலிருந்து வெளியே வந்து விட்டார் ஆசிரியர்.அந்தச் சமயம் பார்த்து, புது டிரைவர் (கம்பீர புருஷர்) போர்ட்டிகோவுக்கு சற்றுத் தூரமாக, புளியமரத்தடியில், ஒரு பழைய நாற்காலியை ஆராய்ந்து கொண்டிருந்தார்.அதே நேரம், ஆசிரியரை வழி அனுப்ப, வெளியீட்டாளர் தன் அறையிலிருந்து வெளியே வந்தார்.'புது டிரைவர் எங்கே போய்ட்டான்?' என்று, கடுகடுத்தபடி பார்வையை, நாலு பக்கமும் சூடாக ஓட்டினார் வெளியீட்டாளர்.புளியமரத்தடியில், கம்பீர டிரைவர் நாற்காலி ஆராய்ச்சியில் இருந்தார்.வெளியீட்டாளருக்கு கடுங்கோபம் வந்து விட்டது. ஆசிரியர் புறப்படத் தயாராக நிற்கிறார். டிரைவர் வண்டி அருகே நிற்காமல், தள்ளிபோய் எதையோ பார்த்துக் கொண்டிருக்கிறானே!ஒரு பெரும் சப்தம் போட்டார். ஆசிரியர் விஷயமாக, துளி அசவுகரியமோ, தாமதமோ ஏற்பட்டால், அவருக்கு பொறுக்காது. கத்தி தள்ளி விடுவார்.'ஏண்டா முண்டம்... அங்கே என்னடா ஆராய்ச்சி... கார்கிட்டே நிற்க வேண்டியது தானே... ஆசிரியர் புறப்படற நேரம்ன்னு தெரியாது?'வேலையில் சேர்ந்த முதல் நாளே, இத்தனை மரியாதை!வெளியீட்டாளர் கத்தின கத்தலில், ஆறு அடி அமிதாப்பச்சனின் உடம்பு நடுநடுங்கி விட்டது. விழுந்தடித்து ஓடிவந்து, கார் கதவை திறந்துவிட, ஆசிரியர் ஏறி அமர்ந்தார்.புது டிரைவரை பார்த்து வியந்த என் நண்பர்கள், 'அச்சாக அந்த ஆள், நீங்க சொன்ன பெரிய பிரமுகர் சாயலில்தான் இருக்கிறார்... மகா கம்பீரம்... ஆனால், அந்த ஆறடி உயரம், வெளியீட்டாளர் போட்ட அதட்டலில் விழுந்தடித்து ஓடி வந்த பிறகுதான், அவர் டிரைவர் என்று தெரிகிறது...' என்று ஆச்சரியப்பட்டனர்.மறுநாள் ஆசிரியரிடம், எங்கள் குழப்பத்தைச் சொல்லிச் சிரித்தபோது. 'டிரைவர்கள் இப்படிக் கம்பீரமாக இருந்தால், ஓனர்களுக்கு நிச்சயம் அகம்பாவம் ஏற்படாது...' என்று, கூறினார்.எனக்குத் தெரிந்த ஒரு நண்பர், கோவையில் ஒரு கையெழுத்து பத்திரிகை நடத்தி வந்தார். ஓவ்வொரு மாதமும், டாணென்று முதல் தேதியன்று வெளியாகி விடும்.உறுப்பினர், படித்துவிட்டு இன்னொருவருக்கு அனுப்ப வேண்டும். (தபால் செலவு படிப்பவருடையது.)அந்தப் பத்திரிகையில் விஷயமும் அழகு; அதைவிட கையெழுத்தும் மிக அழகு.ஒரு தினம், அந்தக் கோவை நண்பர், ஓர் வாலிபருடன், என்னைச் சந்திக்க வந்திருந்தார். வந்தவருக்கு, வெகு அழகான தோற்றம்... சிவந்த வளப்பமான உடம்பு... அகன்ற கண்கள், தீர்க்கமான நாசி, நடுத்தர வயது... பார்த்தவுடன் பழைய சினிமா நட்சத்திரம், ஆந்திர முதல்வர், என்.டி. ராமாராவ் நினைவு கட்டாயம் ஏற்படும்.கோவை நண்பர் அறிமுகப்படுத்தினார்.'இவர் மிஸ்டர் சந்திரசேகர்... இவர்தான் நீங்கள் ரசிக்கும், கையெழுத்துப் பத்திரிகையின் தூண். பத்திரிகைத் துறையில் புகுந்து, நிறைய சாதிக்க வேண்டுமென்று துடிக்கிறார். நீங்கள் கொஞ்சம் கை தூக்கி விடுங்களேன்...' என்றார்.அந்த ஆளைத் தூக்குவது எளிதான காரியமல்ல. நான் தான் சொன்னேனே என்.டி. ராமாராவ் சைஸ் என்று!இதற்கு பின், அவர் அடிக்கடி என்னைச் சந்திக்க வர ஆரம்பித்தார். அவரை ஒரு நிருபர் மாதிரி நடத்த எனக்குச் சங்கடமாயிருந்தது.இளைஞனாக, சைஸ் கொஞ்சம் சராசரியாக இருந்திருந்தால், ஒரு நிருபரை வேலை வாங்குவது போல, 'இதைப் போய்ப் பாருங்கள். அதைப் போய் பாருங்கள்...' என்று, விரட்டத் தோன்றும்.இவரைப் பார்த்தாலே, 'வாங்க சார்... நமஸ்காரம். உட்காருங்கோ... காபி சாப்பிடுங்கோ...' என்று, எழுந்து நின்று உபசரிக்கத்தான் தோன்றும்.அவர் நாற்காலியில் உட்கார்ந்தால், என் வீட்டு ஹாலுக்குப் பெரிய கம்பீரமாக இருக்கும். அச்சமயம், வேலைக்காரி வந்தால் கூட, பயபக்தியுடன் ஒதுங்கி நிற்பாள்.அவர் காப்பியை எடுக்கும் லாவகம், டம்ளரை பிடிப்பது, தூக்கிச் சாப்பிடுவது, உதட்டை நாசூக்காக கைக்குட்டையில் ஒத்திக் கொள்வது எல்லாமே, வெகு கம்பீரமாக இருக்கும்.'நிழலிலே வளரவேண்டியவை என்று, தாவரங்களில் சில ரகங்கள் இருப்பதுபோல, அவர் ஒரு நிழல் தாவரம். வெயிலில் ஓடி, ஆடி அலைய ஏற்பட்ட சரீரம் அல்ல அவருடையது...' என்று எனக்குத் தோன்றி விட்டது.ஆகவே, ஒப்புக்கு இரண்டொரு, 'அசைன்மென்ட்' கொடுத்துவிட்டு எஸ்கேப்!பல மாதங்கள் கழிந்தன. அவர் திடுமென, ஒரு தினம் ஆஜரானார். கையில் அரை டஜன் ஆப்பிள்.ஒரு, மாதப் பத்திரிகையின் பெயரைச் சொல்லி, 'அங்கேதான் இப்போ சப் - எடிட்டராக வேலை பார்க்கிறேன்...' என்றார்.'பாராட்டுக்கள்...' என்றேன். 'உங்களுக்கு இதுதான் நல்ல அம்சமான வேலை... நிருபர், கிருபர் என்று சிரமப்படுவதெல்லாம், உங்களால் முடியாத காரியம்...' என்றேன்.அவர் ஒரு விரக்தி சிரிப்புச் சிரித்தார்.'எனக்கு நானே எதிரி... மதமதவென்று வளர்ந்து விட்டதால், எனக்கு நிருபர் வேலை தர, யாரும் தயாராக இல்லை என்று தெரிந்து கொண்டேன். 'நீங்க ளெல்லாம் பாவம். அலைய கிலைய முடியாது...' என்று அவர்களாக என்னை ரொம்ப ஒசத்தியாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர்...'நான் சமாதானம் செய்வதுபோல, 'சப் - எடிட்டராக ஒரு பத்திரிகையில் அமர்ந்து விட்டீர்கள்... சந்தோஷம் தானே?' என்றேன்.அவர் வருத்தத்துடன், 'சந்தோஷம் என்று சொல்ல முடியாது. கோபக்கார ஆசிரியரிடம், தினமும் திட்டு வாங்குகிறேன்... 'ஆள் அம்சமாயிருந்தால் மட்டும் பிரயோசனம் இல்லை... மூளையையும் கொஞ்சம் கசக்கிக் கொள்ளுங்கள்... அழகான மக்காக இருப்பதைவிட, அசிங்கமான புத்திசாலியாய் இருப்பது மேல்...' என்று, அடிக்கடி சொல்வார். அவரிடம் வேலை செய்ய சங்கடமாகவும், கஷ்டமாகவும், இருக்கிறது... நிருபர் வேலையே மேல் என்று தோன்றுகிறது. வேலையை விட்டுவிடப் போகிறேன்...' என்றார்.எனக்கு, என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. நல்ல பர்சனாலிடி கூட, சில சமயம் நமக்கு எதிரியாகி விடுகிறது.— தொடரும்.பாக்கியம் ராமசாமி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !