உள்ளூர் செய்திகள்

திருவாதிரைக்கு களி ஏன்?

ஜன., 11 - ஆருத்ரா தரிசனம்'களி' எனும் சொல்லுக்கு மகிழ்ச்சி, நடனம் மற்றும் உணவுப்பொருள் போன்ற அர்த்தங்கள் உண்டு. இம்மூன்றுமே, ஆருத்ரா தரிசன நாயகரான, நடராஜருக்கு சொந்தமானது.அரிசி மாவு அல்லது உளுந்து மாவுடன், கருப்பட்டி மற்றும் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து தயாராகும் களியை, வயதுக்கு வந்த பெண்களுக்கு, உடல் பலத்திற்காக செய்து கொடுப்பர். இன்றும் கூட, கிராமப்புறங்களில், பார்வதி தேவி, பூலோகத்தில் பிறந்த போது, வயதுக்கு வந்த நாளே, திருவாதிரை என்றும், அதன் காரணமாகவே, அவளுக்கு களி படைப்பதாகவும் கூறுவர்.சேந்தனார் என்ற சிவபக்தர், தன் மனைவியுடன் சிதம்பரத்தில் வாழ்ந்து வந்தார். சிவனடியார்களுக்கு உணவளித்து உபசரிப்பது, அவர்களது வழக்கம்.ஒருமுறை, அவ்வூரில் பலத்த மழை பெய்து, அடுப்பெரிக்க வைத்திருந்த விறகெல்லாம் நனைந்து விட்டது. இச்சமயத்தில், சிவனடியார் ஒருவர் அவர்களது இல்லத்திற்கு வந்து விட்டார்.அரிசி சாதம் செய்வது, ஈர விறகால் ஆகாது என கருதிய சேந்தனாரின் மனைவி, அரிசி மாவுடன், வெல்லமும், நெய்யும் கலந்து, ஈர விறகை ஒருவாறாக பற்ற வைத்து, குறைந்த அளவு தீயிலேயே, களி தயாரித்து, அதை சிவனடியாருக்கு படைத்தாள். அன்றைய தினம், பவுர்ணமி நாள்; மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரம்!அதைச் சாப்பிட்ட சிவனடியார், 'தினமும் தயிர் சாதமும், புளியோதரையும், சர்க்கரை பொங்கலும் சாப்பிட்டு பழகிய எனக்கு, தாங்கள் அளித்த களி, மிகப் பிரமாதமாக இருந்தது...' என பாராட்டினார். ஒரு எளிய உணவை, தேனினும் இனிமையானது என பாராட்டியதால், மனம் மகிழ்ந்தனர், அத்தம்பதியர்.மறுநாள் காலையில், நடராஜரை தரிசிக்க சென்ற போது, நடையெல்லாம் களி கொட்டிக் கிடந்ததுடன், நடராஜ பெருமானின் வாயிலும் சிறிதளவு களி ஒட்டியிருந்தது. அப்போது தான், தங்கள் வீட்டிற்கு எழுந்தருளியது, நடராஜப் பெருமான் என்பதை உணர்ந்த தம்பதியர், மனம் உருகி, அவரது பாதத்தில் வீழ்ந்தனர்.அதிலிருந்தே, நடராஜப் பெருமானுக்கு, திருவாதிரை நாளில், களி படைக்கும் பழக்கம் உருவாயிற்று.மார்கழி மாதம், திருவாதிரை அன்று, அதிகாலையிலேயே, சிவாலயங்களில் நடராஜருக்கு திருமஞ்சனம் துவங்கி விடும். பின், எளிய அலங்காரம் செய்து, நடராஜர் நடனமிடுவது போல், மகா தீபாராதனை தட்டை ஆட்டுவர்; அதற்கு ஏற்றாற் போல், வாத்தியங்கள் ஒலிக்கும்; இந்நடனத்தைக் காண்பதில் நமக்கெல்லாம் பெரும் களிப்பு ஏற்படும்.களி உடலுக்கு சத்து தரும் உணவு; இந்த இனிய உணவை திருவாதிரை நாளில் சமைத்து நடராஜருக்கும், சிவகாமி அம்மைக்கும் படைத்து, மனமும், உடலும் வலுப்பெற வேண்டுவோம்!- தி.செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !