உள்ளூர் செய்திகள்

சுதந்திர போராட்டத்தில் பெண் போராளிகள்!

ஆக., 15 - சுதந்திர தினம்சொர்ணம்மாள் காந்திஜியும், கஸ்தூரிபா அம்மையாரும், 1927ல், நாகர்கோவில் வந்தபோது, அவர்களை நேரில் சந்தித்து சுதந்திரப் போராட்டத்திற்கு நன்கொடையாக, தன் நகைகள் அனைத்தையும் வழங்கினார், சொர்ணம்மாள். சத்தியாகிரகப் போராட்டங்களில் கலந்துகொண்டு, பலமுறை சிறை சென்றுள்ளார். *****லட்சுமியம்மாள் கொடி காத்த குமரன் நடத்திய, பேரணிக்கு தலைமை தாங்கிய, பி.எஸ்.சுந்தரத்தின் தாயார், லட்சுமியம்மாள். இங்கிருந்து புலம் பெயர்ந்து, பர்மாவில் வாழ்ந்த போது, அங்கே காந்தி சேவா சங்கத்தை தொடங்கி, கதர் இயக்கத்திற்கு வலு சேர்த்தார். மீண்டும் தாயகம் வந்தபின், காந்திஜியை சந்தித்து, விடுதலைப் போராட்டத்திற்காக, தன் மகனை அவரிடம் ஒப்படைத்தார். லட்சுமியம்மாளும், அவரது மருமகளான சுமித்ரா தேவியும், ராஜாஜி தலைமையில் திருச்செங்கோட்டில் நடைபெற்ற சத்தியாகிரகத்தில் ஈடுபட்டதால், இருவரும் ஆறு மாத கடுங்காவல் தண்டனை அனுபவித்தனர். **** கே.பி.ஜானகி அம்மாள் மதுரையைச் சேர்ந்த நாடகக் கலைஞர் இவர். நாடகங்கள் மூலம் விடுதலை உணர்வை துாண்டியதால், பலமுறை சிறை சென்ற முதல் பெண்மணி, கே.பி.ஜானகி தான். அரசியல் கைதியாக, ஐந்து முறை வேலுார் சிறையில் அடைக்கப்பட்டார். தேசியவாதியான நாடகக் கலைஞர், விஸ்வநாததாஸுடன் இணைந்து நடிக்க பெண் கலைஞர்கள் அச்சமடைந்த போது, துணிவுடன் நடித்தவர். விஸ்வநாத தாஸ், நாடகம் நடத்த பணமில்லாமல் சிரமப்பட்ட போது, தன் நகைகளை கொடுத்து உதவினார். சுதந்திரப் போராளிகள் ரகசிய மாநாடு நடத்துவதற்காக, தன் வீட்டை விற்று பணம் கொடுத்தார். சுபாஷ் சந்திரபோஸ் மதுரை வந்தபோது, பிரிட்டிஷ் அடக்குமுறைகளை மீறி, முத்துராமலிங்க தேவருடன் இணைந்து, ரயில் நிலையத்திற்கு சென்று வரவேற்றார். இந்திய விடுதலைக்கு பின்னர், சுதந்திரப் போராட்ட வீரருக்கான பட்டயமும், வெகுமதியும் அரசு தருவதற்கு முன்வந்த போது, அதை ஏற்றுக்கொள்ள மறுத்து, 'கடமையைச் செய்தேன்; சன்மானம் எதற்கு?' என்று கூறிவிட்டார். **** மீனா கிருஷ்ணசாமி இவருக்கு, 10 வயதாக இருந்தபோது, இவருடைய தாய் லட்சுமி பாய், 1932ல், மதுரையில் நடைபெற்ற ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு, சிறை சென்றார். 1935ல், மதுரையில் நடைபெற்ற அந்நிய துணி எதிர்ப்பு போராட்டத்தில், 13 வயதான மீனா கலந்து கொண்டு சிறை சென்றார். 16 வயதிற்குக் கீழ் உள்ளவர்களை கைது செய்யக்கூடாது என்ற சட்டம் இருந்ததால், நீதிபதியிடம், 16 வயது என்று கூறி சிறைக்கு சென்றார். கடந்த, 1942ல், 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் கைது செய்யப்பட்டு, நாக்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். ***** ருக்மணி லட்சுமிபதி ஆங்கிலேய அரசாங்கத்தால், அமைக்கப்பட்ட சைமன் கமிஷனை எதிர்த்து, போராட்டத்தில் பங்கேற்றதுடன், ஏராளமான பெண்களை அந்தப் போராட்டத்தில், கலந்து கொள்ளச் செய்தார், ருக்மணி லட்சுமிபதி. வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்று, காவலர்களால் தாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்று சிறை சென்ற முதல் பெண்மணி இவர். அந்நிய துணிகளை எரித்ததால் கைது செய்யப்பட்டு, சிறைக்கு சென்றவர். 1933ல், காந்திஜியிடம், அரிஜன நிதிக்காக தன் நகைகள் முழுவதையும் அளித்தார். 1940ல், தனிநபர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். ****** அஞ்சலையம்மாள் தென்னாட்டு ஜான்சிராணி என்று, காந்திஜியால் புகழப்பட்ட வீரம் மிகுந்த பெண்மணி, அஞ்சலையம்மாள். காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தை தமிழகத்தில் முன்னெடுத்து சென்ற முக்கியமான ஆளுமைகளுள் இவர் ஒருவர். 1927ல், நடைபெற்ற, ஆங்கிலேய படைத்தளபதி நீல் சிலை அகற்றும் போராட்டத்தில், தன்னுடைய ஒன்பது வயது மகள், அம்மாக்கண்ணுவையும் அழைத்து சென்று போராடினார். நீல் சிலையை, கோடரியால் அடித்து சேதப்படுத்தினார். அம்மா-மகள் இருவரையும் சிறையில் அடைத்தனர். ஒன்பது வயதான அம்மாக்கண்ணுவை தன்னுடைய வார்தா ஆசிரமத்திற்கு அழைத்து சென்று, லீலாவதி என்று பெயர் சூட்டி, வளர்த்து வந்தார், காந்திஜி. கடந்த, 1934ல், காந்திஜி கடலுாருக்கு வந்தபோது, அஞ்சலையம்மாளை சந்திக்க விரும்பினார். ஆனால், ஆங்கிலேய அரசு அதற்கு தடை விதித்தது. அஞ்சலையம்மாள் பர்தா அணிந்து, குதிரை வண்டியில் சென்று, காந்திஜியை சந்தித்தார். இவரின் துணிவைப் பாராட்டிய, காந்திஜி, 'தென்னாட்டின் ஜான்சி ராணி' என்று அழைத்தார். ***** அம்புஜம்மாள் இவர், சிறுமியாக இருந்தபோதே, இவருடைய தந்தையான வழக்கறிஞர், சீனிவாச ஐயங்காரை பார்ப்பதற்கு, காந்திஜியும், கஸ்துாரிபாயும் இருமுறை இவர் இல்லத்திற்கு வருகை புரிந்துள்ளனர். இவர், பெரியவரானதும், வை.மு.கோதைநாயகி அம்மாள் மற்றும் ருக்மணி லட்சுமிபதி ஆகியோருடன் இணைந்து, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். கடந்த, 1930ல், உப்பு சத்தியாகிரக போராட்டத்திலும், 1932ல் அந்நிய துணிகள் எதிர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு சிறை சென்றார். காந்திஜியால் தத்தெடுக்கப்பட்ட மகள் என்று இவரை கூறுவர். இவர், சிறைச்சாலையைக் கல்விச்சாலையாக மாற்றி, அங்கிருந்த பெண்களுக்கு கல்வியை போதித்தார். ******வை.மு.கோதைநாயகி அம்மாள் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவரான இவர், கதர் இயக்கத்தில் ஈடுபட்டு, அந்நி ய துணிகளை எரித்தார். மேடைகளில் சொற்பொழிவாற்றி மக்களிடையே, விடுதலை உணர்வை துாண்டினார். ******கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் மதுரை மாவட்டத்தின் முதல் பட் டதாரி பெண்ணான இவர், 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் கலந்துகொண்டு, போராடியதால், பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறையிலிருந்து விடுதலையான பின், வினோபா பாவேயின், பூமிதான இயக்கத்தில் சேர்ந்து, பாதயாத்திரை மேற்கொண்டார். ****** கேப்டன் லட்சுமி கடந்த, 1940ல், மருத்துவப் பணிக்காக சிங்கப்பூர் சென்ற லட்சுமி, 1943ல், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்தார். ஜான்சி ராணி என்று பெயர் சூட்டப்பட்ட பெண்கள் படைப் பிரிவின் தலைவராக இருந்தார். இந்தப் படையில், 60 சதவீதம் தமிழ் பெண்கள் இருந்தனர். மார்ச், 1946ல், ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு, சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டார். அவரைச் சிறையில் வைத்திருப்பது எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும் என்று உணர்ந்த ஆங்கிலேயர்கள், அவரை விடுதலை செய்தனர். தொகுப்பு : எஸ்.ஆர். கமலாதேவி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !