இப்படியும் சிகை அலங்காரம் செய்யலாம் !
தலை முடி அதிகமாக வளர்ந்து விட்டால், சிகை அலங்கார கடைகளுக்கு சென்று, அவற்றை வெட்டுவது தான், வழக்கமான நடைமுறை. ஆனால், சீனாவில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், முடியை வெட்டுவதற்கு பதில், தீயால் பொசுக்கியும், சிகை அலங்காரம் செய்கின்றனர். சீனாவின், பல இடங்களில், இதற்கான கடைகள் உள்ளன. கத்தரி, கத்தி போன்ற உலோகங்களை, தீயில் சூடாக்கி, பின், முடியை பொசுக்குவது தான், இங்கு பின்பற்றப்படும் நடைமுறை. இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள, வாய் வெய்பு என்ற முதியவர் கூறுகையில், 'சில ஆண்டுகளுக்கு முன்வரை, இந்த தொழிலுக்கு கிராக்கி இருந்தது. இப்போது குறைந்து விட்டது. வயதானவர்கள் மட்டுமே, இப்போது, கடைக்கு வருகின்றனர்; இளைஞர்கள் வருவது இல்லை. இதனால், பாரம்பரியமான இந்த தொழில் மெல்ல மெல்ல, அழிந்து கொண்டே வருகிறது...' என, கவலைப்படுகிறார். -- ஜோல்னா பையன்.