நோய் தீர்க்கும் வீட்டு தோட்டம்
காலை நேரத்தில் வியர்க்க, விறுவிறுக்க வாக்கிங் செல்பவர்களின் அன்றாட நுகர்வு தெருவோரம், ரோட்டோரம் விற்கும் காய்கறிகள்தான். நுகர்வு அதிகரிக்க, அதிகரிக்க தோட்டத்து காய்கள் மறைந்து ரசாயனம் கலவையில் உடனடியாக விளை வித்தவை தான் அதிகம் விற்பனைக்கு வருகின்றன. மழையின்றி அரிசியைத்தான் நம்மால் விளைவிக்க முடியாது. அன்றாடம் சாப்பிடும் காய்கறிகளை நாம் விளைவிப்பதற்கான சாத்தியக்கூறு ஒவ்வொரு வீட்டிலும் உள்ளது. மாடியில் சிறிய இடத்தில் கூட சுழற்சி முறையில் காய்கறிகளை பயிரிட்டால் அன்றாடம் தேவையான காய்கறிகளை நாமே உற்பத்தி செய்ய முடியும்.இதையே பெரிய அளவில் வீட்டில் உள்ள காலிஇடத்தில் வீட்டு தோட்டமாக பயிரிட்டால் நமக்கு மட்டுமன்றி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கும் அளிக்க முடியும் என்கிறார் சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை நென்மேனியை சேர்ந்த த.அம்சவள்ளி.அவர் கூறியதாவது: வீட்டை ஒட்டியுள்ள காலி இடத்தை வெறுமனே விடாமல் அதில் சிறிய அளவிலான காய்கறி தோட்டம் போடலாம். ஐந்து முதல் 10 சென்ட் இடம் இருந்தால் நம்முடையை தேவை போக பிறருக்கும் கொடுக்கலாம். ஐந்து சென்ட் இடம் இருந்தால் 10 கத்தரி செடி, 10 வெண்டை செடி, ஒரு பீர்க்கங்காய், ஒரு புடலை, 2 பாகற்காய், ஒரு சென்டில் வெங்காயம், 5 பச்சை மிளகாய், ஐந்து தக்காளி, வேலி பகுதியில் அகத்தி ஆகிய விதைளை போட்டு விளைவிக்கலாம். 30 முதல் 35 நாளில் காய்கறிகள் பலன் கொடுக்க ஆரம்பித்து விடும்.கத்தரிக்காய் தினமும் அரைகிலோ, வெண்டைக்காய் கால் கிலோ எடுக்கலாம். இரண்டு நாளைக்கு ஒரு முறை பீர்க்கங்காய், பாகற்காய் என சுழற்சி முறையில் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை பெறலாம். மிளகாயை பொறுத்தவரை அன்றைய தேவை போக மீதி உள்ளவற்றை பழுக்க விட்டால் குழம்பு மசாலாவுக்கும் பயன்படுத்தலாம்.உரம் தேவையில்லை. விதைக்கும் பருவத்தில் மட்டும் ஆடு, மாடு எரு இட வேண்டும். பூச்சி தாக்கினால் மட்டும் வேப்ப எண்ணெய் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். மூன்று நாளைக்கு ஒரு முறை தண்ணீர் போதும். என் வீட்டின் பின்புறம் 10 சென்டில் காய்கறி தோட்டம் அமைத்துள்ளேன். ஒவ்வொரு செடியும் மூன்று மாதம் வரை பலன் தரும். வீட்டு தோட்டம் போட்ட பிறகு என் கணவர் சர்க்கரை நோய்க்கு மாத்திரை சாப்பிடுவதை கொஞ்சம், கொஞ்சமாக குறைத்து தற்போது முழுவதும் நிறுத்தி விட்டார். வியர்க்க, விறுவிறுக்க வாக்கிங் செல்பவர்கள் அந்த நேரத்தை வீட்டு தோட்டத்தில் செலவிட்டால் மனதுக்கு நிம்மதி கிடைப்பதுடன் நமக்கு செலவும் மிச்சப்படும், என்றார்.காய்கறி தோட்டம் அமைக்க 9865683202ல் ஆலோசனை பெறலாம்.- த.செந்தில்குமார், காரைக்குடி.