ஜாதிக்காய் சாகுபடி
பசுமை மாறாத தாவர வகையைச் சார்ந்தது ஜாதிக்காய் மரம். அடர்ந்த இலைப் பரப்புகளைக் கொண்டு இருபது மீட்டர் உயரம் வரை வளரும் தன்மை உடையது. ஆண்டுச்சராசரி மழை அளவு 150 செ.மீ. மற்றும் அதற்கு மேலாகக் கிடைக்கும் கதகதப்பான ஈரப்பதம் உள்ள சூழலில் ஜாதிக்காய் மரம் நன்கு வளரும். கடல் மட்டத்திலிருந்து 1,300 மீட்டர் உயரம் வரை உள்ள பகுதிகள் இதற்கு ஏற்ற சூழ்நிலை ஆகும். பாக்குத் தோப்புகளில் ஊடுபயிராக இடுவது சிறந்தது. களிமண் கலந்த இருமண்பாடு கொண்ட மண், மணல் கலந்த இருமண்பாடு கொண்ட மண், செவ்வரி மண் பகுதிகள் இதற்கு நல்லதாகும். தென்னைக்கு இடையே ஊடுபயிராக வளர்ப்பதும் நல்லதாகும். 60செ.மீ. கள செவ்வகக்குழி எடுத்து அதனுள் 10 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் மற்றும் மேல் மண்ணை இட்டு, பின்னர் ஜாதி மரக்கன்றுகளை நடவு செய்தல் சிறந்தது. முழு வளர்ச்சியடைந்த ஜாதிக்காய் மரத்திலிருந்து ஆண்டுக்கு 100 முதல் 2000 பழங்கள் வரை கிடைக்கும்.வாழை மற்றும் காய்கறி விவசாயத்தின் ஊடேயும் ஜாதிக்காய் பயிர் செய்யப்படுகிறது. நட்ட ஆறு முதல் ஏழு வருடங்களில் ஜாதிக்காய் மரம் பூக்கத் தொடங்கும். 50 வருடங்கள் வரை காய்த்து பலன் தரும். ஒரு ஜாதிக்காய் தோட்டத்தில் ஐம்பதிற்கும் மேற்பட்ட பெண் மரங்களையும் ஓர் ஆண் மரத்தையும் உடையதாக இருக்கும். ஜாதிக்காய் மூன்று பருவங்களில் அறுவடை செய்யப் படுகிறது. பொதுவாக ஒரு மரம் அதன் வயதைப் பொறுத்து 100 கிலோ ஜாதிக்காயையும், 10 கிலோ ஜாதி பத்திரியையும் உற்பத்தி செய்ய வல்லது. ஜாதிக்காயைப் பதப்படுத்தும் தொழில் பொதுவான இடத்தில் வைத்து மிகக் கவனத்துடன் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக பயன்படுத்தப்படும் தண்ணீரின் தன்மையும் அளவும்கூட கவனத்தில் கொள்ளப்படுகின்றன. ஜாதிக்காய் சுமார் 6-8 வாரம் வரை காயவைக்கப்படுகிறது. மூன்று ரகங்களாகப் பிரிக்கப்படும் ஜாதிக்காயின் முதல் ரகம் சமையல் தேவைகளுக்காகவும், மற்ற ரகங்கள் உணவைப் பாதுகாக்கும் பொருட்களைத் தயாரிக்கவும், அழகு சாதனப் பொருட்களை உண்டாக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.ஜாதிக்காயின் ஓட்டின் மேல் சிவந்தும் மெல்லியதாகவும் உள்ள தோல் போன்று படர்ந்து உள்ளது ஜாதிபத்திரி ஆகும். மசாலா பண்டங்களில் இதுவும் இடம்பெறுகிறது. பீடாவில் இதனையும் சேர்த்து சிறப்பிப்பது உண்டு. ஜாதிக்காயில் உள்ள நறுமண எண்ணெய் மருத்துவப் பண்புகளைக் கொண்டதாகும். வயிற்றுப்போக்கு, சீதளபேதி, வயிற்றுவலி, மலேரியா போன்ற நோய்கள் குணமாவதற்கும் இந்த எண்ணெய் பயன்படுகிறது. தாது விருத்தியாகவும் இது செயல்படுகிறது. சமையலிலும் மருத்துவத்திலும் மிகச் சிறப்பான இடத்தை இது பெற்று வருகிறது. இது பல்வலி, வாதநோய் ஆகிய சிக்கல்களை நீக்கும் ஆற்றல் உடையது. ஜாதிக்காய், ஜாதிபத்திரி ஆகியவற்றின் பெருவணிக ஏற்றுமதியாளர்களாக இந்தோனேஷியாவும் கிரெனடாவும் இன்றளவும் இருந்து வருகின்றன. கிரெனடாவின் தேசியக் கொடியில் ஜாதிக்காய் சின்னமாகக் குறிப்பிடும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது.எஸ்.நாகரத்தினம்,56, லட்சுமி காலனி, கச்சேரி ரோடு,விருதுநகர்.