உள்ளூர் செய்திகள்

மின்னணு வேளாண்மையில் உழவன் அலைபேசி செயலி

தேசிய அளவில் மின்னணு வேளாண்மையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. தமிழக அரசின் வேளாண் துறையால் விவசாயிகளுக்கு தகவல் சேவை வழங்குவதற்காக அறிவிக்கப்பட்ட 'www.tnagrisnet.tn.gov.in' என்ற இணையதளம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தேசிய அளவில் முதன் முறையாக 70 லட்சம் விவசாயிகளின் அடிப்படை தகவல்கள், பண்ணை மற்றும் மண் வளம் சார்ந்த தகவல்கள் வலைதளத்தில் உள்ளீடு செய்யப்பட்டு, அதற்கான ஆலோசனைகள் மற்றும் வேளாண் இடுபொருட்கள் இத்துறையினால் வழங்கப்பட்டு வருகிறது.இச்சேவையை பாராட்டி மத்திய அரசு இரண்டு முறை தமிழக அரசுக்கு தேசிய மின் ஆளுமை திட்டத்தின் கீழ் தங்கப்பதக்கம், இரண்டு லட்சம் ரூபாய் பொற்கிழி வழங்கி கவுரவித்தது. 'ஸ்கோட்ச்' நிறுவனத்தின் உயரிய விருதான பிளாட்டினம் விருதும் கிடைத்தது. வேளாண் துறையில் மின்னணு தொழில்நுட்பத்தின் அடுத்தகட்டமாக வேளாண் துறை சார்ந்த செயல்பாடுகள் மற்றும் தகவல்கள் அனைத்து விவசாயிகளிடம் விரைவில் சென்றடைவதற்காக 'உழவன்' என்ற அலைபேசி செயலி தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் செயல்படுத்தப் படவுள்ளது.இச்செயலி மூலம் விவசாயிகளுக்கு ஒன்பது முக்கிய அடிப்படை சேவைகள் வழங்கப் படவுள்ளது. இதன்படி கூகுள் பிளே ஸ்டோரில் உழவன் (Uzhavan) என டைப் செய்து, உழவன் செயலியை தேர்ந்தெடுக்க வேண்டும். உழவன் செயலியை தேர்வு செய்து 'இன்ஸ்டாலை' தேர்வு செய்து பதிவிறக்கம் செய்யவும்.முக்கிய சேவைகள்அரசின் வேளாண் மானிய திட்டங்கள் பற்றி அறிதல், பயனாளி திட்ட முன்பதிவு, பயிர் காப்பீடு விபரம் அறிதல், உரம் இருப்பு நிலை, விதை இருப்பு விபரம் அறிதல், வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்கள், விளை பொருட்களின் சந்தை விலை அறிதல், வானிலை அடிப்படையில் வேளாண் அறிவுரை பெறுதல், வேளாண் விரிவாக்க பணியாளர்கள் வருகை உள்ளிட்ட விபரங்களை அறியலாம்.உழவன் செயலியை விவசாயிகள் தங்களின் தொடுதிரை அலைபேசியில் பதிவிறக்கம் செய்து விவசாயிகள் பயனடையலாம்.- த.விவேகானந்தன், துணை இயக்குனர்,நீர் மேலாண்மை பயிற்சி நிலையம், மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !