உள்ளூர் செய்திகள்

வறட்சிக் காலங்களில் தீவன பராமரிப்பு

வறட்சிக் காலங்களில் தீவன பராமரிப்புதீவனப்பற்றாக்குறை ஏற்படும் வறட்சிக்காலங்களில் கால்நடைகளுக்கு உடைத்த இருங்குச்சோளம், கேழ்வரகு, கம்பு, சாமை, கோதுமை, கொள்ளு ஆகியவற்றை மக்காச்சோளத்திற்கு பதிலாக 50% வரை தீவனத்தில் அளிக்கலாம். அரிசித்தவிடு, கோதுமைத்தவிடு, அரிசிக்குருணை, உளுந்து, பயறு, கடலைபொட்டு போன்றவற்றை கால்நடை தீவனத்தில் 50% வரை சேர்க்கலாம். விலை மலிவாக கிடைக்கும் தானிய உப பொருட்களை தீவனத்தில் கலப்பதால் தீவனச்செலவு மிச்சமாவதுடன் சத்துள்ள ஆகாரம் கிடைக்கிறது.கிழங்கு, திப்பி, பருத்திக்கொட்டை, ஓடு நீக்கப்பட்ட புளியங்கொட்டை ஆகியவற்றை உடைத்து தீவனத்தில் சேர்க்கலாம். அறுவடைக்குப் பின் கிடைக்கும் வைக்கோல், சோளத்தட்டை,கம்புத்தட்டை, வேர்க்கடலைக்கொடி, காய்ந்த புல், சூரியகாந்தி செடி, மக்காச்சோளத்தட்டை, கேழ்வரகுத்தட்டை ஆகியவற்றை தீவனமாக கொடுக்கலாம். சத்துக்குறைந்த இந்த உலர் தீவனங்களை 4% யூரியா கரைசல் தெளித்து சிலநாட்கள் காற்றுப் புகாமல் பாதுகாத்து வைப்பதன் மூலம் சத்துள்ள கூளத்தீவனம் கால்நடைகளுக்கு கிடைக்கும். யூரியா கொண்டு ஊட்டமேற்றிய தீவனத்தை ஆறு மாத வயதைக் கடந்த மாட்டிற்கு 4-5 கிலோ வரை அளிக்கலாம்.ஆடுகளுக்கு சோளத்தட்டையுடன் காய்ந்த உளுந்துச்செடி, துவரைச்செடி, நிலக்கடலைக்கொடி, சவுண்டல், கிளிரிசிடியா, மர இலைகள், கொடுக்காபுளி, கருவேல் ஆகியவை நல்ல உணவாகிறது. காய்ந்த பயறுவகை தீவனம் சாலச்சிறந்தது. கரும்புச்சோகை கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. கால்நடைகளுக்கு தினசரி 20-25 கிலோ வரை அளிக்கலாம். கரும்புச்சோகையை சைலேஜ் முறையில் பதப்படுத்தி தீவனப்பற்றாக்குறையை போக்கலாம். சூரியகாந்தி செடி, விதை நீக்கிய சூரியகாந்திப்பூ ஆகியவற்றை சிறு துண்டுகளாக வெட்டி கால்நடைகளுக்கு உணவாக வைக்கலாம். கருவேல், வேலிக்கருவேல், சவுண்டல் விதைகள், புளியங்கொட்டை, மாங்கொட்டை ஆகியவற்றை தீவனமாகப் பயன்படுத்தலாம். விதைகளை 20-30% வரை தீவனத்தில் சேர்க்கலாம்.மர இலைகள் சத்துள்ள தீவனமாக அமைந்துள்ளது. அகத்தி, சவுண்டல், கிளிரிசிடியா, கொடுக்காபுளி, வாகை ஆகியவற்றின் இலைகளில் புரதச்சத்து அதிகமாக உள்ளது. அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் விஷ சத்து அற்ற, கால்நடைகள் விரும்பி உண்ணும் மர இலைகளை கோடை காலத்தில் அளித்து தீவனப் பற்றாக்குறையை போக்கலாம். மர இலைகளில் புரதச்சத்து அதிகமாகவும், எரிசக்தி குறைவாகவும் உள்ளதால், மர இலைகளை முழு தீவனமாக கால்நடைகளுக்கு அளிக்கக்கூடாது. எனவே மர இலைகளுடன் வைக்கோல், சோளத்தட்டை, கம்பந்தட்டை, கேழ்வரகு தட்டை போன்றவற்றையும், கோதுமைத்தவிட்டையும் சேர்த்து அளிக்க வேண்டும். மர இலைகளை பால் தரும் மாடுகளுக்கு ஒரு நாளைக்கு 10-15 கிலோ வரை அளிக்கலாம். ஆடுகளுக்கு 3-3.5 கிலோ வரை ஒரு நாளைக்கு கொடுக்கலாம். மேலும் மர இலைகளை கலந்து அளித்தல் அவசியம். அகத்தி, வேம்பு, பூவரசன், கருவேல், குடைவேல், பலா, கொடுக்காபளி, ஆல், அரசன், உதியன், இலந்தை போன்ற மரங்களின் இலைகளையும் கால்நடைகளுக்கு அளிக்கலாம். மர இலைகளை தீவனமாக அளிக்கும்போது கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.* மர இலைகளை பிற புல் மற்றும் உலர்ந்த தீவனத்துடன் சிறிது சிறிதாக அளிக்க வேண்டும்.* மர இலைகள் 6-8 மணி நேரம் வாட வேண்டும்.* மர இலைகளை உலரவைத்து அதன் ஈரப்பதம் 15-20% கீழே உள்ள நிலைகளில் அளித்தல் நலம்.* மர இலைகளின் மீது 2% உப்பு அல்லது வெல்லக் கரைசலை தெளித்தால் உண்ணும் திறன் அதிகமாகும்.* மர இலைகளை விரும்பி உண்ணாத கால்நடைகளை விரும்பி உண்ணும் கால்நடைகளின் அருகில் கட்டி வைத்து மர இலைகளை தீவனமாக அளிக்கலாம்.-டாக்டர் வி.ராஜேந்திரன்,உதவி இயக்குனர், கால்நடை பராமரிப்புத் துறை, கொடைக்கானல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !