ஆடுவளர்ப்பு - குடல்புழு நீக்க மருந்தாக சோற்றுக்கற்றாழை
வேளாண் அறிவியல் நிலையமானது மக்கள் பங்கேற்புடன் அவர்களின் தேவையினை அறிந்து குடல்புழு நீக்கத்திற்குப் பயன்படுத்தப் படும் பல்வேறு மருந்துகளின் செயல்பாட்டினைக் கண்டறிய தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.பரிசோதனையின் விவரம்: * ஆல்பெண்டசோல் 7.5 மி.லி. கிராம்/கிலோ எடை* வேப்பெண்ணெய் 50 மி.லி/ ஆடு* வேப்பங்கொட்டை 20 கிராம், பாகற்காய் 20 கிராம், பூண்டு 50 கிராம், வாழைத்தண்டு 50 கிராம் ஆகியவற்றிலிருந்து சாறு எடுத்து (தேவையான தண்ணீர் கலந்து) வெல்லத்துடன் கலந்து கொடுத்தல்* சோற்றுக்கற்றாழை ஒரு ஆட்டிற்கு 50-75 கிராம் அளவை 10 கிராம் வெல்லத்துடன் கலந்துகொடுத்தல்ஒவ்வொரு பரிசோதனைக்கும் 10 ஆடுகள் வீதம் மொத்தம் 40 ஆடுகளை தேர்வுசெய்து மேற்கூறிய குடல்புழு நீக்க மருந்தினை பயன்படுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. குடல்புழு நீக்க மருந்து கொடுப்பதற்கு முன்னரும் ஒரு மாதத்திற்கு பின்னரும் ஆடுகளின் எடை கணக்கிடப்பட்டது. ரத்தப்பரிசோதனையும் செய்யப்பட்டது. ஒவ்வொரு பரிசோதனைக்குட்பட்ட ஆடுகளிலிருந்து சாணம் சேகரித்து குடல்புழு நீக்க மருந்து கொடுப்பதற்கு முன்னரும் மருத்து கொடுத்த பின் 7, 14, 28வது நாளில் சாணப்பரிசோதனை செய்யப்பட்டது.பரவலாக்கம்: வேளாண் அறிவியல் நிலையமானது தூக்கநாயக்கன் பாளையம் வட்டாரத்திலுள்ள ஏலூர் கிராமத்தில் டிசம்பர் 2008ம் ஆண்டு இப்பரிசோதனையை மேற்கொண்டது. அதன்பின் தாளவடி மற்றும் அந்தியூர் வட்டாரங்களுக்கு இந்த தொழில்நுட்பம் பரவியது. இதனை உறுதிசெய்ய வேளாண் அறிவியல் நிலையம் பணிபுரியும் பகுதிகளிலிருந்து செம்மறி ஆடு வளர்ப்போரை தேர்வுசெய்து ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.ஆய்வின் முடிவு: சோற்றுக் கற்றாழை தொழில்நுட்பத்தை ஆடுவளர்ப்போர் பின்பற்ற ஆரம்பித்ததுடன் முறையாக எப்படி அளிக்க வேண்டும் என்பதை தெரிந்துகொண்டனர். Myrada - வேளாண் அறிவியல் நிலையத்திலிருந்து நேரடியாகவும் நிலையத்தின்மூலம் பயிற்சி பெற்ற கால்நடை ஊக்குநர்கள், ஆடுவளர்ப்போர் மூலமாகவும் (சுய உதவிக்குழு கூட்டத்தில் விவாதித்தல் மூலம் மற்றும் நிலையத்தின் செய்திமலர் (உழவர் மலர்) மூலம்) பரவலாக்கம் செய்யப்பட்டது. கால்நடை ஊக்குநர்கள் ஆரம்பத்தில் அவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதால் இதனை பரிந்துரை செய்யவில்லை. பின்னர் சோற்றுக் கற்றாழை சிறந்த குடல்புழு நீக்க மருந்தாகவும் எளிதில் கிடைக்கக் கூடியதாகவும் இருப்பதை உணர்ந்துகொண்டு இத்தொழில் நுட்பத்தை அனைவருக்கும் பரிந்துரை செய்து வருகின்றனர்.குடல்புழு நீக்க மருந்தாக சோற்றுக்கற்றாழையை பயன்படுத்தும் முறை: * நன்கு வளர்ந்த ஆரோக்கியமான சோற்றுக்கற்றாழைச் செடியை தேர்வு செய்ய வேண்டும்.* சோற்றுக்கற்றாழையின் மடலை வெட்டியெடுத்து சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். பின் மடலின் மேல்தோலையும் ஓரத்திலுள்ள முட்களையும் நீக்க வேண்டும்.* சோற்றுப்பகுதியினை எடுத்து அதனுடன் நாட்டுச்சர்க்கரை கலக்க வேண்டும்.* இந்தக் கலவையினை வாய் வழியாக ஆடுகளுக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை மேய்ச்சலுக்கு செல்லும் முன்னர் கொடுக்க வேண்டும்.-ஆர்.ஜி.ரீஹானா,விலங்கியல்துறை நிபுணர், தாராபுரம். 98944 84806.