நவீன தொழில்நுட்பம்
புதிய கொய்மலர் ஹெலிகோனியம்: ஹெலிகோனியா கொய்மலர் 'கிளிமலர்', கிளி வாழை, பொய் வாழை என்று அழைக்கப்படுகிறது. இம்மலர் கொய்மலராகவும், மேடை அலங்காரம், கல்யாண வரவேற்பு ஆகியவற்றில் அழகுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. தோட்டங்கள் மற்றும் பூங்காக்களில் அழகுக்காகவும் வளர்க்கப்படுகிறது.இந்தியாவில் 50 சதவீத உற்பத்தி ஆந்திராவில் உள்ளது. மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உற்பத்தி ஆகிறது. சமீபகாலமாக கேரளா, கர்நாடகாவில் பிரபலமடைந்து வருகிறது. தற்போது தமிழகத்தில் பிரபலம் அடைந்துவரும் ஒரு முக்கிய கொய்மலரான ஹெலிகோனியம் காற்றில் ஈரப்பதம் உள்ள இடங்களில் செழித்து வளரும். இது கடல் மட்டத்திலிருந்து 500 மீட்டர் உயரம் வரை உள்ள பகுதிகளிலும் வெப்பமண்டல பகுதிகளிலும் பயிரிடப்படுகிறது. இதன் வளர்ச்சிக்கு 25-30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தேவைப்படும். இம்மலர் திறந்தவெளியில் அதிக வெளிச்சம், நீர்ப்பாசன வசதி கொண்ட இடங்களில் நன்கு வளரும்.ஹெலிகோனியாவில் சில ரகங்களின் பூக்கள் கொத்தாகவும், ஒரு சில ரகங்களின் மலர்கள் தலைகீழாகவும் மலரும் தன்மை உடையவை.ஹெலிகோனியாவில் ஆன்ட்ரோபிடா, அலெக்ஸ்ரெட், டிவார்ப் ஜமைக்கா, மேடி டி, லாத்திஸ்பேத்தி, பிளாக் செர்ரி, கென்யாரெட், ஸ்ட்ராபெரி கிரீம் ஆகிய ரகங்கள் சமீபகாலமாக பயிரிடப்படுகின்றன. ஹெலிகோனியா நல்ல வடிகால் வசதி கொண்ட, எல்லா சத்துக்களும் நிறைந்த நிலத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. மணல் கலந்த வண்டல் மண்ணில் நன்கு வளரும் இம்மலர் 6 முதல் 7 வரை உள்ள கார அமிலத் தன்மையுடைய மண்ணில் வளர்கிறது. இம்மலர் கிழங்குகள் மூலம் பயிர் பெருக்கம் செய்யப் படுகிறது. கிழங்குகளை 90 து 90 செ.மீ. இடைவெளியில் 1 அடி நீள, அகல, ஆழமுள்ள குழிகளை எடுத்து அதில் மக்கிய இலைகள், பண்ணைக் கழிவுகளைக் கொண்டு நிரப்பி, வயலில் நடவு செய்ய வேண்டும். ஜூன் மாதம் நடவு செய்வது நல்லது. நன்கு மக்கிய தொழு உரம் 1 சதுர மீட்டருக்கு 4 கிலோ அளவில் இடவேண்டும். வாழை, தென்னை போன்ற தோட்டப்பயிர்களில் ஊடுபயிராக பயிரிடப்படுவதன் மூலம் கூடுதல் வருமானம் பெறலாம்.வெயில் காலங்களில் 2-3 நாட்களுக்கு ஒரு முறையும், மழை பெய்யும்போது வாரம் ஒரு முறையும் நீரைக் கூட்டவேண்டும். நீர் பற்றாக்குறை ஏற்படும்பொழுது இலைகள் நீளவாக்கில் சுருண்டு காணப்படும். நிலப்போர்வை அமைப்பதன் மூலம் களைகளைக் கட்டுப்படுத்தி, மண்ணில் ஈரப்பதம் காக்கப்படுகிறது. நீர் தேங்கி இருப்பின் வேர் அழுகல் நோய் உருவாகும். குளிர்காலங்களில் அதிகப் படியான நிழலினால் மலர் வருவது தாமதப்படும். வெப்பமண்டலப் பகுதிகளில் மழைக் காலங்களிலும், மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் கோடைக்காலம், மழைக்காலங்களிலும் மலர்கள் மலரும். ''வவ்வால்'' மலரின் மகரந்த சேர்க்கைக்கு உதவுகின்றன. பொதுவாக ஹெலிகோனியா 8 மாதங்களில் அதாவது ஜனவரி மாதத்தில் நடவு செய்தால் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை உள்ள காலங்களில் மலரும். அதற்கடுத்த வருடத்திலிருந்து ஏப்ரலிலிருந்து தொடங்கி டிசம்பர் வரை தொடரும். மொட்டு உருவானதிலிருந்து 15ம் நாள் முதல் அறுவடை செய்யலாம். முதல் வருடம் விளைச்சல் குறைவாகக் காணப்படும். அறுவடை செய்யும்போது பூத்தண்டின் நீளம் 70 செ.மீ. முதல் 1 மீ. வரை இருக்க வேண்டும். பூச்சாடிகளில் இதன் வாழ்நாள் 15 முதல் 20 நாட்கள் வரை இருக்கும். ஒரு மலரின் விலை ரூ.7 முதல் 20 வரை சந்தையில் விற்கப்படும். மலரின் விலை ரகத்திற்கு ரகம் மாறுபடும். (தகவல்: சங்கரி.அ, மா.ஆனந்த், ரா.அருள்மொழியான், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், ஏற்காடு-636 602. 94432 06004)டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்