பெண்களுக்கு கைகொடுக்கும் காளான்
ஒன்பதாம் வகுப்பு முடித்து மதுரை சத்திரப்பட்டி கிராமப்பகுதியில் சாதாரண வேலை செய்து வந்த எனக்கு, கை கொடுத்தது சிப்பிக்காளான் வளர்ப்பு தான். மேலும் பெண் விவசாயியாக அடையாளம் காட்டியது என்கிறார் ரூத். இத்தொழிலில் ஆறாண்டு அனுபவத்தின் மூலம் மாதம் 150 முதல் 180 கிலோ வரை அறுவடை செய்யும் தொழில்நுட்பத்தை விவரித்தார் ரூத். எனக்கு நிலமில்லை என்பதால் கிடைக்கும் சிறு சிறு வேலைகளில் ஈடுபட்டு வந்தேன். கொரோனா காலகட்டத்தில் வீட்டருகே உள்ள காளான் மையத்தில் மூன்றாண்டுகளாக வேலை செய்தேன். மாதவருமானம் போதவில்லை. சுயமாக காளான் பண்ணை அமைக்க திட்டமிட்டேன். நான் வேலை செய்த இடத்திலேயே எனக்கு பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கினர். பயிற்சிக்கு பின் பெரியளவில் குடில் அமைக்க கையில் காசில்லை. நான் குடியிருக்கும் வாடகை ஓட்டு வீட்டில் 'மினி சைஸ்' காளான் குடில் அமைத்தேன். வீட்டின் ஒரு மூலையில் மீன்தொட்டிக்கான மோட்டார் வைத்து துணியால் தடுப்பு அமைத்து அதற்குள் 20 காளான் படுக்கைகள் அமைத்தேன். காய்ந்த வைக்கோலை ஒருநாள் முழுவதும் ஊறவைத்து நிழலில் உலர்த்தி பாலித்தீன் பையில் வைக்கோலை அடுக்கடுக்காக பரப்பி நடுவே காளான் விதைகளைத் துாவி பையை மூடி ஆங்காங்கே துளையிட வேண்டும். விதைத்த 18வது நாளில் காளான் மொட்டு விடும். 21வது நாளில் விரிந்து அறுவடைக்கு தயாராகி விடும். அடுத்தது ஒரு வாரத்தில் ஒரு படுக்கையில் 3 முறை அறுவடை செய்வோம். அதன்பின்னும் பாலித்தீன் பையை மட்டும் அகற்றி படுக்கையை அப்படியே வைத்து அதிலிருந்தும் 10 நாட்களுக்குள் காளான் உற்பத்தியாகும். வீட்டில் இந்த முறையில் காளான் தயாரித்தபோது மாதம் ரூ.5000 வரை லாபம் ஈட்டினேன். அதன்பிறகே வாடகைக்கு இடம் பிடித்து அதில் பத்துக்கு பத்தடி அறையில் காளான் குடில் அமைத்தேன். இதில் ஒரே நேரத்தில் 120 படுக்கைகள் அமைக்க முடியும். தினந்தோறும் 10 படுக்கைகள் வீதம் புதிதாக அமைத்துக் கொண்டே இருந்தால் அறுவடை தொடர்ந்து கிடைக்கும். வைக்கோலை ஊற வைப்பது, விதைப்பது என தினமும் காலையில் 3 மணி நேரம், மாலையில் 3 மணி நேரம் வேலை செய்தால் போதும். இம்முறையில் தினமும் 4 - 5 கிலோ காளான் கிடைக்கும். குளிர்ச்சியான நாட்களில் அறுவடை அதிகமாக இருக்கும். அறுவடைக்கு பின் காளான் படுக்கை சுருங்கி விடும். அப்போது கவரை அகற்றி வெளியே வைத்தால் பத்து நாட்களுக்குள் ஒரு கிலோ வரை மீண்டும் அறுவடையாகும். இதில் கழிவு என்பதே கிடையாது. படுக்கையை காயவைத்து மாடுகளுக்கு தீவனமாக தரலாம். இரண்டரை ஆண்டுகளாக ஒரே குடிலில் தான் அறுவடை செய்கிறேன். அக்கம் பக்கம் வீடுகளில் காளானை கேட்டு வாங்குகின்றனர். ஒரு சிலர் பாக்கெட் போடாமல் அப்படியே வாங்கிச் செல்கின்றனர். மேலும் வீடுகளுக்கும் டோர்டெலிவரி செய்கிறோம். உண்மையாகவே பெண்களுக்கு ஏற்ற தொழில் காளான் வளர்ப்பு தான். வீட்டில் இருந்தவாறே குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு தொழிலையும் நடத்த முடியும். இப்போது செலவு போக மாதம் ரூ.20 ஆயிரத்திற்கு மேல் லாபம் கிடைக்கிறது. கூடுதலாக இன்னொரு குடில் அமைப்பதற்கு முத்ரா கடனுக்கு விண்ணப்பித்துள்ளேன். கடன் கிடைத்தால் தொழிலை விரிவுபடுத்தி மற்றவர்களுக்கு வேலையும் தரமுடியும் என்றார். இவரிடம் பேச: 99627 72601. -எம்.எம்.ஜெயலெட்சுமி மதுரை