உள்ளூர் செய்திகள்

இயற்கை விவசாயம் ஒரு வழக்கறிஞரின் அனுபவம்

திருச்செந்தூரில் வழக்கறிஞர் தொழில் செய்து வரும் ராமகிருஷ்ணன் இயற்கை விவசாயம் பற்றிகூறுகிறார். 'நான் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா, நாசரேத் அருகில், பிடானேரி என்ற கிராமத்தில் 8 ஏக்கர் நிலம் 1993ல் கிரையம் வாங்கி விவசாயம் ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் சுமார் 1000 முருங்கை மரங்கள் வளர்த்தேன். அதில் ஓரளவு லாபமும் கிடைத்தது. ஆனால் நாளடைவில் பல சமயங்களில் முருங்கைக்காய் விலை வீழ்ச்சி அடைந்தது. எனவே ஒரு விதமான பயிரை பயிரிடுவது சரியல்ல என்று முடிவு செய்து, முருங்கை மரங்களுக்கு நடுவே தென்னை, மா, முந்திரி, சப்போட்டா, எலுமிச்சை, மாதுளை, சீத்தா, நெல்லி, கொய்யா, நாவல் என்று பலவிதமான மரங்களை வளர்த்துள்ளேன். மொத்தத்தில் சுமார் 30 வகையான பயன்தரும் மரங்கள் இருக்கின்றன. தென்னை மரங்களுக்கு இடையே 30 அடி இடைவெளி இருக்கிறது. அந்த இடைவெளியில் பல்வேறு மரங்களை வைத்துள்ளேன். கீரைகளும், காய்கறி செடிகளும் பயிரிட்டுள்ளேன். வீட்டிற்கு வேண்டிய காய்கறி, பழங்கள் தோட்டத்திலேயே கிடைக்கின்றன. மரங்கள் அனைத்திற்கும் சொட்டுநீர் பாசனம் செய்கிறேன்.ஆரம்பத்தில் ரசாயன உரம், மருந்து ஆகியவைகள் பயன்படுத்தி வந்தேன். 2004ம் வருடம் குமுதம் பத்திரிகையில் நம்மாழ்வாரின் கட்டுரை ஒன்றை படித்தேன். மறுநாளே இயற்கை விவசாயத்திற்கு மாறிவிட்டேன். தற்போது சுபாஸ் பாலேக்கரின் கட்டுரைகளைப் படித்து அதன்படி ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். 3 நாட்டு பசுமாடுகள் இருக்கின்றன. அவற்றின் சாணத்தையும் கோமியத்தையும் கொண்டு ஜீவாமிர்தம் தயார்செய்து பயன்படுத்தி வருகிறேன். மரங்களை நோய்கள் தாக்குவதில்லை. இயற்கை விவசாயம் செய்வதால் பலவகை பறவைகள் தோட்டத்திற்கு உள்ளேயே வசிக்கின்றன. புழு, பூச்சிகளை அவைகள் உணவாகக் கொள்கின்றன. வெளியில் இருந்து வாரத்திற்கு 8 கிலோ தட்டாம் பயிர் மட்டும்தான் விலைகொடுத்து வாங்குகிறேன். நான் சனிக்கிழமைதோறும் தோட்டத்திற்கு செல்கிறேன். உழுவதும் இல்லை. களை பறிப்பதும் இல்லை. தோட்டத்தில் ஒரே ஒரு நபர்தான் வேலை பார்க்கிறார். ஜீவாமிர்தக் கரைசலை ஊற்றுவதும், விளைபொருட்களைப் பறிப்பதும் அவரது வேலை.ரசாயன உரம் உபயோகித்து வந்த காலத்தைவிட, மரங்கள் அதிகமாக மகசூல் கொடுக்கின்றன. தற்போது பெரு நெல்லிக்காய்களின் பாரம் தாங்காமல் கிளைகள் ஒடிந்துள்ளன. அந்த அளவு இயற்கை விவசாயம் பலன் அளிக்கக் கூடியதாக இருக்கிறது. தொடர்புக்கு: எஸ்.ராமகிருஷ்ணன், பி.எஸ்சி., பி.எல்., 59, மல்லிப்புரம் தெரு, திருச்செந்தூர்-628 215. போன்: 04639-245 526, 94433 86626.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !