| ADDED : நவ 25, 2025 05:56 AM
பெங்களூரு: பெங்களூரில் கடந்த பத்து மாதங்களில் பணியில் கடமை தவறிய, 10 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 124 போலீசார் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர். பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங் கூறியதாவது: பெங்களூரில் கடந்த பத்து மாதங்களில் கொள்ளை, ஊழல், போதை பொருள் கடத்தல் ஆகிய வழக்குகளில் கடமை தவறியவர்கள், பிற குற்றங்களில் ஈடுபட்ட 124 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். இதில், 10 இன்ஸ்பெக்டர்கள், 16 சப் - இன்ஸ்பெக்டர்கள், 41 தலைமை ஏட்டு, 41 ஏட்டு ஆகியோர் அடங்குவர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது தொடரும். இணை கமிஷனர், துணை கமிஷனர்கள் தங்கள் கீழ் பணிபுரியும் போலீசாருடன் சந்தித்து பேசி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஒழுக்கமாக செயல்படவில்லை என்றால் துறை ரீதியான விசாரணை நடத்தப்படும். அவர்கள் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்படும். குற்றத்தை பொறுத்து தண்டனை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.