- நமது நிருபர் -: 'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்த குடி' எனும் சிறப்புக்குரிய இனத்தை சேர்ந்தவர்கள் நாம். அப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க இனத்தில் பிறந்துவிட்டு, நம் வாழ்வியல், வரலாறு என அனைத்தையும் தெரிந்து கொள்ளாமல் இருந்தால் எப்படி. இதை தெரிந்து கொள்வது அத்தனை கடினமானது அல்ல. எளிமையாகவே தெரிந்து கொள்ளலாம். அறிந்து கொள்ள ஆர்வம் இருந்தால் மட்டுமே போதும். அறிய நினைப்பவர்கள், தமிழ் புத்தக திருவிழாவில் 'தமிழர் வாழ்வியல் கண்காட்சி' அரங்கிற்கு கட்டாயம் வர வேண்டும். இந்த அரங்கு முழுக்க முழுக்க மாணவர்களின் கை வண்ணத்தால் உருவானது. அரங்கின் உள்ளே நுழைந்ததும், நாமும் மாணவர் பருவத்திற்கு சென்று விடுவோம். இங்கு தமிழர் வாழ்வியலை பிரதிபலிக்கும் அனைத்து விஷயங்களும் இருக்கின்றன. பதினெண் மேன்கணக்கு, பதினெண் கீழ்கணக்கு, ஐம்பெரும் காப்பியங்கள், அறநுால்கள், கல்வெட்டுகள், எண், இலக்கணம், கடையேழு வள்ளல்கள், சிறு தானியங்கள், ஐம்பெரும் நிலங்கள், உடுக்கை, கொம்பு, பறை, கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள், ஈட்டி, கோடாரி, தமிழர் பாரம்பரிய உணவுகள், மனு நீதி சோழனின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் விஷயங்களும், தஞ்சை பெருவுடையார் கோவில் போன்றவை காட்சி படுத்தப்பட்டு உள்ளன. இவை அனைத்தும் கலர் அட்டைகளில், மண் பொருட்கள் போன்றவற்றால் காட்சி படுத்தப்பட்டு உள்ளன. இதை பார்த்தவுடனே எளிதில் புரிந்து கொள்ளலாம். இதை ஆர்.பி.ஏ.என்.எம்.எஸ்., மாணவர்கள் செய்து சாதித்து உள்ளனர். இந்த அரங்கை சுற்றிப்பார்க்க வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே ஆகும். இதன் மூலம், 2,000 ஆண்டு கால தமிழர் வாழ்வியலை அறிந்து கொள்ள முடியும். இப்படிப்பட்ட அரிய பயணத்தை தவற விட்டு விடாதீர்கள்.