அரசு மருத்துவ கல்லுாரிகளில் கூடுதலாக 450 சீட ் கள் சேர்ப்பு
பெங்களூரு : ''கர்நாடகாவில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரிகளில் கூடுதலாக 450 'சீட ் 'கள் சேர்க்கப்பட்டு உள்ளன,'' என்று மருத்துவ கல்வி, திறன் மேம்பாட்டு அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல் கூறினார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: கர்நாடகாவில் உள்ள மருத்துவ கல்லுாரிகளில் கூடுதலாக 450 மாணவர்கள் படிப்பதற்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்து உள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி உள்ளது. இந்த 450 சீட்டுகளில் 15 சதவீதம் என்.ஆர்.ஐ., எனும் வெளிநாட்டு வாழ் இந்திய மாணவர்கள் படிப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. என்.ஆர்.ஐ., மாணவர்களிடமிருந்து ஒரு சீட்டுக்கு 25 லட்சம் ரூபாய் கல்வி கட்டணமாக வசூலிக்கப்படும். இதன் மூலம் அரசு மருத்துவ கல்லுாரிகள் பொருளாதார தன்னிறைவை அடைய முடியும். மாநில அரசு ஒதுக்கும் மானியங்களை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய தேவை மருத்துவ கல்லுாரிகளுக்கு ஏற்படாது. இந்த கூடுதல் இடங்கள் பெங்களூரு, மைசூரு, பெலகாவி, கலபுரகி, சிக்கபல்லாபூர், ஹாசன், ராய்ச்சூர், விஜயநகர், ஹூப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவ கல்லுாரிகளுக்கு வழங்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 50 சீட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் மாநிலத்தில் உள்ள மருத்துவ சீட்களின் எண்ணிக்கை 9,663 ஆக உயர்ந்து உள்ளது. மருத்துவ கல்வியில் ஆர்வமுள்ள மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து கொண்டே வருகிறது. பல தகுதி வாய்ந்த மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் அதிக கட்டணம் செலுத்த முடியாததால், மருத்துவம் படிக்க முடியாமல் உள்ளனர். இந்த அவல நிலையை போக்கவே, கூடுதல் இடங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. தசரா பண்டிகைக்கு பிறகு மைசூரில் வேலைவாய்ப்பு கண்காட்சி; அக்டோபரில் செவிலியர் உச்சி மாநாடு நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.