5 மாத குழந்தை பலியான சம்பவம்; அதிகமான மயக்க மருந்தே காரணம்
சாம்ராஜ்நகர் : காது குத்துவதற்காக, வலி தெரியாமல் இருப்பதற்காக அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து கொடுத்ததால், ஐந்து மாத குழந்தை உயிரிழந்தது. இச்சம்பவம் நடந்து ஆறு மாதங்களுக்கு பின், வெளிச்சத்துக்கு வந்தது. சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டுலுபேட் தாலுகாவின், பொம்மலாபுரா கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி சுபமானசா. தம்பதிக்கு பிரக்யத் என்ற ஆண் குழந்தை இருந்தது. நடப்பாண்டு பிப்ரவரி 3ம் தேதியன்று, குழந்தைக்கு காதணி விழா நடத்த பெற்றோர் முடிவு செய்தனர். சிறு குழந்தை என்பதால் வலி தெரியாமல் இருக்க, பொம்மலாபுரா ஆரம்ப சுகாதார மையத்துக்கு அழைத்து சென்றனர். சுகாதார மையத்தின் டாக்டர், குழந்தையின் இரண்டு காதுகளிலும், ஊசி போட்டார். ஊசி போட்ட சில நிமிடங்களில் குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டு, வாயில் நுரை வந்தது. பெற்றோர் தாலுகா மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது, வழியில் உயிரிழந்தது. இதற்கு ஆரம்ப சுகாதார மைய டாக்டர், அளவுக்கு அதிகமான மயக்க மருந்து கொடுத்ததே காரணம் என, குற்றச்சாட்டு எழுந்தது. குழந்தையின் குடும்பத்தினர், உறவினர்கள் மருத்துவமனை முன் குவிந்து, போராட்டம் நடத்தினர். பிரேத பரிசோதனை செய்து, நடவடிக்கை எடுப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியிருந்தனர். பரிசோதனை அறிக்கை நேற்று முன்தினம், அதிகாரிகளுக்கு வந்தது. குழந்தையின் இறப்புக்கு, அளவுக்கு அதிகமான மயக்க மருந்து கொடுத்ததே காரணம். சுவாசப்பை, மூளையில் ரத்தம் உறைந்து, குழந்தை இறந்ததாக விவரிக்கப்பட்டிருந்தது. இது குறித்து, குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின்படி, குண்டுலுபேட் போலீசார், ஆரம்ப சுகாதார மைய டாக்டரிடம் விசாரணை நடத்துகின்றனர்.