உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / காலை உணவு சாப்பிட்ட 81 மாணவர்கள் பாதிப்பு

காலை உணவு சாப்பிட்ட 81 மாணவர்கள் பாதிப்பு

பெலகாவி: பள்ளியில் தயாரிக்கப்பட்ட காலை உணவை சாப்பிட்ட 81 மாணவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பெலகாவி மாவட்டம், சிக்கோடி அருகே உள்ள ஹிரேகோடியில் மொராஜி தேசாய் அரசு உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். நேற்று வழக்கம்போல பள்ளி வளாகத்தில் தயாரிக்கப்பட்ட காலை உணவை மாணவர்கள் சாப்பிட்டனர். பிறகு, இவர்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்று வலி ஏற்பட்டது. இதை பார்த்த ஆசிரியர்கள் உடனடியாக மாணவர்களை தாலுகா மருத்துவமனை, சிக்கோடியில் உள்ள தாய் - சேய் மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவல் அறிந்து மாவட்ட கூடுதல் சுகாதார அதிகாரி கடாத், மருத்துவமனைக்கு வந்து மாணவர்களிடம் நலன் விசாரித்தார். பின், அவர் கூறியதாவது: காலை உணவை சாப்பிட்ட 171 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. கடுமையான பாதிப்பு உள்ள 81 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஒரு மாணவி மட்டும் பெலகாவி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமாக உள்ளது. மற்ற மாணவர்கள் குணமடைந்து வருகின்றனர். மருத்துவர்கள் உணவில் விஷம் கலந்து இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். உணவை தயாரித்தவர், அலட்சியமாக செயல்பட்ட பள்ளி நிர்வாகிகள், தாலுகா அளவிலான அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். காங்கிரஸ் எம்.எல்.சி., பிரகாஷ் ஹுக்கேரியும் மருத்துவமனையில் உள்ள மாணவர்களிடம் நலம் விசாரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ