மண் கலை பொருட்களால் மக்களை ஈர்க்கும் மாற்றுத்திறனாளி
- நமது நிருபர் - ஒரு காலத்தில் முன்னோர்கள் செய்த குலத்தொழிலை பிள்ளைகளும் செய்தனர். விவசாயம், நாவிதர், மண் பாண்டம் செய்வது, செருப்பு தைப்பது என பல்வேறு குலத்தொழில்கள் இருந்தன. காலப்போக்கில் இத்தகைய குலத்தொழிலில் ஈடுபட தயங்கி, பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டினர். நகர்ப்பகுதிகளுக்கு குடி பெயர்ந்தனர். இதனால் பெரும்பாலான தொழில்கள் நலிவடைந்துள்ளன. ஆனால் குலத்தொழில் மீது, மதிப்பு வைத்துள்ள சிலர், இப்போதும் அந்த தொழிலை செய்கின்றனர். இதன் மூலம் தங்களின் முன்னோர்களுக்கு மரியாதை செலுத்துகின்றனர். இவர்களில் பன்டலீகா கும்பாராவும் ஒருவர். இவர் ஒரு மாற்றுத்திறனாளி. பி.எட்., படிப்பு பெலகாவி மாவட்டம், கானாபுரா தாலுகாவின் டுக்கரவாடி கிராமத்தில் வசிப்பவர் பன்டலீக கும்பாரா, 29. இவர் பிறவியிலேயே கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி. பெற்றோருக்கு இரண்டாவது மகன். இவருக்கு ஒரு ஒரு சகோதரியும், இரண்டு சகோதரர்களும் உள்ளனர். வீட்டில் கடுமையான வறுமை நிலவியது. இது போன்ற இடையூறுகளை கடந்து, கஷ்டப்பட்டு, முதுகலை, பி.எட்., பட்டப்படிப்பை முடித்தார். இவருக்கு அரசுப்பணி தேடி வந்தது. ஆனால் அதை அவர் நிராகரித்தார். இவரது முன்னோர்கள் மண் பாண்டங்கள் தயாரிக்கும் தொழில் செய்தவர்கள். அந்த தொழிலை அவரும் கையில் எடுத்தார். இதற்கு முன் அவரது முன்னோர்கள், சட்டி, பானை, அகல் விளக்கு உட்பட சில சம்பிரதாயமான மண் பொருட்களை தயாரித்தனர். இது அன்றாட உணவுக்கும், துணிமணிகளுக்கும் போதுமானதாக இல்லை. வறுமையை ஒழிக்க முடியவில்லை. இதை சவாலாக ஏற்ற கும்பாரா, முன்னோர்கள் செய்த குலத்தொழில் மூலமாகவே, முன்னுக்கு வர வேண்டும் என, உறுதி பூண்டார். தன்னை தேடி வந்த உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் பணியை உதறினார். 'நான் அரசு பணிக்கு சென்றுவிட்டால், எங்கள் முன்னோர்களின் குலத்தொழில், கிராமிய கலை நலிவடையும். அதை நான் காப்பாற்ற வேண்டும்' என, கூறிவிட்டு மண் பாண்டங்கள் தயாரிப்பதில் ஈடுபட துவங்கினார். வெறும் சட்டி, பானைகள் செய்வதால் பயன் இல்லை என்பதை உணர்ந்து கொண்ட அவர், மண்ணில் கலைப் பொருட்களை தயாரிக்க முடிவு செய்தார். கானாபுரா மண்பாண்டங்கள் தயாரிப்பு பயிற்சி மையத்தில், பயிற்சி பெற்றார். அதன்பின் பெங்களூரின் கிராப்ட் கவுன்சில் ஆப் கர்நாடகா மையத்தில், இயந்திரங்கள் மூலமாக பொருட்களை தயாரிப்பது, மாரல் ஆர்ட், கையில் மண் கலைப் பொருட்கள் தயாரிக்கும் கலையை வளர்த்து கொண்டார். ரூ.3 லட்சம் வருவாய் அதன்பின் தன் கிராமத்தில், ஐந்து பேருடன் கலைப்பொருட்களை தயாரித்து, விற்பனை செய்ய துவங்கினார். ஆரம்ப நாட்களில் 15,000 ரூபாய் வரை வருவாய் கிடைத்தது. இப்போது மாதந்தோறும், 3 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது. கிராமத்தில் பலருக்கும் வேலை கொடுத்துள்ளார். இவர்களுக்கு 15,000 ரூபாய் வரை ஊதியம் கொடுக்கிறார். இவர் தயாரிக்கும் மண் கலைப் பொருட்கள், ஒன்றை விட ஒன்று அழகானவை. வீட்டு உபயோக பொருட்கள், அலங்கார பொருட்கள், உருவச் சிலைகள், குழந்தைகளின் விளையாட்டு பொருட்கள், பூஜை பொருட்கள் உட்பட அதி நவீன வாழ்க்கைக்கு தேவையான, அனைத்து பொருட்களையும் தயாரிக்கிறார். தண்ணீர் கூஜா, அழகான பூந்தொட்டி, பானை, சட்டிகள், அகல் விளக்கு, டீ குடிக்கும் கும்ளர், தட்டு, மண் அடுப்பு, தண்ணீர் நிரப்பும் குடம், ஜக், கப், துளசி மாடம், மண் குதிரை, ஆமை, கலை நயமிக்க விளக்குகள் உட்பட, 400க்கும் மேற்பட்ட பொருட்கள், இவரது கை வண்ணத்தில் உருவாகின்றன. விநாயகர், சிவன், புத்தர், பசவேஸ்வரா, சுவாமி விவேகானந்தா, வீர சிவாஜி என, வாடிக்கையாளர்களின் ஆர்டர்களுக்கு தக்கபடி, கடவுள் சிலைகள், தேசத்தலைவர்களின் சிலைகளை தயாரித்து தருகிறார். வெளிநாடுகள் இவருக்கு கர்நாடகா மட்டுமின்றி, கோவா, மஹாராஷ்டிரா, தெலுங்கானா, குஜராத், கேரளா உட்பட, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆர்டர்கள் வருகின்றன. கடந்த நான்கு ஆண்டாக, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து நாடுகளுக்கும், கூரியர் மூலமாக ஏற்றுமதி செய்கிறார். இவரது கலை திறமையை பாராட்டி, பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இவர் தயாரித்த நரசிம்ம மூர்த்தி சிலைக்கு, மத்திய அரசின், 'ஹேண்டிகிராப்ட் ஸ்பெஷல் மென்சென்ட் நேஷனல் அவார்டு' கிடைத்தது. டிசம்பர் 8ல், ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், ஜனாதிபதி திரவுபதி முர்மு விருது வழங்கினார். கும்பாரா கூறியதாவது: எங்கள் வீட்டில் வறுமை தாண்டவமாடியது. ஒரு வேளை உணவுக்கும் பரிதவிக்கும் சூழ்நிலையில் இருந்தோம். தாய், தந்தை கஷ்டப்பட்டு எங்களை வளர்த்து, படிக்க வைத்தனர். இப்போது நான் எங்களின் குலத்தொழிலை செய்து, என் குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்துகிறேன். என் சமுதாயத்தின் பொருளாதாரத்தை உயர்த்துவது என், குறிக்கோ ளாகும். புதுப்புது டிசைன்களில், கலை பொருட்களை தயாரித்து நாடு முழுவதும் வியாபாரம் செய்ய வேண்டும் என்பது, என் விருப்பமாகும். 500க்கும் மேற்பட் டோருக்கு வேலை கொடுக்க வேண்டும். எனக்கு மத்திய, மாநில அரசுகள் உதவிக்கரம் நீட்டினால், என் கனவு நனவாகும். 'மேக் இன் இந்தியா' திட்டத்துக்கு, என் பங்களிப்பை அளிப்பேன். இவ்வாறு அவர் கூறி னார்.