மது வாங்கி தராததால் சரமாரி தாக்கு கோமாவுக்கு சென்ற வாலிபர் பலி
ஜிகனி: பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட தகராறில் தலையில் தாக்கியதால், கோமாவுக்கு சென்ற வாலிபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெங்களூரு ரூரல் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா, ஜிகனி அருகே ஹரகடே வட்டரபாளையாவில் வசித்தவர் சந்தீப், 23. கடந்த 16ம் தேதி இவருக்கு பிறந்தநாள். அன்றைய தினம் இரவு, நண்பர்கள் சந்தோஷ், 25, சாகர், 24 ஆகியோரை, மது விருந்து வைக்க பாருக்கு, அழைத்துச் சென்றார். மூன்று பேரும் மது அருந்தினர். இதற்கான பணத்தை சந்தீப் கொடுத்தார். வீட்டிற்கு புறப்படும்போது, சந்தோஷும், சாகரும் மது பாட்டில் வாங்கினர். இதற்கு பணம் கொடுக்கும் விஷயத்தில் தகராறு ஏற்பட்டது. கிராமத்தில் உள்ள வாலிபால் மைதானத்தில் சந்தீபை இருவரும் தாக்கினர். கீழே விழுந்த அவரது தலை, கல்லில் இடித்தது. இதை பொருட்படுத்தாத அவர் வீட்டிற்கு சென்றார். கடந்த 20ம் தேதி அவர், வீட்டில் மயக்கம் போட்டு விழுந்தார். ஆனேக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சந்தீப் தலையில் ரத்தம் உறைந்தது தெரிந்தது; சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் கோமாவுக்கு சென்றார். சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் இரவு இறந்தார். சந்தீப் குடும்பத்தினர் புகார் அளித்ததை அடுத்து, ஜிகனி போலீசார், சந்தோஷ், சாகரை கைது செய்தனர். உறவுமுறையில் இவர்கள் அண்ணன், தம்பி ஆவர்.