| ADDED : செப் 01, 2026 03:14 AM
பெங்களூரு: கர்நாடக மேல்சபையில் காலியாக உள்ள ஐந்து நியமன எம்.எல்.சி.,க்களை தேர்வு செய்வது குறித்து ஆலோசிக்க, முதல்வர் சிவகுமார் டில்லி சென்றுள்ளார். மேல்சபையில் பிரபல நடிகர் ரவிச்சந்திரனுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக மேல்சபையில் ஐந்து நியமன எம்.எல்.சி., இடங்கள் காலியாக உள்ளன. இதில் நடிகர் ரவிச்சந்திரனுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என தெரிகிறது. முதல்வர் சிவகுமாரும், ரவிச்சந்திரனும் ஒரே கல்லுாரியில் படித்தவர்கள். இப்போதும் அவர்களின் நட்பு நீடிக்கிறது. இருவரும் ஒருமையில் பேசுவர். ரவிச்சந்திரனை அரசியலுக்கு அழைத்து வர, முதல்வர் சிவகுமார் விரும்புகிறார். கலைஞர்கள் கோட்டாவில் தேர்வு செய்ய, திட்டமிட்டுள்ளார். சில நாட்களுக்கு முன், இருவரும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். சிவகுமாரே, ரவிச்சந்திரன் வீட்டுக்கு வந்திருந்தார். மேல்சபை நியமன எம்.எல்.சி.,க்களை தேர்ந்தெடுப்பது தொடர்பாக ஆலோசிக்க, முதல்வர் சிவகுமார் டில்லி சென்றுள்ளார். ரவிச்சந்திரன் நடிகராக மட்டுமின்றி இயக்குநர், தயாரிப்பாளர், இசை அமைப்பாளர், பாடலாசிரியர், வசனகர்த்தாவாக பணியாற்றியவர். கலையுலகிற்காக இவர் செய்த சாதனையை கருத்தில் கொண்டு, அவரை எம்.எல்.சி.,யாக்க காங்கிரஸ் மேலிடம் ஒப்புதல் அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.