உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  போலீசார் அவமதித்ததாக கூறி தீக்குளித்த ஆட்டோ ஓட்டுநர்

 போலீசார் அவமதித்ததாக கூறி தீக்குளித்த ஆட்டோ ஓட்டுநர்

சித்ரதுர்கா: போக்குவரத்து போலீசார் சோதனையிடும் போது, தன்னை அவமதித்து அபராதம் கட்டும்படி வலியுறுத்தியதாக குற்றம்சாட்டிய ஆட்டோ ஓட்டுநர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டார். சித்ரதுர்கா நகரின், காந்தி சதுக்கம் அருகில் நேற்று முன்தினம், போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக, ஆட்டோ ஓட்டுநர் திப்பேசாமி வந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். திப்பேசாமி குடிபோதையில் ஆட்டோ ஓட்டியதாக, போலீசார் சந்தேகித்தனர். சீருடை அணியாதது குறித்தும் கேள்வி எழுப்பினர். இதனால் போலீசாருக்கும், திப்பேசாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அவர் மற்றவர் மீது மோதும் வகையில், அதிவேகமாக ஆட்டோ ஓட்டி வந்ததாக, போலீசார் குற்றம்சாட்டினர். 500 ரூபாய் அபராதம் செலுத்தும்படி உத்தரவிட்டனர். போலீசாரின் குற்றச்சாட்டால், கோபமடைந்த திப்பேசாமி தான் வைத்திருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தீ வைத்து கொண்டார். இதை பார்த்த அப்பகுதியினர், தீயை கட்டுப்படுத்தி அவரை, சித்ரதுர்கா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உடலின் பெரும்பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டுள்ளதால், தாவணகெரேவின் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். படுக்கையில் இருந்தபடியே, ஊடகத்தினரை சந்தித்த திப்பேசாமி, ''போலீசார் என் ஆட்டோவை தடுத்து நிறுத்தினர். என்னை தாக்கினர். மரியாதை குறைவாக நடத்தினர். அவமானம் தாங்காமல் தீ வைத்து கொண்டேன். நான் இறந்தால் அதற்கு போலீசாரே காரணம்,'' என குற்றம்சாட்டினார். ஓட்டுநரை தற்கொலைக்கு துாண்டியதாக, சக ஆட்டோ ஓட்டுநர்கள் சித்ரதுர்காவின், காந்தி சதுக்கம் முன் குவிந்து நேற்று காலை போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து, உயர் அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். இதன்படி அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை, போலீசார் ஆய்வு செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை