உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பெலகாவியில் குளிர்கால சட்டசபை கூட்டம் அனைவரும் பங்கேற்க பசவராஜ் ஹொரட்டி அழைப்பு

 பெலகாவியில் குளிர்கால சட்டசபை கூட்டம் அனைவரும் பங்கேற்க பசவராஜ் ஹொரட்டி அழைப்பு

ஹாவேரி: “பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில், குளிர்காலக் கூட்டத் தொடருக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்,” என, மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி தெரிவித்தார். ஹாவேரியில் நேற்று அவர் அளித்த பேட்டி: பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில் நடக்கும், சட்டசபை குளிர்காலக் கூட்டத்தொடர், வெறும் போராட்டம் நடத்துவதற்கு மட்டுமே பயன்படுவதாக கருத்து உள்ளது. இது எனக்கு வருத்தம் அளிக்கிறது. இந்த குற்றச்சாட்டை போக்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு உட்பட, மேம்பாட்டு விஷயங்கள் குறித்து, ஆலோசிக்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு பல பிரச்னைகள் உள்ளன. சட்டசபை, மேல்சபைகளில் கூச்சல், குழப்பம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சபை தள்ளி வைக்கப்படாமல், விவாதங்கள் நடக்க வேண்டும். தென் மாவட்டங்களின் எம்.எல்.ஏ.,க்கள், வட மாவட்டங்களின் மக்கள் பிரச்னைகளை பற்றி விவாதிக்கின்றனர். ஆனால் வட மாவட்ட எம்.எல்.ஏ.,க்கள், இங்குள்ள பிரச்னைகள் பற்றி பேசுவது இல்லை. கேள்வி நேரம் முடிந்த பின், வட மாவட்டங்களின் பிரச்னைகள் குறித்து விவாதிப்போம். முந்தைய கூட்டத்தொடரில், வட மாவட்டங்களின் பிரச்னைகளை, அப்பகுதி எம்.எல்.ஏ.,க்கள் பேசவில்லை. தென் மாவட்ட எம்.எல்.ஏ.,க்கள் பேசினர். அதை எழுதி வைத்துள்ளேன். போன் செய்து அனைத்து எம்.எல்.ஏ.,க்களிடம் பேசி வருகிறேன். தனி மாநிலம் அமைப்பதால், பிரச்னைகள் தீர்ந்து விடாது. கர்நாடகாவை ஒருங்கிணைக்க பலர் போராட்டம் நடத்தியுள்ளனர். கர்நாடகா அகண்ட மாநிலமாக இருக்க வேண்டும். மாநிலத்தை பிரிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அனைத்து எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்களும், கூட்டத்தொடரில் பங்கேற்க வேண்டும். இதுகுறித்து, 38 பேருடன் பேசினேன். மற்றவர்களுடனும் விரைவில் பேசுவேன். அனைவரும் கூட்டத்தொடரில் பங்கேற்று, சபையின் கவுரவத்தை அதிகரிக்க வேண்டும். தற்போது மேல்சபை தலைவராக இருக்கிறேன். எத்தனை ஆண்டுகள் இருந்தாலும், ஒரு நாள் 'மாஜி' ஆக வேண்டும். எனவே இப்பதவியில் இருந்து, என்னை மாற்றினாலும் கவலைப்பட மாட்டேன். அரசு மற்றும் எம்.எல்.சி.,க்கள் எடுக்கும் முடிவுக்கு, நான் கட்டுப்படுவேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை