உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பெலகாவி கூட்டத்தொடரால் பயனில்லை: அரசு மீது வட மாவட்ட மக்கள் அதிருப்தி

 பெலகாவி கூட்டத்தொடரால் பயனில்லை: அரசு மீது வட மாவட்ட மக்கள் அதிருப்தி

பெலகாவி: 'பெலகாவியில் சட்டசபை கூட்டம் நடத்துவதால், அங்குள்ள ஹோட்டல், லாட்ஜ் உரிமையாளர்கள் லாபம் அடைகின்றனர். ஆனால் வட மாவட்டங்களின் முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை. கோடிக்கணக்கான ரூபாய் வீணாகிறது' என, மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கடந்த 2006ல், கர்நாடகா - மஹாராஷ்டிரா இடையிலான எல்லை பிரச்னை ஏற்பட்டது. பெலகாவி தனக்கு சொந்தம் என, மஹாராஷ்டிரா உரிமை கொண்டாடியது. இம்மாநிலத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அன்றைய முதல்வர் குமாரசாமி, பெலகாவியில் சட்டசபை கூட்டத்தொடர் நடத்த முடிவு செய்தார். அங்குள்ள கே.எல்.இ., நிறுவனத்தின், ஜே.என்.எம்.சி., பவனில் சட்டசபை நடத்தப்பட்டது. பெலகாவியில் சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டதால், வட மாவட்ட மக்களுக்கு புதிய நம்பிக்கை ஏற்பட்டது. அரசே நமது மாவட்டத்துக்கு வந்துள்ளது. பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என, எதிர்பார்த்தனர். ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பு பொய்த்தது. 12 ஆண்டுகளாக சட்டசபை கூட்டம் நடத்தியும், எந்த மாற்றமும் ஏற்படவில்லை. வட மாவட்டங்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் பெங்களூரில் உள்ள விதான் சவுதா போன்று, பெலகாவியில் 500 கோடி ரூபாய் செலவில் சுவர்ண விதான் சவுதா கட்டப்பட்டது. 2012 அக்டோபர் 11ல் அன்றைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சுவர்ண விதான் சவுதாவை திறந்து வைத்தார். அன்று முதல் ஆண்டுதோறும் நடக்கும் குளிர்கால சட்டசபை கூட்டத்தொடர், சுவர்ண விதான் சவுதாவில் நடக்கிறது. ஆண்டுதோறும் 10 நாட்கள் மட்டும் நடக்கும் குளிர்கால கூட்டத்தொடருக்கு, கோடிக்கணக்கான ரூபாய் செலவிடுகின்றனர். வரும் 8ம் தேதி பெலகாவியில் சட்டசபை கூடுகிறது. அனைத்து அரசுகளும் பெயரளவுக்கு கூட்டத்தொடர் நடத்துகின்றன. இதனால் பெலகாவியில் உள்ள ஹோட்டல்கள், லாட்ஜ்கள் லாபமடைகின்றன. ஆனால் வட மாவட்ட மக்களுக்கு எந்த பயனும் இல்லை. சுவர்ண விதான் சவுதா கட்டியதற்கான நோக்கமே, நிறைவேறவில்லை என, மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, கன்னட போராட்டக்காரர் அசோக் சந்தரகி கூறியதாவது: பெலகாவியில் கூட்டத்தொடர் நடப்பதால், வட மாவட்டங்களின் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என, எதிர்பார்த்தோம். ஆனால் அது பொய்த்துவிட்டது. சுவர்ண விதான் சவுதா, 'பிக்னிக் ஸ்பாட்' போன்றுள்ளது. வட மாவட்டங்களின் எம்.எல்.ஏ.,க்களே, கூட்டத்தொடரில் சரியாக பங்கேற்பது இல்லை. ஆண்டு தோறும் கூட்டத்தொடர் நடத்த வேண்டும் என்ற, காரணத்தால் நடத்துகின்றனர். இப்பகுதி மக்களுக்கு நியாயம் கிடைக்க செய்ய, எந்த அரசுகளும் முயற்சிக்கவில்லை. அரசியல் சண்டைகள், அரசின் குழப்பங்கள் பற்றி பெலகாவியில் விவாதிக்கின்றனர். அர்த்தமுள்ள விவாதங்கள் நடப்பது இல்லை. கூட்டத்தொடருக்கு வரும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகளுக்கு உணவு, சிற்றுண்டி, தங்கும் வசதி செய்யப்படுகிறது. கூட்டத்தொடருக்கு 20 கோடி ரூபாய்க்கும் மேலாக செலவிடப்படுகிறது. ஹோட்டல்கள், லாட்ஜ்கள் லாபமடைகின்றன. மக்களுக்கு பயன்படவில்லை. இத்தனை முறை நடந்த கூட்டத்தொடரில், வட மாவட்டங்களின் என்னென்ன பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. எத்தனை பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டது என்பதை, முதல்வர் சித்தராமையா பகிரங்கப்படுத்த வேண்டும். சுற்றுலாவுக்கு வந்து செல்வது போன்று, வந்து செல்லாமல் வட மாவட்டங்களின் நீர்ப்பாசனம், கல்வி, சாலை, பாலங்கள், ஐ.டி.பி.டி., நிறுவனங்கள் கொண்டு வருவது என, முக்கியமான விஷயங்களை பற்றி, விவாதிக்க வேண்டும். வழக்கம் போன்று இம்முறையும், வாக்குவாதம், கூச்சல், ஆர்ப்பாட்டம், ஒருவரை ஒருவர் திட்டுவதில் ஈடுபடாமல், அர்த்தமுள்ள விஷயங்களை விவாதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை