உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  போக்குவரத்து கழகங்களில் இடமாற்றம்; ஜன., 1 முதல் விண்ணப்பிக்க அழைப்பு

 போக்குவரத்து கழகங்களில் இடமாற்றம்; ஜன., 1 முதல் விண்ணப்பிக்க அழைப்பு

பெங்களூரு: அரசு போக்குவரத்து கழகங்களின், நான்கு நிறுவனங்களுக்கு இடையேயான இடமாற்றத்தை அரசு அதிகாரப்பூர்வமாகத் துவங்கியுள்ளது. ஊழியர்கள் ஜனவரி 1ம் தேதி முதல் 31 வரை விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. கர்நாடகாவில் கே.எஸ்.ஆர்.டி.சி., எனும் கர்நாடக மாநில சாலை போக்குவரத்து கழகம்; பி.எம்.டி.சி., எனும் பெங்களூரு சாலை போக்குவரத்து கழகம்; கே.கே.ஆர்.டி.சி., எனும் கல்யாண கர்நாடக சாலை போக்குவரத்து கழகம், என்.டபிள்யூ.ஆர்.டி.சி., வடமேற்கு சாலை போக்குவரத்து கழகம் என நான்கு கழகங்கள் உள்ளன. இதில் பணியாற்றும் ஊழியர்கள், அந்தந்த கழகங்களுக்குள் மட்டுமே இடமாற்றம் செய்யப்பட்டு வந்தனர். ஒரு கழகத்தில் இருந்து மற்றொரு கழகத்துக்கு இடமாற்றம் செய்வதில் தொழில்நுட்ப பிரச்னை இருந்து வந்தது. இதனால், பலரும் தங்கள் சொந்த ஊரை விட்டு, வெளி மாவட்டங்களில் பணியாற்றி வந்தனர். இது தொடர்பாக ஊழியர்கள் நடத்திய போராட்டத்திற்கு தற்போது விடிவு காலம் பிறந்துள்ளது. இது தொடர்பாக, கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாக இயக்குநர் அக்ரம் பாஷா வெளியிட்டு உள்ள அறிக்கை: நான்கு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றுபவர்களில் இடமாற்றம் விரும்புபவர்கள், ஜன., 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தகுதியின் அடிப்படையில் ஒரு கழகத்தில் இருந்து மற்றொரு கழகத்துக்கு இடமாற்றம் செய்யப்படுவர். இந்த இடமாற்றம் வெளிப்படையாக இருக்கும். வயது மூப்பு, மனிதாபினமான அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும். இது தொடர்பாக ஊழியர்களுக்கு அறிவிக்கும்படி, அந்தந்த கழகங்களின் நிர்வாக இயக்குநர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இது நான்கு கழகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. இந்த செயல்பாடு ஆண்டின் முதல் நாளிலேயே துவங்குவது, ஊழியர்களின் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இடமாற்றம் செய்யப்படுவதால், ஊழியர்களுக்கு பணி அழுத்தம் குறைந்து, செயல் திறன் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ