தேர்தல் அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட காங்., முயற்சி
பெங்களூரு: ஓட்டுத் திருட்டை கண்டித்து, கர்நாடக தேர்தல் அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற, இளைஞர் காங்கிரசார் கைது செய்யப்பட்டனர். சட்டசபை, லோக்சபா தேர்தலில் ஓட்டுத் திருட்டில் ஈடுபட்டு பா.ஜ., வெற்றி பெறுவதாக கூறி, பெங்களூரு சுதந்திர பூங்காவில், கர்நாடக இளைஞர் காங்கிரஸ் சார்பில் நேற்று போராட்டம் நடந்தது. இளைஞர் காங்கிரசின் தேசிய தலைவர் உதய் பானு சிப், பொறுப்பாளர் மனீஷ் சர்மா தலைமையில் நடந்த போராட்டத்தில், ராஜ்யசபா எம்.பி., சந்திரசேகர், அமைச்சர்கள் சந்தோஷ் லாட், பிரியங்க் கார்கே, எம்.எல்.சி., சலீம் அகமது, எம்.எல்.ஏ., ரிஸ்வான் அர்ஷத், கர்நாடக இளைஞர் காங்கிரஸ் தலைவர் மஞ்சுநாத் கவுடா உள்ளிட்ட தலைவர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தின்போது அமைச்சர் சந்தோஷ் லாட் பேசியதாவது: இந்த போராட்டம், பீஹார் தேர்தலில் நாங்கள் தோற்றதற்காக அல்ல. நாடு முழுதும் நடக்கும் ஓட்டுத் திருட்டு கண்டித்து போராடுகிறோம். பீஹார் தேர்தலுக்கு முன்பு, வாக்காளர் பட்டியலில் பெரிய அளவில் மாற்றம் செய்துள்ளனர். தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பதவிக்கு வந்த ஆறு மாதங்களில், பீஹார், மஹாராஷ்டிரா, ஹரியானாவில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டு உள்ளது. ஹரியானாவில் 25 லட்சம்; மஹாராஷ்டிராவில் 45 லட்சம் ஓட்டுகள் அதிகரித்துள்ளன. பீஹாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தொகுதியிலும் 15,000 முதல் 20,000 பேரை நீக்கி உள்ளனர். பீஹார் தேர்தல் வெற்றிக்காக, என்.டி.ஏ., கூட்டணி கட்சியினர் 15,000 கோடி ரூபாய் செலவழித்து உள்ளனர். இந்த பணம் எங்கிருந்து வந்தது? ஓட்டுத் திருட்டு பற்றி கிராம அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். இவ்வாறு அவர் பேசினார். மற்ற தலைவர்களும் பேசிய பின், சுதந்திர பூங்கா அருகே உள்ள, கர்நாடக தேர்தல் அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட, காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் புறப்பட்டனர். இரும்பு தடுப்பு கம்பிகளை வைத்து, போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சாலையில் அமர்ந்து காங்கிரசார் போராடினர். அவர்களை கைது செய்து, வேன், பஸ்களில் போலீசார் ஏற்றினர். சிறிது நேரத்தில் விடுவிக்கப் பட்டனர். பட விளக்கங்கள் JPM 15 11 2025 (7) சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய, கர்நாடக இளைஞர் காங்கிரஸ் தலைவர் மஞ்சுநாத் கவுடா, தொண்டர்கள்.