ஜாதிவாரி சர்வேயில் அதிக கேள்விகள் துணை முதல்வர் சிவகுமார் சலிப்பு ஜாதி வாரி சர்வேயில் அதிக கேள்விகள் பொறுமை இழந்த துணை முதல்வர்
பெங்களூரு: பெங்களூரில் ஜாதி வாரி சர்வே, நேற்று துவங்கியது. துணை முதல்வர் சிவகுமாரின் வீட்டில் இருந்து சர்வே துவங்கப்பட்டது. சர்வே ஊழி யர்கள் கேட்ட அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதிலளித்து, துணை முதல்வர் சோர்வடைந்தார். சதாசிவநகரில் உள்ள துணை முதல்வர் சிவகுமாரின் வீட்டில் இருந்து, ஜாதி வாரி சர்வே பணிகள் நேற்று துவக்கப்பட்டன. பெங்களூரின் சர்வேயை அவர் துவக்கி வைத்தார். சர்வே ஊழியர்கள் ஒவ்வொரு கேள்வியாக கேட்டனர். துணை முதல்வர் பதில் அளித்தார். ஆரம்பத்தில் பொறுமையாக பதில் அளித்தார். கேள்விகள் நீண்டு கொண்டே சென்றதால், எரிச்சல் அடைந்த அவர், 'இதெல்லாம் தேவையா?' என, கேள்வி எழுப்பினார். அதிருப்தி அவரது தொழில், வருவாய், ஜாதி, சொத்துகள் உட்பட பல கேள்விகள் கேட்கப்பட்டன. அவரும் பதில் அளித்தார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சர்வே நடந்ததால், சிவகுமார் எரிச்சல் அடைந்தார். 'என் வீட்டிலேயே ஒரு மணி நேரம் அமர்ந்துள்ளீர்கள். தினமும் எத்தனை வீடுகளில் சர்வே நடத்துவீர்கள்? உங்களின் கேள்விக்கு பதில் அளிக்க, எனக்கு பொறுமையில்லை' என, அதிருப்தி தெரிவித்தார். பின், அவர் அளித்த பேட்டி: ஆடு, கோழி வளர்ப்பது குறித்தும் கேள்வி எழுப்புகின்றனர். பொது மக்கள் எத்தனை தேவையோ, அத்தனை கேள்விகளுக்கு மட்டும் பதில் அளியுங்கள். பொறுமையுடன் பதில் அளித்தால், உங்களின் வருங்கால சந்ததியினருக்கு உதவியாக இருக்கும். கிராமத்தினர் சர்வே எளிமையாக இருந்திருக்க வேண்டும். நேற்று சர்வே பிரதியை பார்த்தேன். மிகவும் அதிகமான கேள்விகள் உள்ளன. எனவே குறைவான கேள்விகள் கேட்கும்படி, ஊழியர்களிடம் கூறினேன். இவ்வளவு கேள்விகளுக்கு பதில் அளிக்க, யாருக்கும் பொறுமை இருக்காது. கிராமத்தினருக்கு பொறுமை இருக்கலாம். ஆனால் நகரவாசிகளுக்கு இருக்காது. என்னிடம் கோழி வளர்க்கிறீர்களா என, கேட்கின்றனர். கோழி ஊரில் இருக்கிறது. பொது மக்கள் அனைவரும் சர்வே ஊழியர்களுக்கு பதில் தாருங்கள். ஆன்லைனிலும் தகவல் தெரிவிக்க அனுமதி உள்ளது. யாரையும் பலவந்தப்படுத்தி தகவல் பெறக்கூடாது என, ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி சர்வே நடத்தும்படி உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
திணறும் பணியாளர்கள்
ஜாதி வாரி சர்வேவுக்கு, கடும் நோயால் அவதிப்படும் ஊழியர்களையும் நியமித்து அதிகாரிகள் குளறுபடி செய்துள்ளனர். கெங்கேரி அரசு பள்ளியில், ஆசிரியராக பணியாற்றும் கோவிந்தய்யாவுக்கு, இதய அறுவைச்சிகிச்சை நடந்துள்ளது. தினமும் நிறைய மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறார். படிகளில் ஏறி, இறங்கக் கூடாது என, அவரை டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இவரை சர்வே பணிக்கு நியமித்துள்ளனர். இந்த பணியில் இருந்து, தனக்கு விலக்கு அளிக்கும்படி மன்றாடுகிறார். அதிக ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளவர்களும் சர்வே பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். வார்டு அலுவலகங்களில், சர்வேவுக்கு தேவையான பொருட்கள், சர்வே ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டது. ஸ்ரீராமபுரத்தின் தேவய்யா பூங்கா அருகில் உள்ள, பெங்களூரு மாநகராட்சி அலுவலகத்துக்கு சர்வே ஊழியர்கள் வந்தனர். ஆனால் அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. சாவி கிடைக்கவில்லை. சர்வே பணிகளுக்கு தாமதமானதால், பூட்டை உடைத்து, சர்வே ஊழியர்களுக்கு தேவையான பொருட்களை கொடுத்தனர்.