உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஊழலை கட்டுப்படுத்தாவிட்டால் புரட்சி வெடிக்கும் முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே எச்சரிக்கை

 ஊழலை கட்டுப்படுத்தாவிட்டால் புரட்சி வெடிக்கும் முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே எச்சரிக்கை

கோலார்: ''ஊழல் இப்படியே தொடர்ந்தால், நமது நாட்டிலும் நேபாளம் போன்று மக்கள் பொங்கி எழுவர். அப்போது உயிர்ச்சேதம், பொருட்சேதம் ஏற்படும்,'' என, ஓய்வு பெற்ற லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே எச்சரித்தார். கோலாரில் அவர் கூறியதாவது: நாட்டில் ஊழல் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இப்படியே தொடர்ந்தால்,நேபாளம் போல நமது நாட்டிலும் புரட்சி வெடிக்கும். ஊழலை ஒழிக்க மக்கள் பொங்கி எழுந்து போராடுவர். ஆனால் இதனால் ஏற்படும் பின் விளைவுகள், மிகவும் பயங்கரமாக இருக்கும். உயிர்ச்சேதம், பொருட்சேதம் ஏற்படும். லஞ்சம் வாங்குவதில், சில அதிகாரிகள் அதிநவீனமாகியுள்ளனர். ஒரு பதவியில் சேர, லஞ்சம் கொடுத்து வருகின்றனர். அந்த பணத்தை திரும்ப சம்பாதிக்கும் நோக்கில், லஞ்சம் வாங்குகின்றனர். இது குறித்து கேள்வி எழுப்பினால், 'நாங்கள் இந்த பதவிக்கு, இலவசமாக வரவில்லை,' என, பதில் அளிக்கின்றனர். இதற்கு சமுதாயமே காரணம். இப்போது அரசியல் என்பது, தொழிலாக மாறியுள்ளது. அரசியல் சாசனத்தில், அரசியல் என்பது சேவையாக கருதப்படுகிறது. 1970க்கு பின், அரசியல் திசை மாறிவிட்டது. எம்.எல்.ஏ.,க்களின் சொத்துகளை கவனித்தால், சராசரி 60 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது. வரும் நாட்களில் என்ன நடக்கும் என்பதை, நினைத்தாலே பயமாக உள்ளது. நியாயம் கிடைப்பது தாமதமானால், அதற்கு மதிப்பிருக்காது. இதற்கு நீதிபதிகளோ, வக்கீல்களோ காரணம் இல்லை. ஒவ்வொரு வழக்கும் நீதிமன்றத்தில் 15 ஆண்டுகள் நடப்பது சரியல்ல. டில்லி, கொல்கட்டா உட்பட வர்த்தக நகரங்களில் நிழலுலக தாதாக்கள், முக்கிய பங்கு வகிக்கின்றனர். எதிராளிகளுக்கு பணத்தாசை காட்டியோ, மிரட்டியோ வழக்கை விரைவில் முடித்து கொள்கின்றனர். இந்த நடைமுறை மாற வேண்டும். அரசு எதையும் சரியாக செய்வதில்லை. சட்டத்தால் என்ன செய்ய முடியும். ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத சூழ்நிலை உள்ளது. 7,000க்கும் அதிகமான அரசு பள்ளிகளை மூடும் அறிகுறிகள் தென்படுகிறது. மாநிலம் வளர்ச்சி அடைகிறது. ஆனால் அதில் தரம் இல்லை. பெங்களூரின் சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. கேள்வி எழுப்பினால் கமிஷன் விஷயத்தை முன் வைத்து பேசுகின்றனர். முந்தைய அரசால் பள்ளங்கள் ஏற்பட்டதாக குற்றம்சாட்டுகின்றனர். பிரச்னை மட்டும் தீரவில்லை. மக்களின் கஷ்டம் யாருக்கும் புரியவில்லை. நீதிமன்றத்தில் ஒவ்வொரு வழக்கிலும், தண்டனை கிடைக்க வேண்டுமானால், 25 ஆண்டு தேவைப்படுகிறது. அதற்குள் நீதிபதி மாறி விடுகிறார். என் பதவி காலத்தில் பதிவான வழக்குகள், இன்னும் முடியவில்லை. நான் இருந்த போது, வழக்குகளை முடிக்க அதிகம் முயற்சித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை