ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.59 லட்சம் பறித்த கும்பல்
ராய்ச்சூர்: 'ஆன்லைன் டிரேடிங்' பெயரில் 59 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்கள் மீது வழக்கு பதிவாகியுள்ளது. ராய்ச்சூர் நகரில் வசிப்பவர் சரணபசவா, 35. இவருக்கு ஆன்லைன் டிரேடிங்கில் ஆர்வம் இருந்தது. எதில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள, முகநுாலில் விவரிக்கப்பட்டதை பார்த்தார். அந்த லிங்கை கிளிக் செய்து பார்த்தார். அப்போது அவரது மொபைல் போனுக்கு, வாட்ஸாப் எண்ணில் இருந்து மெசேஜ் வந்தது. அதில் 'பேடிஎம் மணி' என்ற டிரேடிங் நிறுவனத்தில், பணம் முதலீடு செய்தால் அதிகமான லாபம் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது. இதை நம்பிய சரணபசவா முதலில் 500 ரூபாய் பரிமாற்றம் செய்தார். அதற்கு அதிகமான லாபம் கிடைத்ததால், முதலீட்டு தொகையை படிப்படியாக அதிகமாக்கினார். லாபம் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்த அவர், அதிக தொகையை முதலீடு செய்ய துவங்கினார். அவரை தொடர்பு கொண்டு பேசிய நபர்கள் கூறியபடி, பல்வேறு கணக்குகளுக்கு 59 லட்சம் ரூபாய் அனுப்பினார். ஆனால் லாபம் வரவில்லை; அசல் தொகையும் கிடைக்கவில்லை. அந்நபர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை. மொபைல் போன் 'சுவிட்ச்' ஆப் செய்யப்பட்டிருந்தது. தான் மோசம் போனதை உணர்ந்த சரண பசவா, நேற்று முன் தினம், ராய்ச்சூரின் சைபர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசாரும் விசாரணையை துவக்கினர். இது குறித்து உயர் அதிகாரிகள் கூறியதாவது: ராய்ச்சூரில் சைபர் குற்றங்கள் அதிகரிக்கின்றன. நன்கு படித்தவர்களே மோசடிக்கு ஆளாகி, பணத்தை இழக்கின்றனர். எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பயன் இல்லை. 2021ல் அர்ச்சகர் லட்சுமிகாந்த் என்பவர், ஆன்லை ன் டிரேடிங்கில் 58 லட்சம் ரூபாயை இழந்தார். இது குறித்து, விசாரணை நடத்தி, தமிழகத்தில் பதுருஸ்மான் என்பவரை போலீசார் கண்டுபிடித்தனர். ஆனால் அவர் போலீசாரிடம் சிக்குவதற்கு முன்பே இறந்துவிட்டார். சைபர் குற்றவாளிகள் பல்வேறு வழிகளில், பொது மக்களிடம் பணம் பறிக்கின்றனர். எனவே எச்சரிக்கையாக இருந்தால் நல்லது. இல்லாவிட்டால் பணத்தை இழக்க நேரிடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.