பருவமழையை எதிர்கொள்ள தயாராகுங்கள்!
பெங்களூரு: “பருவமழையை எதிர்கொள்ள தயாராகுங்கள்,” என, பெங்களூரில் பல்வேறு துறைகளின் அதிகாரிகளுக்கு, மாநகராட்சி நிர்வாக அதிகாரி துஷார் கிரிநாத் உத்தரவிட்டுள்ளார்.கடந்த 2020 முதல் ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழையின்போது, பெங்களூரு நகரம் கடும் பாதிப்பை எதிர்கொள்கிறது. அடுக்குமாடி குடியிருப்புகளையும், வில்லாக்களையும் வெள்ளம் சூழ்ந்து கொள்வது தொடர் கதையாக உள்ளது.இதற்கு மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே காரணம் என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது.இந்நிலையில் பருவமழை எதிர்கொள்ள தயாராகுவது பற்றி, பெங்களூரில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகளுடன், மாநகராட்சி நிர்வாக அதிகாரி துஷார் கிரிநாத் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். 209 இடங்கள்
அவர் பேசியதாவது:இம்முறை பருவமழை முன்கூட்டியே துவங்க வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. இதனால் இப்போது இருந்தே மழையை எதிர்கொள்ள தயாராகுங்கள். நகரில் 209 இடங்களில் வெள்ள பாதிப்பு பகுதி என்று கண்டறியப்பட்டு, 166 இடங்களில் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மீதமுள்ள 43 இடங்களிலும் எந்த பிரச்னையும் இல்லை என்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளை பார்வையிட வேண்டும் என்றும், பாதிக்கப்படும் பகுதிகளுக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். 'வாட்ஸாப்' குழு
மெட்ரோ, கே - ரைடு, கே.பி.டி.சி.எல்., உள்ளிட்ட துறைகளால், நகர் முழுவதும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பணிகளால் சாலைகளில் தண்ணீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாநகராட்சிக்கு உட்பட்ட 82 இடங்கள் தண்ணீர் தேங்கும் பகுதி என்று, போக்குவரத்து போலீஸ் துறை பட்டியல் கொடுத்துள்ளது. அந்த இடங்களில் இன்ஜினியர்கள் ஆய்வு செய்ய வேண்டும். நகரத்தில் மொத்தம் 20 தீயணைப்பு நிலையங்கள் மற்றும் ஒரு மாநில பேரிடர் மீட்பு குழு நிறுவனம் உள்ளது.மழைக்காலம் முடியும் வரை தீயணைப்பு நிலையங்களுடன், மாநகராட்சியின் மண்டல கமிஷனர்கள் தொடர்பில் இருக்க வேண்டும். எட்டு மண்டலங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்க வேண்டும்.'வாட்ஸாப்' குழுக்களை உருவாக்கி அதில் அனைத்து துறை அதிகாரிகள், ஊழியர்கள் மொபைல் நம்பரை இணைக்க வேண்டும். இதனால் மக்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண முடியும்.போக்குவரத்து துறை வழங்கிய பட்டியலில் நகரில் 647 சாலைப் பள்ளங்கள் இருப்பதாக கூறி இருந்தது. இதில் 323 பள்ளங்கள் மூடப்பட்டுள்ளன. மீதம் 239 பள்ளங்களும் விரைவில் மூடப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.இந்த ஆலோசனையில் மாநகராட்சி தலைமை கமிஷனர் மகேஸ்வர ராவ், சிறப்பு ஆணையர்கள் ஹரிஷ்குமார், அவினாஷ் மேனன், பிரீத்தி கெலாட், தீயணைப்பு துறை கூடுதல் டி.ஜி.பி., நஞ்சுண்டசாமி, போக்குவரத்து இணை போலீஸ் கமிஷனர் அனுசேத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.