உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  10 லட்சம் டன் மக்காச்சோளம் கொள்முதல் செய்ய அரசு முடிவு

 10 லட்சம் டன் மக்காச்சோளம் கொள்முதல் செய்ய அரசு முடிவு

பெங்களூரு: விவசாயிகளிடமிருந்து 10 லட்சம் டன் மக்காச்சோளம் கொள்முதல் செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. ஒரு குவிண்டால் மக்காச்சோளத்திற்கு 3,000 ரூபாய் ஆதார விலை வழங்க வேண்டும்; கொள்முதல் மையங்களை திறக்க வேண்டும் என்று, கர்நாடகாவின் வடமாவட்ட விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். இதுதொடர்பாக பெங்களூரு காவிரி இல்லத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன், முதல்வர் சித்தராமையா நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: நம் நாட்டில் மக்காச்சோளம் விளைச்சல் அதிகரித்துள்ளது. இது தெரிந்திருந்தும் 70 லட்சம் மெட்ரிக் டன் மக்காச்சோளம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு சுமையை ஏற்படுத்தி உள்ளது. மக்காச்சோளத்தை பயன்படுத்தி எத்னால் உற்பத்தி செய்யவும், மத்திய அரசு நிர்ணயித்த அளவும் மிக குறைவு. இதனால் எத்னால் ஆலைகளால் வாங்கப்படும், மக்காச்சோள அளவும் குறைவாக உள்ளது. இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு, தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு ஆகியவை மத்திய உணவு மற்றும் பொது விநியோக துறையின் வழிகாட்டுதல்படி மக்காச்சோளம் கொள்முதல் செயல்முறையை துவங்கவில்லை. இதுவே பிரச்னைக்கு காரணம். விலை வீழ்ச்சியால் சிரமங்களை எதிர்கொள்ளும், கர்நாடக மக்காச்சோள விவசாயிகளுக்கு, அரசு அனைத்து உதவிகளையும் செய்யும். மக்காச்சோளத்தை வாங்க, எத்னால் தயாரிக்கும் ஆலைகளுடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்த வேண்டும். கோழிப் பண்ணை தொழில் செய்வோரிடமும் பேச்சு நடத்துங்கள். இவ்வாறு அவர் பேசினார். இந்த ஆலோசனையின்போது, மக்காச்சோளம் இறக்குமதி செய்வதை நிறுத்தும்படி, மத்திய அரசுக்கு கடிதம் எழுத முடிவு எடுக்கப்பட்டது. மக்காச்சோள பிரச்னை தொடர்பாக, மைசூரில் சித்தராமையா அளித்த பேட்டி: கர்நாடக விவசாயிகளிடம் இருந்து 10 லட்சம் மெட்ரிக் டன், மக்காச்சோளம் வாங்க, கொள்முதல் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளிடம் கூறி உள்ளேன். விவசாயிகள் சந்திக்கும் பிரச்னை குறித்து, மத்திய அரசு கவனத்திற்கு கொண்டு செல்வோம். சமீபத்தில் பிரதமரை சந்தித்தபோது, மாநிலத்தில் மழையால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு நிவாரணம் கேட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை