முல்பாகலில் தொழிற்பேட்டை: ம.ஜ.த., - எம்.பி., உறுதி
கோலார் : “முல்பாகலில் தொழிற்பேட்டை ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்துவேன்,” என, கோலார் ம.ஜ.த., - எம்.பி., மல்லேஸ் பாபு தெரிவித்தார்.பா.ஜ., தேசிய கவுன்சில் உறுப்பினர் ரகுநாத் தலைமையில் முல்பாகல் பா.ஜ., குழுவினர், கோலாரில் ம.ஜ.த., - எம்.பி., மல்லேஸ்பாபுவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.இதற்கு முன்பு கோலார் மாவட்டத்தின் பிரதிநிதிகளாக இருந்த எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் முல்பாகல் தொகுதியில் தொழிற்சாலைகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இங்கு அமைய வேண்டிய தொழிற்பேட்டைகள் நரசாப்பூர், வேம்கல், ஹொசகோட் தாலுகாவுக்கு சென்றுவிட்டன.முல்பாகலில் தேவையான இடம் வசதி இருப்பதால் இங்கு தொழிற்பேட்டை ஏற்படுத்த வேண்டும். மத்திய அமைச்சர் குமாரசாமி வாயிலாக முல்பாகலில் ஒரு தொழிற்பேட்டையை ஏற்படுத்த பரிந்துரைக்க வேண்டுகிறோம்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.இதுகுறித்து, எம்.பி., மல்லேஸ்பாபு கூறுகையில், “மத்திய, மாநில அரசுகளுக்கு மீண்டும் ஒரு விரிவான அறிக்கையை சமர்ப்பித்து முல்பாகலில் தொழிற்பேட்டை ஏற்படுத்த செய்வேன். இதற்காக மத்திய அமைச்சர் குமாரசாமியிடம் தெரிவித்து, பிரதமர் மோடியை சந்திப்பேன்,” என உறுதி அளித்தார்.பா.ஜ., குழுவில், மாவட்ட துணைத் தலைவர் நங்கிலி கே.சதீஷ்குமார், சி.எம்.ஆர். ஸ்ரீநாத், பனகனஹள்ளி நட்ராஜ், மாவட்ட பொருளாளர் வக்கீல் ஜெயப்பா, முல்பாகலின் சங்கரப்பா, ஸ்ரீனிவாஸ் பாபு ஆகியோர் சென்றிருந்தனர்.