உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பா.ஜ.,வில் அடங்கியது கோஷ்டி பூசல்?  

பா.ஜ.,வில் அடங்கியது கோஷ்டி பூசல்?  

கர்நாடக பா.ஜ., தலைவராக இருப்பவர் விஜயேந்திரா. இவர், பதவி ஏற்றதில் இருந்து உட்கட்சி பூசல் ஏற்பட்டது. தங்களை விட வயதிலும், அனுபவத்தில் இளையவரான விஜயேந்திராவை தலைவராக ஏற்க மாட்டோம் என்று, மூத்த எம்.எல்.ஏ.,க்கள் பசனகவுடா பாட்டீல் எத்னால், ரமேஷ் ஜார்கிஹோளி பகிரங்கமாக அறிவித்தனர். இவர்கள் உருவாக்கிய அணியில் முன்னாள் எம்.பி.,க்கள் பிரதாப் சிம்ஹா, சித்தேஸ்வர், முன்னாள் அமைச்சர்கள் குமார் பங்காரப்பா, அரவிந்த் லிம்பாவளி, எம்.எல்.ஏ., ஹரிஷ் இணைந்தனர். காங்கிரசுடன் விஜயேந்திரா உள்ஒப்பந்த அரசியல் செய்கிறார் என்பது, எதிர் கோஷ்டியின் புகார்.

தனி ஆவர்த்தனம்

எப்படியாவது அவரை தலைவர் பதவியில் இருந்து இறக்கிவிட முயன்றனர். விஜயேந்திராவுக்கு எதிராக பகிரங்கமாகவே பேசினார் எத்னால். கட்சி சார்பில் நடக்கும் போராட்டங்களில் கலந்து கொள்ளாமல், தனி ஆவர்த்தனம் காட்டினார். இது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. எத்னால் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பா.ஜ., தலைவர்கள், தொண்டர்கள் மேலிடத்திற்கு கோரிக்கை வைத்தனர். முன்னாள் மத்திய அமைச்சர், ஹிந்துத்துவாவை தீவிரமாக கடைபிடிப்பவர் என்பதால் மேலிடம் தயக்கம் காட்டியது.

தலைவர் பதவி

ஆனால், அவரோ கட்சிக்கு பாதகம் ஏற்படுத்தும் வகையில் இஷ்டத்திற்கு பேசினார். இதனால் வேறு வழியின்றி எத்னாலை, ஆறு ஆண்டுகள் கட்சியில் இருந்து நீக்கியது பா.ஜ., மேலிடம். அதற்கு பின்னும் அவர் நிறுத்தவில்லை. விஜயேந்திராவை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். ஆனால் அவரது அணியில் இருப்பவர்கள், எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கின்றனர். எத்னால் தனி கட்சி ஆரம்பித்தால், அவருடன் செல்ல மாட்டோம் என்று கூறினார் குமார் பங்காரப்பா. எத்னாலுடன் இருந்தவர்கள், அவருடன் இடைவெளி கடைப்பிடிக்க ஆரம்பித்து உள்ளனர். விஜயேந்திராவை பற்றி யாரும் பேசுவது இல்லை. இதன்மூலம் கோஷ்டி பூசலுக்கு ஓரளவு முடிவு கிடைத்து உள்ளது.தற்போதைய சூழ்நிலையில் எத்னால் தனித்து விடப்பட்டு உள்ளார். இது விஜயேந்திராவுக்கு உற்சாகம் தந்து உள்ளது. மாநில தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று, பா.ஜ.,வில் இருந்த போது எத்னால் குரல் கொடுத்து வந்தார்.

இழுக்க முயற்சி

தற்போது அவரே கட்சியில் இல்லை. தலைவர் பதவிக்கு தேர்தல் வேண்டும் என்று யாரும் கேட்கவும் இல்லை.விஜயேந்திராவையே தலைவராக நீட்டிக்கவும் மேலிடம் ஆசைப்படுகிறது. இதனால் அவரது பதவிக்கு இப்போதைக்கு எந்த ஆபத்தும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உற்சாகத்தில் இருந்த விஜயேந்திரா, காங்கிரஸ் அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்நின்று நடத்தி வருகிறார். இது ஒரு புறம் இருக்க தனக்கு எதிராக யார் எல்லாம் உள்ளனரோ, அவர்களை தனது பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அவரது முதல் வலை பிரதாப் சிம்ஹாவுக்கு தான் உள்ளது. எத்னால் அணியில் இருந்த பிரதாப் சிம்ஹா, மைசூரில் தங்கள் கட்சி தொண்டர்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால், விஜயேந்திராவுடன் கைகோர்த்து செயல்படுகிறார். அவரிடம் நைசாக பேசி தங்கள் பக்கம் இழுக்க, விஜயேந்திரா தரப்பு முயற்சித்து வருகிறது.வரும் நாட்களில் எத்னாலுடன் இருந்தவர்கள், இந்த பக்கம் தாவினாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி