உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெங்களூரு மாநகராட்சி நடப்பாண்டில் தேர்தல் நடப்பது சந்தேகம்

பெங்களூரு மாநகராட்சி நடப்பாண்டில் தேர்தல் நடப்பது சந்தேகம்

- நமது நிருபர் - பெங்களூரு நகர எம்.எல்.ஏ.,க்களின் நெருக்கடிக்கு பணிந்து, ஆறு ஆண்டுகளாக மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தாத அரசு, நடப்பாண்டு இறுதியில் தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளது. ஆனாலும், தேர்தல் நடப்பது சந்தேகம் என, அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். பெங்களூரு மாநகராட்சியில், மக்கள் பிரதிநிதிகளின் பதவி காலம் 2019 செப்டம்பர் 10ம் தேதி முடிவடைந்தது. ஆறு ஆண்டுகளாக தேர்தல் நடக்கவில்லை. மாநில அரசு கொரோனாவை காரணம் காட்டி, தேர்தலை தள்ளி வைத்தது. நிர்வாக அதிகாரியை நியமித்தது. தேர்தல் நடத்துவதில் தாமதம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் கவுன்சிலர் சிவராஜ் உட்பட சிலர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். நீதிமன்றமும், பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தும்படி மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இதற்காக ஆறு வாரங்கள் கால அவகாசம் அளித்தது. ஆனால் வார்டுகள் மறு சீராய்வு, மாநகராட்சியை பிரிக்க வேண்டும். அதன்பின் தேர்தல் நடத்த வேண்டும். இதற்கு கால அவகாசம் அளிக்கும்படி, உச்சநீதிமன்றத்தில், கர்நாடக அரசு மனு தாக்கல் செய்தது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நிறுத்தி வைத்தது. மாநகராட்சி தேர்தல் நடத்த கால அவகாசம் அளித்தது. பெங்களூரு மாநகராட்சியை பிரிப்பதற்காக, கர்நாடக முனிசிபல் திருத்த சட்டம் - 2020ஐ அரசு கொண்டு வந்தது. அதன்பின் மாநகராட்சி வார்டுகள் எண்ணிக்கை, 198லிருந்து 248 ஆக அதிகரித்தது. ஐந்து மாநகராட்சிகளாக பிரித்து, ஜூலை 19ல் உத்தரவிட்டது. இது குறித்து, பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவிக்க, ஆகஸ்ட் 18 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு மாநகராட்சி தேர்தல் தொடர்பாக, முன்னாள் கவுன்சிலர்கள் தாக்கல் செய்திருந்த மேல்முறையீடு மனு, நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல் முகுல் ரோத்தகி, 'பெங்களூரு மாநகராட்சிக்கு, 2015ல் தேர்தல் நடந்தது. அதன்பின் பல காரணங்களை கூறி, தேர்தலை தள்ளி வைக்கின்றனர்' என வாதிட்டார். அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் சிங்வி, 'தேர்தல் தாமதமாகிறது. இதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் பெங்களூரு மாநகராட்சி ஐந்தாக பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆட்சேபனை தெரிவிக்க, ஆகஸ்ட் 18 வரை, கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் தெரிவிக்கும் கருத்துகளை கேட்டறிந்த பின், அரசு முடிவு செய்ய வேண்டும். 'ஐந்து மாநகராட்சிகளுக்கு புதிய வார்டுகள் அமைக்க வேண்டும். இதற்கும் மக்களிடம் கருத்து கேட்க வேண்டும். இவை அனைத்தும் நவம்பர் இறுதியில் முடியும். டிசம்பர் இறுதியில் மாநகராட்சிக்கு தேர்தல் நடத்த அரசு தயாராக உள்ளது' என வாதிட்டார். இதையடுத்து, உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 4ம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்தது. டிசம்பரில் தேர்தல் நடத்துவதாக, அரசு கூறினாலும் தேர்தல் நடத்துவது சந்தேகம். தேர்தலை நடத்தும்படி முன்னாள் கவுன்சிலர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால் இதற்கு பெங்களூரின் எம்.எல்.ஏ.,க்கள் முட்டுக்கட்டை போடுகின்றனர். இவர்களின் நெருக்கடிக்கு பணிந்து ஆறு ஆண்டுகளாக, தேர்தலை அரசு தள்ளி வைத்தது. தற்போதைக்கு தேர்தல் நடத்துவதில், எம்.எல்.ஏ.,க்களுக்கு உடன்பாடு இல்லை. தேர்தலுக்கு தயாராக கால அவகாசம் வேண்டும் என, கூறி தேர்தலை மேலும் ஓராண்டுக்கு தள்ளி வைக்க முயற்சிப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. இது முன்னாள் கவுன்சிலர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சியில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல், ஆறு ஆண்டுகள் கடந்துள்ளது. அதிகாரிகளின் தர்பார் நடக்கிறது. பிரச்னைக்கு தீர்வு காண முடியாமல், மக்கள் அவதிப்படுகின்றனர். சாலை பள்ளங்கள், குப்பை பிரச்னை என, பல பிரச்னைகளுக்கு அதிகாரிகள் தீர்வு காணவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை